ஓர்நாள் ராணி

பொற்கொடி கர்ப்பம் தான்தரிக்க,
தொப்புற்கொடியாய் காம்பிருக்க,
பூமகளே நீ அவதரித்தாய்,
செஞ்சூரியன் சிவப்பு நிறத்தவளாய்...

வண்ணத்துப்பூச்சியை மன்னவனாய்,
மணக்கும் எண்ணம் கொண்டவளாய்,
உள்ளத்தில் ஊறிய காதல் சுகம், அதை
தேனாய் மாற்றினாய் என்ன வளம்?...

மாய வண்ணம் காட்டி நின்றாய்,
மந்திர வாசனை வீசி வந்தாய்,
தந்திரமாய் தம் அன்பு மனதில்,
பட்டாம்பூச்சிக்கு பட்டம் அளித்தாய்...

மெல்லிய தம்மிரு சிறகினிலே,
வானவில்லின் வர்ணம் கொண்டாய்,
தனக்கென பிறந்த பூமகள் இவளென,
கண்டவுடன் நீ கண்டுகொண்டாய்...

வெயிலில் மலர்மகள் வாடுகிறாள் என,
நல்ல சிறகை குடையாய் விரித்துவிட்டாய்...
வெப்பம் தாளாத இளந்தளிர் இவளென,
வண்ணச் சிறகால் சாமரம் வீசுகிறாய்...

சேயன்பு காட்டும் மன்னவனே,
உனக்காக மண்ணில் உயிர்த்தெழுந்தேன்...
கண்ணைச் சேரும் ஒளிதன்னை விடவும்,
விரைவாய் உன்னில் சேர்ந்திடுவேன்...

மாமலை மண்னோடு சேர்ந்திருக்கும்,
அதைப் பிரிக்க எவருக்கு தெம்பிருக்கும்...
அதுபோல் நாணச் சிவந்த மலர்மகள் இதழ் மீது,
தன் பொன் இதழ் பதித்தான் வண்ணச்சிறகோன்...

பிறந்த நல் பயனை அடைந்தேன் என்றாள்,
உயிரின் அமுதாய் சேர்த்த தேனினை,
துளியும் மிச்சமின்றி தன்னவர்க்கு கொடுத்தாள்,
இவள் அன்பு கண்டு வண்ணவன் தன்
ஊனும் உயிரும் உருகலானான்...

சிறுகூட்டில் சிட்டுக்கள் ஈன்ற கருமுட்டைகளை,
கொடும் நாகம் பசிக்கு புசிப்பது போல்,
தன் மன்னவன் வாய் பதித்த தன்னிதழ் மீது,
வேறு வண்டினம் வந்திங்கு ருசித்திட அனுமதியேன் என்றாள்...

ஓர் நாள் வாழினும் தம்முடை ராணி நான்,
வீழ்வேன் நான் இனி என்னவர் பத்தினியாய்,
வண்டவர் வந்து அமரும் முன்னரே,
என் உயிரை அமர்த்துவேன் இறைவன் அடியிலே...

என ஓர் நாள் ராணியாய்
உன்னத மனைவியாய்
தன்னவன் பத்தினியாய்
இன்னுயிர் நீத்து விண்ணில் சென்று வண்ணவனுக்கு காத்து நின்றாள்...

எழுதியவர் : ரகுராம் ரத்தினம் (20-Aug-17, 11:18 am)
சேர்த்தது : ரகுராம் ரத்தினம்
Tanglish : ornal raani
பார்வை : 117

மேலே