வெட்கத்திற்கு விடுமுறை

வெட்கத்திற்கு விடுமுறை

பள்ளிப் பருவத்தில் உனை
பார்த்திருக்கக் கூடாதா
பாவாடை தாவணியில் உனை
ரசித்திருக்கக் கூடாதா
பொங்கி வடிந்த கண்ணீரை
உன் பொன்விரல்கள்
தீண்டியிருக்கக் கூடாதா?

பச்சை ஆடையில் பருவத்தின் உச்சத்தில்
பார்த்துக்கொண்டேமே அப்போதாவது
இதயம் பரிமாறியிருக்கக்கூடாதா?

ஒரே பேருந்தில் ஒன்றாக பயணித்தோமே
அப்போதாவது பார்வைகள்
உரசிக்கொண்டிருக்கக் கூடாதா?

என் உள்ளத்தின் கவிதைகள்
எப்படியாவது உன் காதுகளுக்கு
கேட்டிருக்கக் கூடாதா?

ஒரே ஒரு முறை
உன் அலைபேசியை என்னிடம்
நீ தொலைத்திருக்கக் கூடாதா?

உன் வெட்கத்திற்கு வெட்கம் வந்து
விடுமுறை எடுத்திருக்கக் கூடாதா?

என் கனவெல்லாம் நீ வந்து
கதை பேசியிருக்கக் கூடாதா
என்
நினைவெல்லாம் நீயாகி
நிலைத்திருக்கக் கூடாதா?

கல்லூரி நாட்களில் காத்துக்கிடந்தேனே
கன்னிமாரா நூலகத்தில் பூத்துக்கிடந்தேனே
திசையெல்லாம் எதிர்பார்த்து
திருவிழாவில் குழந்தைபோலே
தடுமாறிப்போனேனே பின்
தடம் மாறிப்போனேனே
தடுத்திருக்கக் கூடாதா
எனை தாங்கியிருக்கக் கூடாதா?
என் தமிழுக்கு முகவரியாய்
நீ
இருந்திருக்கக் கூடாதா?

கவிதை மொழி பேசும்
கன்னித் தமிழே
கொஞ்சும் காதல் மொழியும்
பேசியிருக்கக் கூடாதா?

எதிரில் நீ வந்து எனை
ஏந்தியிருக்கக் கூடாதா
எப்போது பார்ப்போமென்று நாம்
ஏங்கியிருக்கக்கூடாதா?

எள்ளி நகையாடி எனை
ரசித்திருக்கக் கூடாதா
முப்பொழுதும் என் தோளிலேயே நீ
சாய்ந்திருக்கக் கூடாதா?

கொஞ்சும் கோபம் கொண்டு
நீ முறைத்திருக்கக் கூடாதா
தலையில் ஒரு கொட்டு கொட்டி
முத்தம் கொடுத்திருக்கக் கூடாதா?

அள்ளி அணைக்கும்போது நீ
அழுதிருக்கக் கூடாதா
உன் அன்னை இருந்த இடத்தில்
எனை வைத்திருக்கக் கூடாதா?

சென்னை மெரினாவில் நாம்
சேர்ந்திருக்கக் கூடாதா
அலையெல்லாம் அதை பார்த்து
ரசித்திருக்கக் கூடாதா?

கரையெல்லாம் கதைபேசி
கால்கள் நடந்திருக்கக் கூடாதா
நம் காதலுக்கு அணிந்துரை
அண்ணா எழுதியிருக்கக் கூடாதா?

சின்ன வீடு கட்டி
நாம் வாழ்ந்திருக்கக் கூடாதா
உன் சிரிப்பலைகள் கேட்டுக்கொண்டே
நான் செத்திருக்கக் கூடாதா?

ஆசையோடு உனை அள்ளி
அணைத்திருக்கக் கூடாதா
அன்பாக நீ தள்ளி கொஞ்சம்
நடந்திருக்கக் கூடாதா?

இரவெல்லாம் இதழ் இரண்டும்
முத்தம் பதித்திருக்கக் கூடாதா
இப்படியே இரவுகள்
விடிந்திருக்கக் கூடாதா?

இறுதிவரை ஒன்றாக
இணைந்திருக்கக் கூடாதா
என் இதயத்தில் எப்பொழுதும்
நீ இருந்திருக்கக் கூடாதா?
இதையெல்லாம் இறைவன்
கொடுத்திருக்கக் கூடாதா?

எப்போது நீ வந்தாய் என(னை)க்கான
என் தோழியே!
நெஞ்சம் உடைந்தபோது
நேசம் கலைந்தபோது
ஆசை வற்றியபோது
அன்பை வெறுத்த போது
அரனை பற்றிய போது
இன்னொருத்தி என்
இதயத்தை உடைத்தபோது
இல்லறமே வேண்டாமென்று
வெறுத்தபோது
பாசக்கரம் நீட்டிய பாவையே
பற்றுதல் முறையாகுமோ
பாவமும்
எனை சேருமோ?

நேசம் வைத்த நெஞ்சம்
நினைவில் வைத்திருந்தால்
பார்த்த நொடியே பரிமாறிக்கொள்வோம்
பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்
அன்போடு வாழ்ந்திருப்போம்
அடுத்த பிறவி வரை காத்திருப்போம்
அது வரை நினைத்திருப்போம்!

எழுதியவர் : (17-Aug-17, 8:46 pm)
பார்வை : 832

மேலே