அழகிய பேய்களும் அழகான பொய்களும்

அழகிய பேய்கள்

இன்று அம்மாவிடம் இதை சொல்லிவிடுவது என்ற முடிவோடு அம்மாவை கூப்பிட்டேன். அம்மா பேய் இருக்கா ? இல்லையா ?

டேய் நேரா விசயத்துக்கு வா, இழுக்காத எனக்கு நிறைய வேலையிருக்கு

அம்மா, நாம அப்போ கேரளால இருந்தோம், நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன், நான், தம்பி விக்ருத், அப்புறம் நம்ம பக்கத்து வீட்டு ராகுல் மூணு பேரும், நம்ம ஆபிஸ் பின்னாடி இருந்த பழைய ரூமுக்கு முன்னாடி விளையாடிட்டு இருந்தோம், அப்பதான் அந்த பேயப் பார்த்தோம். வௌ¢ளசேலை கட்டிட்டு, தலைய விரிச்சுப் போட்டுட்டு அந்த ரூமுக்குள்ள போச்சு, இதே மாதிரி நிறய தடவ பாத்திருக்கோம்.

டேய் அந்த ஊர்க்காரங்கள்ளலாம் தலைய விரிச்சுத் தாண்டா போட்டுருப்பாங்க.

இல்லம்மா அந்தப் பேய் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அப்பா அங்க டூல்ஸ் எடுக்கப் போனாரு, ஆனா அவரு கண்ணுக்கு அந்தப் பேய் தெரியலயாம்.

உனக்கு எப்படிடா தெரியும் ?

இல்லம்மா நாங்க அப்பாவைக் கேட்டோம். அது உள்ள போன உடனே அப்பாவும் உள்ள போனாரு ஒரு அரை மணி நேரம் கழிச்சு அப்பா டூல்ஸோட வெளிய வந்தாரு, நாங்க உடனே அப்பாவக் கேட்டோம், அப்பா பயந்து போய்ட்டாரு, ஆனா அவரு கண்ணுக்கு அது தெரியலன்னு சொன்னாரு.

அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு நைட் ஏழு மணி இருக்கும் நல்லா இருட்டுன பிறகு அப்பவோட பிரண்டு ராம்குமார் அங்கிள் வீட்டுக்கிட்ட நின்னுட்டு இருந்துச்சு, அப்பதான் அது எங்கள மிரட்டுச்சு, டேய் இங்க வாடா வாடான்னு கத்துச்சு பயந்து போய் ஓடிவந்துட்டோம், அன்னிக்கு நைட் கூட எனக்கு காய்ச்சல் வந்துச்சு.

அம்மா சற்று ஆர்வமுடன் கேட்கத்தொடங்கினாள்.

நாம அங்க இருந்தப்பல்லாம் நாங்க அடிக்கடி அத பாத்துருக்கோம். பிறகு நாம அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆகி ஆந்திரா போனோம் இல்லயா அங்கயும் அத நான் பாத்தேன்.

நெஜமாடா நீ சொல்றது

ஆமாம்மா ஆந்திரால நம்ம கோர்ட்டர்சுக்கு பின்னாடி பாத்தேன். அப்பா கூட பார்த்தாரும்மா ஆனா அவரு கண்ணுக்கு தெரியல்லன்னாரு.

இது கூட பரவால்ல இப்ப நான் சொல்றதக் கேட்டா நீ இன்னும் அதிர்ச்சியாயிடுவ, இப்ப இந்த ஊருக்கு வந்தப்புறம் நேத்து எங்க ஸ்கூல் வாசல்ல பாத்தேன்.

என்னடா சொல்ற ?

ஒரு டிடெக்டிவ்வைப் போல நானும் ஆமா அது என்ன ஃபாலோ பண்ணிட்டு வருதுன்னு நினக்கிறேன், நேத்து சாயங்காலம் நான் க்ளாஸ் முடிச்சு வரும் போது அது அங்க நின்னுச்சு, அத எப்படி நான் அடையாளம் கண்டுபிடிச்சேன் தெரியுமா அது கன்னத்துல ஒரு பெரிய தளும்பு இருக்கும். ஆனா ஒரு ஜோக் என்னன்னா இத்தன நாளா நான் அத பாத்து பயந்தேன். இப்ப அது என்னப்பாத்து மறைஞ்சிக்குச்சும்மா என்றேன் பெருமையாய். ஆனா அது கூட ஒரு குட்டி பையன் இருந்தான் அவன் பேரு கூட விதார்த் புருஷோத்தம்நாராயணன்¢, அவன் நான் படிக்கிற ஸ்கூல்ல தான் படிக்கிறான் எனவும், அம்மா ஆத்திரத்துடன் எழுந்தாள் அவள் கோபத்திற்கான காரணம் வினய் புருஷோத்தம்நாராயணனான எனக்கு தெரியல, உங்களுக்கு புரியுதா ?

எழுதியவர் : ரக்ஷனா (18-Aug-17, 5:11 pm)
சேர்த்தது : Rakshana
பார்வை : 587

மேலே