நிமிடக்கதை - - பஸ் ஓடுமா
பஸ் ஓடுமா ? (நிமிடக்கதை)
அவன் பேருந்துநிலையத்தில் நிற்கும் ஒவ்வொரு பேருந்துக்கும் அருகில் சென்று , அங்கு நிற்கும் பேருந்து நடத்துனரிடம் ‘இந்தப் பஸ் ஓடுமா ?” என்று கேட்டான். “ஓடும்” என்று அந்த நடத்துனர் பதில் கூறியவுடன், அடுத்த பேருந்து நடத்துனரிடம் இதேபோல் கேட்கவும், நடத்துனர் “ஓடும்” என்று கூறியவுடன், இதேபோல் ஒவ்வொரு பேருந்து நடத்துநரிடமும் கேட்டுக்கொண்டே , அவன் எந்தப் பேருந்திலும் அவன் ஏறவில்லை.
அவன் எந்தப் பேருந்திலும் ஏறாமல் செல்வதைக் கவனித்த , அங்கு நின்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் ,அவன் அருகில் சென்று “தம்பி ! நீ எங்கே போகணும் , கண்டக்டரிடம் பஸ் ஓடுமா ? ஓடுமா ?” என்று கேட்டுக் கொண்டே செல்கிறாயே , ஒரு பஸ்சிலும் ஏறமாட்டங்கறே ஏன்? என்று கேட்டதற்கு, அவன் அந்தப் பெரியவரிடம் ‘ எங்க தாத்தா எப்போதும் ஓடற பஸ்லே ஏறக்கூடாதுன்னும், ஏறினால் ஆபத்துன்னும் சொல்லியிருக்கார். அதான் ஓடற பஸ்ல ஏறல “என்றான். அதைக் கேட்ட பெரியவர் சிரித்து விட்டு, அவனை நோக்கி ஏதோ கூற வாயெடுத்தார். அதற்குள் அவன் அடுத்த பேருந்தை நோக்கி பஸ் ஓடுமா என்று நடத்துனரிடம் கேட்பதற்குச் சென்றான்.
பூ. சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை