பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 5
பெண் மனது ஆழமென்று...
பாகம் 5
சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...
அதிகாலையின் வாடைக் காற்று எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அமைதியாயிருக்கிற அதிகாலை இருளில் விடிகாலை வெளிச்சம் பரவுகிறபோது ஸ்விட்ச் போட்டாற் போல பறவைகள் கீச்சிடுவது இனிமையாக இருக்கும். இந்த வாடைக்காற்றும் பறவைகளும் அப்படியே இருக்க, நான் மாறி விட்டேன். சென்னையில் நான் வளர்ந்த வீடு எனக்கே அந்நியப்பட்டு விட்டது. திருமணம் என்கிற பந்தம் பிறந்தகத்தில் இருந்தாலும் பிறந்தகத்தோடு என்னை ஒட்ட விடவில்லை..
அப்பா வெளியூர் சென்றிருந்தார். “ மேட்டுப்பாளையம் ஆபிசுக்கு அவளைக் கூட்டிட்டு போயி வேலைய முடி.. பத்திரமா திரும்பி வந்துடுங்க “ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அண்ணனுடன் அனுப்பி வைத்தார் அப்பா..
மேட்டுப்பாளையத்திலிருந்த திவாகர் அலுவலகத்தில் எங்கள் வேலை பத்தே நிமிடத்தில் முடிந்து விட்டது. நிறைய அனுதாபங்களும் ஆறுதலும் அங்கே கிடைத்தன. திவாகரைப் பற்றி அவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ‘குடிகாரனையோ, அயோக்கியனையோ எங்கள் கம்பெனி வேலைக்கு வைத்துக் கொள்ளாது. அந்த அடிப்படையில் திவாகர் நல்லவராகத்தான் தெரிந்தார் ’ என்பது போன்ற அபிப்பிராயங்களைத்தான் அவர்கள் சொன்னார்கள்.
“வேற ஏதாவது விட்டுப் போயிருக்கா..?? “ சரி பார்த்தார் ஒரு பெரியவர். “திவாகர் வாடகைக் கார்ல புறப்பட்டு வந்ததா சொல்றீங்க.. அந்தக் காரை நாங்க புக் பண்ணல சார். ஆமா, இந்த ரசீதுல நாங்க புக் பண்ணின மாதிரிதான் போட்டிருக்கு.. ஆனா நாங்க புக் பண்ணல, பணமும் கொடுக்கல சார்.. அதனால அந்த பணம் எங்களுக்கு வேண்டாம்.. “
“ ஆளே போயாச்சு.. காரை யாரு புக் பண்ணியிருந்தா என்ன ?? “ அலுத்தான் முகேஷ்.
நான் திவாகரின் அலைபேசியைத் துருவிக் கொண்டிருந்தேன். திவாகருக்கு அண்ணன் அன்பளிப்பாகக் கொடுத்த அலைபேசி.. இதனால் இது என்னிடமே வந்து விட்டது..
ஆடி மாதம் தொடங்கியது ஜூலை பதினேழு. அன்றுதான் நான் ஊருக்குப் புறப்பட்டேன். அன்றிரவுதான் திவாகர் உதய்யுடன் கரோலின் பங்களாவில் தங்கினார். அன்றிரவு கம்பெனி சிப்பந்திக்கு அவர் ஃபோன் செய்திருக்கிறார்.. மிஸ்டு காலாகி இருக்கிறது. பிற்பாடு கம்பெனி சிப்பந்தி இவருக்கு ஃபோன் செய்திருக்கிறார் — அதுவும் இரண்டு முறை.. அதுவும் மிஸ்டு காலாகி இருக்கிறது. அந்த நேரம் திவாகர் என்னோடுதான் பேசிக் கொண்டிருந்தார். ஆக, அப்பா சொன்னது போல திவாகர் ஒன்றும் கம்பெனிக்குத் தெரிவிக்க முயற்சிக்காமல் இல்லை..!
அடுத்த நாள்.. ஐயையோ..! ! இதென்ன, கம்பெனியிலிருந்து இத்தனை மிஸ்டு கால்கள்.. ! ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.. அந்த இரண்டு நாட்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் பதினாறு மிஸ்டு கால்கள் ரெகார்டாகி இருந்தன.. இது தவிர நான் பண்ணிய அழைப்புகள் ஏழு..!
இதனால்தான் கம்பெனி கோபமாகி லெட்டர் போட்டிருக்கிறது..!
உண்மையிலேயே எப்படிப்பட்ட மனிதன் இந்த திவாகர்? கணவர் என்பதைப் புறந்தள்ளி யோசித்தேன். எனக்கு திவாகர் மேல் கோபம் வந்தது.
ஒரு வேளை மொபைல் சார்ஜில் இல்லையோ?
