காத்திருந்த நேரம்
கண்ணன் நீ வரவே
கன்னி நான் காத்திருக்க
பார்த்திருக்கும் என் விழிகள்
பாதை வழி பூத்திருக்க...
வாசற் படிகளில் சாய்ந்தே
வேரோடிப் போய்விட்டேன் நான்...
வாராமல் உயிர்க் குடிப்பதேன்
வஞ்சி மனதை வதைப்பதேன்...
நேற்றே நீ வருவாயென்ற
வாக்கில் மாற்றம் செய்து
தாமதிக்கிறாய் தலைவனே...
தனிமை கொல்கிறது இதயமே...
காற்றோடு வரும் பாட்டெல்லாம்
பாவைக் கதை சொல்கிறதே...
காத்திருக்கும் நேரத்திலவையே
ஆறுதல் தந்து செல்கிறதே...
வேற்றுக் கிரகம் சென்றாயோ
வராத காரணம் சொல்வாயோ
நான் பார்த்திருந்து பார்த்திருந்து
நரை மட்டும் காண்கிறேனோ...
ஞாயிறும் திங்களும் இங்கே
வேறுபாடின்றி மறைகிறதே...
காலநேரம் மறந்துனக்கான
காத்திருப்பு மட்டும் நீள்கிறதே!..