இக்கால இளைஞர் சமுதாயம்

இன்றைய காலகட்ட கல்வித் திட்டத்தில் தொடக்கநிலை தொடங்கி நீதிபோதனை போன்ற கதை சொல்லல் வகுப்புகள் காணாமல் ஆகிவிட்டன. கலை இலக்கிய மன்றங்கள், அறிவியல் கழகங்கள், நூலக வாசிப்பு எல்லாம் பள்ளிகளின் நிகழ்ச்சி நிரலில் இருந்த காலம் மாறிவிட்டது. மின்னனு ஊடகங்களின் ஆதிக்கம் குழந்தைகள் மனதில் கிண்டலை, கேலியை, வன்முறையை, மிக யதார்த்தமாக விதைக்கின்றன.

வீட்டிலும், பள்ளியிலும் போதிய அக்கறை காட்டப்படும் பிள்ளைகள் கரை சேர்கிறார்கள். எஞ்சியோர் தவறான பாதையில் செல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சமூக குற்றங்கள் பெருகுவதற்கு வாய்ப்பாக அமைகின்றன. மனிதப் பண்பியலை வளர்க்கும் நோக்கில் கல்வித்திட்டம் அமையவேண்டும்.

முற்கால சினிமாக்களில் பார்த்தால் சாதாரணமாக வில்லனுக்கும், கதாநாயகனுக்கும் சண்டை வந்தால் பார்க்க இயற்கையாகவும், சிறிது நேரமும் இருக்கும். இன்றைய சினிமாவிலோ மிக நோஞ்சானான கதாநாயகன் கூட பத்துப் பேரை புரட்டிப் புரட்டி அடிப்பான், இவனுக்கு ஒரு சிராய்ப்பு கூட இருக்காது. இவன் உடம்பு என்ன இரும்பால் செய்ததா? ஒரு திரைப்படத்தில் வலுவாக இருக்கும் வில்லன் நடிகரை சிறையில் வைத்து அடித்து கம்பியில் மேலே தொங்கவிட்டு, ஒரு மெலிந்த உருவமைப்பு உள்ள கதாநாயகன் காலைப் பிடித்துக் கிழித்துத் தொங்க விடுகிறான்.

இன்று சமுதாயத்திலும் ஒவ்வொரு ஊரிலும் இளம் வயது வாலிபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர்களாக வந்து எதிரியை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டிக் கொல்வதாக செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கிறோம்.

எல்லா சினிமாக்களிலும் கதாநாயகனும், அவன் நண்பர்களும் மது அருந்துவது போலவும், பெண்களை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் நிஜம் என்று நம்பி, இன்றைய மாணவர்களும் படிப்பில் அக்கறையின்றி போதைக்கு அடிமையாகவும், சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடுகிறார்கள்.

செய்தி: திருமண வீட்டில் பெண் ஒருவரை கேலி செய்தது தொடர்பாக கோஷ்டி மோதலில் 8 பேர் கைது, அதில் 6 பேர் 18 முதல் 25 வயது வரை.

செய்தி: காவலர்களை கண்டதும் காரில் தப்பியோட முயற்சித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு. 18 முதல் 23 வயது வரை உள்ள வாலிபர்கள் அனைவரும் போதையிலிருந்தனர்.

இத்தகைய வன்முறையிலும், குடி போதையிலும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களிலும் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த வயதுள்ள இளைஞர்களே ஆகும்.

இத்தகைய போக்கிற்கு என்ன காரணம்? மதமா, சாதியா, கல்வியறிவும், ஒழுக்கமும், நீதிபோதனைகளும் போதிக்கப் படாத கல்விக் கொள்கைகளா?

அரசுத்துறையைச் சேர்ந்தவர்களோ, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிறுவனங்களோ மாதிரிப்படிவம் (Proforma) தயார் செய்து, குறிப்பெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அதன் முடிவுப்படி, தவறு செய்ய வாய்ப்புள்ள மாணவ மற்றும் இளம் சமுதாயத்தினரை தகுந்த முறையில் கண்காணித்து, நல் ஒழுக்கப் பயிற்சி தர வேண்டும். தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனைகளும், சீர்திருத்த வழிகாட்டுதல்களும் வழங்க வேண்டும்.

எழுத்து தளத்தில் 02.02.2012 தேதியில் வெளியான திரு.காளியப்பன் எசேக்கியல் அவர்களின் ’நல்லொழுக்கம் – ஆன்மீகம் - நாட்டொழுக்கம்..!’ என்ற கவிதையிலிருந்து ஒரு அருமையான இருவிகற்ப நேரிசை வெண்பா:

ஆன்ற குடிப்பெருமை, ஆகிவரும் நல்லொழுக்கம்
தோன்றப் படிப்பறிவு தூண்டுமேல் - சான்றோரே
எங்கும் இருப்பர்! இருக்காதே கையூட்டும்!
தங்குமே நேர்மை தழைத்து!

பொருளுரை: ஒருவனுக்கு தான் கற்ற கல்வியானது பிறப்பினாலே வரும் குடிப்பெருமையையும், பழக்கத்தால் வரக்கூடிய சிறந்த ஒழுக்கத்தையும் தூண்டும்படி அமைந்தால் எங்கு நோக்கினும் கல்வி, கேள்வி, நடத்தையால் சிறந்த சான்றோரே காணப்படுவார்கள். அவ்வாறான சமுதாயத்தில் இலஞ்சம் இருக்காது. நேர்மை செழித்துத் தங்கியிருக்கக் காண்போம் என்று திரு.காளியப்பன் எசேக்கியல் அவர்கள் தெரிவிக்கிறார்.

சூன், 2012 தேதியிட்ட ’செந்தமிழ்’ திங்கள் இதழில் கவிவேந்தர் கா.வேழவேந்தன் எழுதிய ’இளைஞர்களே விழிமின்’ என்ற கவிதை படிக்கப் படிக்க மிக்க இனிமையானது. இளைஞர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று கவனியுங்கள்.

எண்சீர் விருத்தம்

இளைஞர்களே! இளைஞர்களே! நாளை ஏட்டை
..எழுதவந்த ’கனவு’களே! குலுங்கப் போகும்
விளைச்சலுக்கே ’நாற்றங்கால்’ நீங்கள்! நல்ல
..விஞ்ஞான விடியலுக்கே ’வெள்ளி’ நீங்கள்!
களைபோன்றே கிளைத்திருக்கும் சாதி பேதக்
..கசடுகளை எரிக்கவந்த ’பிழம்’பே நீங்கள்!
தளையறுத்துக் கிளம்புங்கள்! புதுமை பூத்த
..சமத்துவச்சீர்ச் சமுதாயம் படைத்தி டுங்கள்! (’செந்தமிழ்’ திங்கள் இதழ் சூன், 2012)

இளைஞர்களே!
’நாளை ஏட்டை எழுத வந்த கனவுகள் நீங்கள், கனவுகளை நனவாக்குங்கள்.
நல்ல சமுதாயம் விளங்க, இன்றைய நாற்றங்காலாய் இருங்கள்.
கல்வியில் உயர்ந்து விஞ்ஞான விடியலுக்கு வெள்ளியாக இருங்கள்.
சாதி பேதக் கசடுகளை எரித்து, நல்ல குடிமக்களாய் இருங்கள்.
புதுமை பூத்த சமத்துவச் சீர் சமுதாயம் படைத்திடுங்கள்!’

கட்டுரையாளர்:
டாக்டர்.வ.க.கன்னியப்பன்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-17, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 945

மேலே