வெள்ளையனே வெளியேறு------------நந்தா
வாழப் பிறந்தவனின் அலட்சியம்
ஆழப் பிறந்தவனின் லட்சியம்!
உழவனுக்கு ஆண்டில் ஒரு நாள் அறுவடை
உனக்கோ ஆண்டு முழுவதும் அறுவடை!
வறுமைக் கோட்டிற்கு கீழ் 40 விழுக்காடு
இதில் உன் இனத்திற்கு உண்டா ஒதுக்கீடு?
பல்லாயிரம் உயிர்களின் சாவு கொடுத்து வாங்கிய
சுதந்திரம்
கேவலம் உன் ஊழலுக்கு காவு கொடுத்து நிக்குது
பாரதம்!
சவப் பெட்டியில் கூட ஒரு ஜனனம்
'சிசு'வாக ஊழல்
உயிர்ப்பித்த பெருமை உன்னையே சேரும்!
விளையாட்டிலும் காட்டினாய் வித்தை
விலை பேசினாயே காமன் வெல்த்தை!
நுரையீரல் நிரப்பும் காற்றின்
கல்லீரல் அறுத்து காசு செய்தாயே - ஸ்பெக்ட்ரம்
சொந்த நாட்டைச் சுரண்டும் கொள்ளையனே
செந்தமிழன் என்றாலும் நீயும் வெள்ளையனே!
என்ன செய்வது
உன் கறுப்பு பணத்திலும் காந்தி
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்!
பொறுத்திரு வெறுத்துப் போய் மக்கள் வெள்ளம்
உன்னை இழுத்துப் போய் கடலில் தள்ளும்!!!
புதுக் கவிதை