தந்தையானேன்

பூங்காற்றை யார் என் கையில் தந்தோ
விண்ணிலிருந்து தேவதை இறங்கி வந்ததோ

மடி தந்து ரத்தம் சதை தந்தது அன்னை தானே
செடி உருக் கொண்ட விதை தந்தை தானே

உன்னை கண்கண்ட முதல் நிமிடம்
முள்ளென்ற நான் முதல்முறை பூவானேன்
உன்னை கையில்கொண்ட முதல் தருணம்
என் ஆண்மை பூப்பெய்து நான் தந்தையானேன்

என் ஆண்மைக்குள் பெண்மையின் மென்மை சேர்த்து சென்றது
உன் பிஞ்சு விரல்கள்
என் கண்ணுக்குள் வந்து ஒட்டிக்கொண்டது
பூவிதழின் சின்ன புன்னைகைகள்

நீ என் தோள் சேரும்போது
தந்தையின் பொறுப்புகள் கற்று தந்தாய்
நீ என் மடிசாயும்போது
தாய்மையின் சுகங்கள் உணர செய்தாய்

உன்னை தூங்கவைக்கும்போது
தாய்ப்பால் சுரக்காத தாயாகி தாலாட்டுகிறேன் தானே
உன்னை சிரிக்க வைக்கும்போது
வேடம் கொள்ளாத கோமாளியாய் மாறுகிறேன் நானே

உன்னோடு கதைகள் பேசும்போது
நிஜம் துறந்து குழந்தையாகிறேன் கண்ணே
உன்னோடு விளையாடும்போது
என்னை மறந்து மீண்டும் சிறுவனாகிறேன் பெண்ணே

காற்றில் கலந்த அன்னையை இதுவரை நிலவில் தேடினேன்
இன்று என் அன்னையை உன்னில் தானே காண்கிறேன்

முதுமையின் நரைகளோடு ஒருநாள் உன் மடிசாய்வேன்
அன்னைமடியின் சுகத்தோடு அந்நாள் நான் இறப்பேன்
நீ சிந்தும் விழிநீர் தாங்காது
என் உயிர்மூச்சை அதில் கலப்பேன்
அது காய்ந்து போகும் நேரம்
உன் கருவறையின் ஓரம் கரை சேர்வேன்

காலம் முழுக்க உன் மடியில் தவழும்
உயிராகும் வரம் வேண்டி நானும் நிற்பேன்

யாழினி வளன்...

எழுதியவர் : யாழினி valan (22-Jul-17, 2:27 am)
பார்வை : 223

மேலே