நான் இந்தியன் என்று சொல்பவன் உளமாற சொல்கின்றானா

நான் இந்தியன் என்று சொல்பவன் உளமாற சொல்கின்றானா?

எம் தாய்த்தமிழ் பேசும் மக்களுக்கு உளம் ஆழ்ந்த, தலை தாழ்ந்த வணக்கங்கள். தமிழின் மொழி, இனம், நிலம், கலை, பண்பாடு மற்றும் வரலாறு என்று அத்தனையையும் போற்றும் எண்ணம், சிந்தையில் கொண்ட நான் உங்கள் சுடலைமணி.

இந்திய ஒன்றியத்தில் பல மாநிலங்கள், பல வேறுபட்ட பண்பாடுகள், பல வேறுபட்ட உடுப்பு உடுத்தல், உணவு வகைகள், பழக்க வழக்கங்கள் என்று பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியன் என்று சொல்கையில் ஒற்றுமை தானாகவே வந்து விடுகின்றது.இது பெருமைதான்.

இதில் ஒரு சிலர் நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பெரும்பாலும் நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்பவர்கள், வெறும் வெற்றுச் சொற்களால் வெளியே பேசிக்கொண்டு உள்ளூர... மராத்தியனா அவன் திமிர் பிடித்தவன், வங்காளியோ அவன் கொழுப்பு பிடித்தவன், ஓடியனா அவன் விளங்காதவன், மலையாளிகளா அவர்கள் சுயநலவாதிகள் என்று பிற மாநிலத்தவர்களைப் பற்றி தேவையில்லாமல் தவறாக பேசிக்கொண்டு கடைசியில் நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கின்றேன் என்று முடிப்பர்.

அதாவது நான் சொல்வது, ஒரு இனத்தவன் இன்னொரு இனத்தவனை தரம் தாழ்ந்து பேசுகின்றார்கள். பின்னர் நிலை மாறி நான் இந்தியன் என்கிறார்கள்.

அதாவது அந்த பிழைப்பிற்கு, ஏன்... நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கின்றேன் என்று பேசித் திரியவேண்டும் என்பது என் கேள்வி.

நான் தமிழன் என்பான் - தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு என்று திசை வைத்து பிரித்துக்கொள்வர். சாதி வைத்து பிரித்துக்கொள்வர். கடைசியில் தமிழன் என்பர்.

நான் தெலுங்கன் என்பான் - சிறு பொறி காட்டுத்தீயாக மாறுவது போல், பிரிந்த மக்கள் கூட்டம் சிதறி தெலுங்கானாவாகவும் ஆந்திரப்பிரதேசம் என்றும் பிரித்துக்கொண்டு மாறி மாறி திட்டி கொண்டு இருக்கின்றார்கள்.

நான் கன்னடன் என்பான் - தெற்கு மற்றும் வடக்கு என்று பிரித்து கொண்டு, குடகு பகுதியும் பிரித்து மேலும் சாதிகளாய் பிரிந்து கிடக்கின்றனர்.

நான் பீகாரி என்பான் - அரசியலால், சாதிகளால் மற்றும் பகுதிகளால் பலவாறு பிரிந்து கிடக்கின்றார்கள்.

நான் இதற்காகவே தான் இந்தியன் என்பதில் பெருமை கொள்வதில்லை. முதலில் நான் தமிழன். பிறகு இந்திய ஒன்றியத்தின் குடிமகன்.

கடைசியாக இந்தியன் என்று பெருமைப்படுவது என்பது எனது மொழி, இனம், நிலம், கலை, பண்பாடு மற்றும் வரலாறு மேலும் எனது உரிமை என்று எல்லாமே நேர் கோட்டில் எனக்காக, என்னோடு எந்த ஒரு இறையாண்மை இழுக்காகவும் இல்லாமல், எல்லாம் நிறைவாக பெற்று நிம்மதியாக நான்... என் இன மக்களோடு வாழும் பொது வெளிப்படும்.
மேலும் சில நிகழ்வுகளை இங்கு கூற விரும்புகின்றேன்.

வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களோடு நண்பர்களாய் பேசி பழகும் வாய்ப்பு கிடைக்கின்றது.அப்படி பேசுகையில் இதே கருத்தை - அதாவது நான் இந்தியன் என்பதில் பெருமைகொள்ளவில்லை, நான் இந்தியன் அல்ல, (நான் இந்தியனாய், இந்தியா மீது எவ்வளவு பற்றாக, நூறு இராணுவ வீரனின் மனநிலையில்… ஒரு காலத்தில் இருந்தேன் என்பதை சில தோழர்கள் அறிவர்.) மேலும் நான் முதலில் தமிழன், பின்னர் நான் மேற்சொன்ன கருத்தின் படி, எல்லா உரிமைகள் சரியாக கிடைக்கும் போது ஒன்றிணைந்த இந்தியனாய் சொல்லிக் கொள்வேன். உரிமைகள் பறிபோகும் போது எதற்காக இந்தியன் என்ற போர்வை.... இந்தியா என்பது பல நாடுகளின் குழுமம், பல பண்பாடுகள், இனங்கள் மற்றும் குழுமங்களின் கூட்டு. அப்படியிருக்க அடுத்த இனத்தவனை மதிக்காது எப்படி இந்தியன் ஆவான். நான் இந்தியன் என்று சொல்ல மாட்டேன் என்று பேசி முடிப்பதற்குள் மற்ற மாநில நண்பர்கள், அப்படி என்றால் நீங்கள் உங்கள் கடவு சீட்டு மற்றும் வாக்காளர் அட்டை என்று எங்கெல்லாம் இந்தியன் என்று உள்ளதோ அதையெல்லாம் திருப்பி இந்தியா அரசாங்கத்திடமே தந்து விட வேண்டியது தானே என்று கோவத்துடனே கேட்டார்கள்.