அண்ணா அப்பாவுக்கு ஃபோன் செய்து கொண்டிருந்தான். “ அப்பா.. இங்க வேலை முடிஞ்சிடுச்சி.. தொப்பி கோபி மாமா வீடு இங்க பக்கத்துலதான் இருக்கு.. ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடவா ?? “
தொப்பி கோபி குடும்ப நண்பர். இவர் தயவில்தான் எனக்கு அரசு வேலை கிடைத்தது. அப்பா சம்மதித்து விட்டதால் ஒரு ஆட்டோவை அழைக்கப் போனான் அண்ணன்.
நான் அண்ணனைத் தடுத்தேன்.
“ கோபி மாமாவை அப்புறமாப் பார்த்துக்க..! இப்ப என் கூட கரோலின் பங்களா வா..! “
“ உனக்கென்ன பைத்தியமா? அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைப் பொலி போட்டுருவார்.,! “
“ நீ வரலேன்னா நான் தனியாப் போவேன்..! ! “
என் குரலில் தெரிந்த உறுதியில் அண்ணன் சம்மதித்தான்.
திவாகர் ஊட்டி ஓட்டலை விட்டுப் பறப்பட்டபோது ஃபோன் செய்த நேரம் இரவு ஏழு ஐப்பத்தி மூன்று. கரோலின் பங்களாவை அடைந்தபோது ஃபோன் செய்தது இரவு ஒன்பது முப்பத்தேழு.. கிட்டத்தட்ட ஊட்டி ஓட்டலிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அடைந்து விடக் கூடிய இடம்தான் கரோலின் பங்களா.
எப்படி விசாரித்தாலும் ஒருவருக்கும் இடம் தெரியவில்லை..!
ஒரு வயதான ஆட்டோக்காரர் ஏதோ திசையைக் காட்டிச் சொன்னார். “ தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புன்னு சொல்லிக் கேளுங்க.. அதுக்குப் பக்கத்தில ஒரு வேளை இருக்கலாம்..! ! “
“ யாரு, அய்யாக்கண்ணு கேர் டேக்கரா இருந்தாரே அந்தப் பங்களாவா? “
“ தெரியலீங்க.. உதய் என்கிறவர் சமீபத்தில் தங்கிட்டுப் போனார்.. “
முரட்டுச் சாலைகளில் அலைந்து திரிந்து ஒரு டஜன் பங்களாக்களை பரிசீலித்து விட்டு, நெடு நேரத்துக்குப் பிறகு பீட்டர்ஹெட் சாலையில் பயணித்தோம்.
மூன்றே பங்களாக்கள்தான் அந்தத் தெருவில்..
மூன்றாவதாக இருந்த பங்களாவைக் கை காட்டினார் வாட்ச்மேன். “அதுதான் கரோலின் பங்களா..! “
பங்களாவின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்தோம்..!
வருடக் கணக்காக மனித வாடையே காணாத பாழடைந்த பங்களா அது..! ! ! கேட்டில் இனித் திறக்கவே முடியாத அளவுக்குத் துருப்பிடித்த பூட்டு..! கேட்டுக்கும் வாயிலுக்கும் இடையில் கலைக்கப்படாத குப்பைச் சருகுகள் மனிதக் காலடி பட்டு பல வருடங்கள் ஆனதைச் சொல்லின. யாரையாவது கொன்று குழி தோண்டிப் புதைத்தால் வெளியில் தெரியவே அரை வருடமாகி விடும்..! ! !
நான் பயத்தில் அண்ணனின் தோளோடு ஒட்டிக் கொண்டேன்..
“ அண்ணா, வேற ஏதாவது கரோலின் பங்களான்னு இருக்குமோ? இங்க எப்படி ரெண்டு பேர் ரெண்டு நாள் தங்க முடியும்?? “
அண்ணனின் பார்வை எங்கோ இருந்தது..! என் கையை இறுக்கினான். “ இருட்டிட்டிருக்கு.. சீக்கிரம் கிளம்பு.. வழி பார்த்தாச்சில்ல? காலைல வரலாம்... “
அவன் பதற்றமாகக் கிளம்பச் சொன்னான்..! யாரோ எங்களைக் கண்காணிக்கிற மாதிரி அவன் எதிர் வினை இருந்தது.
கோபி மாமா வீட்டில் இரவு தங்கினோம். கரோலின் பங்களா பற்றி மூச்சு விடவில்லை..
இரவுச் சாப்பாடு முடிந்ததும் நான், அண்ணா, மாமா, மாமி, மாமா பையன் கிரீஷ் எல்லோரும் உரையாடிக் கொண்டிருந்தோம்..
“ திவாகரைப் பத்தியே பேச வேண்டாம்.. சரண்யா அழறா பார்..! வேறு ஏதாவது பேசுவோம்...“ மாமா சொன்னார்.
