தமிழன்னையே தரம் உயர்த்த வா

எமைஈன்ற நாள்முதலே துணைநின்ற தமிழே
எண்ணிலடங்கா அன்னிய மொழிகளுக்கு எழுத்தாணி கொடுத்த தாயே...!

வள்ளுவன் வடித்த எழுத்தோலையே
வாகைசூடி இப்பேருலகை வலம்வரும் குமரித் தாயே...!

கற்றுத் தெளிந்த காப்பிய நாயகியே
கணக்கிலடங்கா காவியங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டவளே...!

நாவினில் நல்லுறவாடும் நற்கனியே
நாளும் திகட்டாத நாடுபோற்றும் நற்றமிழே...!

கொடிமுல்லை இடையமர்ந்து விடிவெள்ளி மடியமர்ந்து
நொடிமுள்ளை கடைமுனையில் படியளந்த காரிகையே...!

செம்மொழி நீமொழிய வெண்தாமரை விரிந்திடுமே
பண்மொழிக்கு பாதைகாட்டிய அருந்தமிழ் நறுமுகையே...!

இடுபொருள் உரமேற இயன்றவரை இசைந்திடுவாய்
மடுதிரண்ட வெள்ளமாய் மனம்மயக்க அசைந்திடுவாய்...

என்னவானது உனக்கு..?
எங்கு சென்றாய் இப்போது..?

கொங்குதமிழ் கொஞ்சிவிளையாடிய கோவை மாநகரில் இன்று
மங்கிப் போய்கொண்டிருக்கும் உன் மழலைமொழியைக் கேளாயோ...?

முண்டாசுகாரனின் முத்தான வித்துக்களெல்லாம் பயனற்றதாய் எண்ணி பாடசாலையிலேயே புதைந்துபோக
கண்டாலே கசந்துகோண்டு முகம்சுழிக்கும் முடர்களுக்காய் அவன்வரிகள் மண்டியிடாது மடிவதனைக் காணாயோ...?

தென்துருவம் படைகொண்ட பேரரசர்களெல்லாம் விடைபெற்றுப் போனதினால்
உனதுருவம் கலைத்து உடைவாள்தொலைத்து உறங்கிப் போனாயோ...?

நிழலாடிய பயிர்களெல்லாம் விளையாமல் போனதினால்
உழவோடிய நிலங்களெல்லாம் விலையாகிப் போகின்றதே...!

சமத்துவம் பேசிப்பேசியே தனித்துவம் இழந்தது போதும்
மகத்துவம் மக்கிப்போய் இன்று மண்ணாய்போனதும் போதும்...

இந்தியத் தாயின் இளையமகளாய் பிறந்ததைமறந்து நீயும் வருவாயானால்
சிந்திய குருதியில் வடித்த வரிகளை நாளைய தலைமுறைக்காய் கலைத்தெரிந்து நானும்வருவேன்...

முத்தமிழ் சங்கத்தினில் மூடிவைத்த முட்டைகளை உயிர்பிக்க நீயும் வரவில்லையானால்
முக்கடல் சங்கமத்தில் மூழ்கியே மடிந்துவிடும் மூதாதையர் காத்துவந்த செம்மொழியாம் நம்மொழி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (20-Jul-17, 9:02 pm)
பார்வை : 267

மேலே