DMI கட்டிடமே - உனக்காய் என் வரிகள்

நான் தலைநிமிர்ந்து
பார்த்த கட்டிடம்
எந்தன் கண்முன்னே
தலை இடிந்து வீழுகிறது இன்று...

அழகிய கதைகள்
அகம் சுமந்த உனக்கு
அழிவு காலத்தை
யார் அவசரகதியில் நிர்ணயித்தது...

ஆயிரக்கணக்கான கல்விமான்களை
வளர்தெடுத்த கருவறை உன்னை
வயோதிபம் கண்டதாயெண்ணி
நிரந்திர விடுதலை தந்தது ஏனின்று...

சொல்லுமளவு சொகுசுகளை
நீ அள்ளித்தராவிடினும்
சுகமான நினைவுகளை
செதுக்கிவிட்டாய் மனதுள்...

பாரமான நெஞ்சோடு நான்
பழங்கணக்கு பார்க்கிறேன்...
பாசி படர்ந்த உன் சுவர்களும்
நாசி கவரும் மணம் தந்தன...

வைதாலும் உன்னை
வாரயிறுதி விடுமுறையெல்லாம்
வேறு போக்கிடமில்லை
உன்னைவிட்டால் நமக்கு...

உன்னை தரைமட்டமாக்கி
தரையோடு சமாதியாக்கிட
திரண்டொரு கூட்டம்
திட்டங்கள் வகுப்பதாய்...

வட்டாரமெங்கும் சேதி பரவ
விரண்டு போனதென் மனம்..
விழுங்கிக்கொள்ள முடியா வலியில்
வறண்டு போனதென் விழிகள்...

உன்னைத் தாங்கி நின்ற தூண்கள்
சீட்டுக்கட்டு மாளிகையாய்
ஒன்றன்பின் ஒன்றாக மண்ணில்
தேம்பி விழுந்த காட்சியில்...

தேகமெல்லாம் சிலிர்த்தது...
தேயும் உன் உயிர்த்தீபம் காண
தேங்கி நின்ற விழிநீர்
தேற்றுவாரின்றி மடை திறந்தது...

ஒரு கல்விக்கூடம் களைந்து
கொடிகட்டிப் பறக்கும் ஒரு வியாபாரம்
உருவாக்கம் பெற வேண்டிய
இறைவனின் பிரகடனத்தை...

கவலையாய் மனதில் அடுக்கி
மௌனமாய் ஆமோதிப்பினும்
பொங்கி வரும் சோகத்தை
என் வரிகளில் வடிக்கிறேன்...

உணர்வுகளை உரசியும் அறியாத
இயந்திர மிருகமொன்று உன்னை
துகல்களாய் நொறுக்கிப்போட
துடித்துப்போனேன் உள்ளுக்குள்...

வேடிக்கை பார்ப்பதையன்றி
வேறு என்னதான் செய்ய இயலும்...
வேரோடு நீ பூமிக்குள் போக
விலைபோனது உன் நிலம் மட்டுமே...

ஜனரஞ்சக இடத்தில் நீ
ஜனனம் கொண்டதுன் பிழை...
ஜீவித்திருக்க பலமிருந்தும் - உன்னை
பாதியில் அழிப்பது யார் பிழை?..

கம்பீரம் கொண்ட
உன் மேனி உடைந்து விழ
போர் முடிந்த களத்தில் பிணங்களாய்
உன்னோடான நாட்கள்...

பார்வைக்கு பரிதாபமாய்
நீ தோற்றம் தந்தாலுமே
நினைத்து மகிழும் நட்பின் தூண்கள்
சந்தி சந்தியாய் உனக்குள்...

இன்பம் புதைத்து வைத்திருந்த
புதுமையான கட்டிடம் நீ..
காலத்தால் அழிக்கப்படவேண்டிய
பாவ வரலாறல்ல உனக்கு...

போற்றிப் பெருமை பாட வேண்டிய
பேறு கொண்ட சரித்திரம் நீ...
புலம்புகிறேன் தனியே நான்
உன் பிரிவின் வேதனை தாங்காமலே...

செவிகளுக்குள் சம்மட்டியொலியாய்
நீ கதறும் சத்தம் கேட்டிட
செவிடுபோல் நானிருக்க - நீ
சேர்த்த ஞாபகம் விடவில்லை...

தவணை முறையில் உன்னுயிர்
தினம் இயந்திர பழியாவது கண்டு
குருடாய் இருந்திட
நீ கொடுத்த சந்தோசம் விடவில்லை...

போகவரயிருக்கும் நேரங்களில்
சிதைந்துபோன உன் தோற்றம் காண
ஜீரணித்துக்கொள்ள இயலாமல்
நீவிக்கொள்கிறேன் நெஞ்சத்தை...

வான் மறைத்து நின்ற
நான் நேசித்த உன் இடம்
வெட்டவெளியாய் மாறுவதை
வெறுப்போடு பார்க்கிறேன் இன்று...

நெடுங்காலம் ஜீவிக்கவேண்டிய நீ
அகால மரணம் கொள்கையில்
அகம் நிறைக்கும் வேதனை சொல்ல
அகராதியிலும் மொழி கிடைக்கவில்லை...

நிகராக்க என் சோகத்தை
உவமையில்லை உலகில்...
உருகிக் கரைந்துகொண்டே
கண்ணீர் மறைத்த விழிகளை...

விரல்களால் சுண்டிவிட்டு
கவி வரைகிறேன் நான்
DMI நாமத்தைப் பாதிவழியிலே
தவறவிட்டுப் போகும் உனக்காய்...

கட்டிடம் என்பதைக் காட்டிலும்
கல்வியின் கருவறையையும்
நட்பின் கருவையும்
கட்டி வைத்திருக்கும் இடம் நீ...

நீ விதைத்த கல்வியின் வடிவும்
நீ தந்த சுற்றத்தின் நிறமும்
வானவில்லாக்கும் நம் வாழ்வை...
வாழட்டும் உன் வரலாறென்றும்...

வேரோடு நீ சாய்ந்தாலும்
நம் வேர்களை தாங்குமிடம் நீ...
திக்கித்திக்கி என் வரிகளை
உனக்காய் சமர்பிக்கிறேன் இன்று!..
----------------------------------------------
பெப்ரவரி - 2017

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:55 pm)
பார்வை : 32

மேலே