“ஏன் மாமா, ஊட்டியில் எக்கசக்க பங்களா இருக்கு..! வெள்ளைக்காரன் பங்களா.. அதுங்க விக்கவும் மாட்டேங்கிறாங்க.. தங்கவும் மாட்டேங்கிறாங்க.. அப்படியே பாழடைய வைக்கிறாங்க..! இந்த பங்களாக்களை சுத்தி பேய்க்கதை இருக்கா ?? “ நான்தான் அடி போட்டேன்..
“ ஏன் இல்லாம?? “ மாமா உற்சாகமானார். “ ஊட்டியில பேய் பங்களான்னே ஒண்ணு இருக்கு.. ஒரு குடும்பமே எரிஞ்சு சாம்பலான பங்களா.. இன்னமும் அங்க குபீர் குபீர்னு தீ பிடிக்குமாம்.. ஜனங்க அலர்ற சத்தம் கேக்குமாம்.. “
“ ஏன்? அந்த.. வயலெட்டோ, வயலினோ.. சீ ! கரோலின்... அந்த பங்களாவில கூட ஆவி சுத்துதுங்கிறாங்களே... “ இது மாமி.
நான் அண்ணனை அர்த்தப் பார்வை பார்த்து திரும்பினேன்.
“ அதென்ன கரோலின் கதை ? ” அண்ணா கேட்டான்.
“ சொந்தக்காரப்பய சொத்தைப் பிடுங்கிட்டு புருசன் பெண்டாட்டி ரெண்டு பேரையும் வேலைக்காரங்களா ஆக்கிட்டான். அவுங்களோட ஒரே பொண்ணு ஜெனிதா.. அவளையும் ரொம்பக் கொடுமைப்படுத்தினான். அவ தூக்குப் போட்டு தற்கொலை பண்ணிட்டதா சொல்றாங்க.. இது நடந்த ஒரு வாரம் கழிச்சி அந்தச் சொந்தக்காரப் பையன் செத்துட்டான். ஜெனிதா ஆவியா வந்து பழி வாங்கிட்டதா சொல்றாங்க..! ! ! இன்னும் அந்த ஆவி அலையுதுங்கறாங்க..!
ஜெனிதாவோட அப்பாவும் இறந்துட்டார்.. கரோலின் ஒரு ஜமீன்தாரை ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு ஊட்டிய விட்டுப் போயிட்டா.. கரோலின் பங்களா அப்புறம் நிறைய பேர் கை மாறுச்சு.. வாங்குனவனெல்லாம் வெள்ளைக்காரன்தான். எவனும் அங்க தங்கல. அய்யாக்கண்ணுன்னு தேயிலைத் தோட்ட தொழிலாளி ஒருத்தன். கெட்டிக்காரன்.. அவன் பிற்பாடு அந்த பங்களா கேர் டேக்கர் ஆனான். அவனுக்குத் தனியா குடும்பமில்ல. தம்பி குடும்பத்தோட தங்கியிருந்தான். அவனோட தம்பி அவனை மாதிரியே இருப்பான்.. உருவம் மட்டுமில்ல; பேரும் ஒத்துப் போகும்.. ஆக, அய்யாக்கண்ணுவும் அவனோட தம்பி குடும்பமும்தான் அந்த பங்களாவை அனுபவிச்சது..! குச்சு வீட்டுக்காரனுக்கு அடிச்ச யோகம் அது..! ! ! ஆவி அலையிற பங்களான்னு ஊருக்குள்ள ஒருத்தன் அந்தப் பக்கம் போகாதப்ப துணிஞ்சி அங்க குடியிருந்த குடும்பம் அய்யாக்கண்ணுவோடதுதான். “
ஓகோ.. வழியில் அய்யாக்கண்ணு பங்களா என்று கேட்டதன் அர்த்தம் இதுதான்.
“அந்த அய்யாக்கண்ணு என்ன ஆனான்? “
“ செத்துட்டான்! தம்பி, குடும்பத்தோட சென்னைக்குப் போயிட்டான். “
“ பே.. பே... பேயடிச்சா? “ அண்ணன் கேட்டான்.
“ இல்லடா.. காசநோய் வந்து செத்துப் போனான். அப்பல்லாம் நிறைய தேயிலைத் தோட்ட தொழிலாளிங்க காசநோய் கண்டு செத்திருக்காங்க..! “
அதற்கு மேல் பேச்சு வேறெங்கோ சுற்றியது. அவர்கள் தூங்கி விட்டனர். அண்ணன் விழித்திருந்தான். அடிக்கடி டார்ச் லைட் அடித்து அங்கங்கே பார்த்துக் கொண்டிருந்தான்..
தொடரும்..