நான் சொன்னேன், தமிழர்களுக்கு தமிழ் நாட்டையும், மராத்தியர்களுக்கு மகாராஷ்டிராவையும் மற்றும் வங்கத்தை வங்காளியர்களுக்கும் தனியாக தனி நாடாக பிரித்து தந்துவிட நீ சரி என்கின்றாயா என்றேன். அதெப்படி முடியாது வேண்டுமென்றால் நீங்கள் வேறு நாட்டுக்கு போகலாமே என்றான் அந்த நண்பன்.

எனக்கு வந்த சினம், அடக்கமுடியாமல் தான் இருந்தது... வெள்ளையன் நம்மள ஆட்சி செய்யும் முன்னும், செய்யும் போதும் நாம இந்தியன் இல்ல, நம்ம நாடும் இந்தியா இல்ல. அப்படியிருக்க ஒன்றிணைந்த இந்தியா என்று தான் வெள்ளையன் நம்மை ஆட்சி செய்தான். அவனை விரட்டி அடித்ததில் தமிழனுக்கும் சீக்கியனுக்கும் வங்காளியர்களுக்கும் மற்றும் மாரத்தியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இத வெள்ளையன் வெளிய போகும் போது, தெற்கு தமிழனும் வடக்கே சீக்கியர்களும் எங்களை எதிர்த்து பலமாக போராடியவர்கள் என்று அவனே சொல்லிவிட்டு போனான். உசுர துச்சமா மதிச்சு போராடி விடுதலை வாங்கி தந்தா, நீங்கலாம் இந்தியா என்று பேரு வைச்சுக்கிட்டு தமிழனை நாட்டைவிட்டு போக சொல்லுவே? என்று கேட்டேன்.
கொஞ்ச நேரம் அவனால பேசவே முடியலை... இத்தனைக்கும் நீங்கள் ஏன் இந்தியன் இல்லை என்று சொல்கின்றிர்கள்?, என்ன காரணம்? என்று கேட்கவே இல்லை. இதுதான் அவன் மற்றோர் இந்தியனை மதிக்கும் வகை!!!.

இந்தியாவில் இந்தியன் என்று சொல்பவன், எவனுமே தன் அறிவை பயன்படுத்துவதில்லை. எடுத்து காட்டாக, சிலவற்றை சொல்கிறேன். முன்னதாக, இந்தியா ஐ.நா. அவையின் உறுப்பினர் நாடுகளில் ஓன்று. அதன் விதிமுறைகளில் முதன்மையானது என்னவென்றால் உலகத்தில் உள்ள எந்த ஒரு சிறிய குழுமத்தின் மொழி, பண்பாடு, கலை, அரசியல், வரலாறு மற்றும் பழைமை சின்னங்கள் என்று எல்லாத்தையும் அழியவிடாமல் அதன் அடையாளத்தை பாதுகாக்க வழிவகை செய்கின்றது.

அப்படியிருக்க இந்தியா ஒன்றிணைந்த நாடுகளின் அனைத்தையும் உரிமை முதற்கொண்டு மதிப்பது என்பது முதன்மையானது. ஒரு இனத்தையோ, மொழியையோ, மாநிலத்தின் மக்களையோ எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசு மதிக்கவில்லை என்றால் தவறாகவே முடியும்.

இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்று ஓன்று இல்லை... ஆனால் ஆக்கி தான் என்று சண்டையிடுவார்கள்.
இந்தியாவிற்கு தேசிய மொழியென்று ஓன்று இல்லை ... ஆனால் இந்தி என்று சண்டையிடுவார்கள்.

இன்னும் பல உண்மைகள் இந்தியாவைப் பற்றி தெரியாமலேயே நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படுகிறேன் என்பார்கள்.மேலும் நான் மேற்சொன்னது போல் இந்தியாவினுள் இருக்கின்ற மற்ற இனத்தை மதிக்காமல் "நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படுகிறேன்" என்பார்கள்.
அது உண்மையில் அறிவானதா? முறையானதா?

எப்பொழுது "நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்வேன்" என்றால்...
தமிழ் மொழி உலகத்தின் முதல் மொழி அப்படியிருக்க, தமிழரின் வழியில் கிளைத்தவர்கள் எம்மைப் பற்றி தாழ்த்தி சிந்திப்பது நற்றறிவாய் இராது. இருந்தும்... நான் நானாக, இனமானதுடன் தமிழனாய் மதிக்கப்பட்டு, மற்ற இனத்தவர்களால் என் இன பெருமைகள் ஏற்றுக்கொள்ளப் படும்போது மட்டுமே.

இங்கணம்,
தமிழுக்காக
தமிழினத்திற்காக
தமிழ்மக்களுக்காக
தன்னலமற்று
தலைத்தாங்கும்
உங்கள்...
சு.சுடலைமணி.

எழுதியவர் : சு.சுடலைமணி (5-Aug-17, 2:54 pm)
சேர்த்தது : yazhmani
பார்வை : 1092

மேலே