ஊதுகனல்

நண்பர் ஒருவர் இன்று பகிர்ந்த ஒரு கவிதை ஏற்படுத்திய தாக்கம்.....

ஊதிக் கனல்வளர்க்க - பல
ஊழி நடமிசைக்க
சேதி சுமந்துரைக்க - மின்
சேர்ப்பை உனக்களிக்கக்
காதில் இனிக்கும்விதம் - கவிக்
கற்பனையைக் கொடுக்க
மேதினி மொத்தமுண்டு - தம்பி
மேன்மைக் கவிதைபன்னு !!

சந்தம் கொடுத்துலவ - நதிச்
சங்கமம் ஆகுதடா !
விந்தை படைத்திடவே - ஒளி
விண்மீன் தாவுதடா !
மொந்தைக் கள்ளமுதாய் - களி
மொண்டு கொடுத்திடவே
இந்த இயற்கையுண்டு - தம்பி
இன்பக் கவிதைபன்னு !

கருத்தைத் தென்றல்தரும் - அதைக்
காதில் கவனித்துவை
உருவம் மின்னல்தரும் - அதன்
உணர்வைப் படமாக்கு !
ஒருமுறை வந்துவிட்டால் - மனம்
ஓயாது கவியுரைக்கும் !
விரைவில் கவிதைபன்னு - தம்பி
விசையில் கவிதைபன்னு !

காகிதக் குப்பையென்றே - சிலர்
கசக்கிப் போட்டாலும்
நோகச் சிலரும்வந்து - பிழைகள்
நுணுக்கிச் சொன்னாலும்
வேகம் எடுத்துவரும் - மழை
வேதம் பார்ப்பதில்லை !
தாகக் கவிதைபன்னு - தம்பி
தன்மைக் கவிதைபன்னு !

அந்தக் கவிதைக்குள்ளே - உன்
ஆவி ஒளிர்விடட்டும் !
தொந்தரவு தீர்ந்தே - நாடு
தோன்றும் சுகம்பெறட்டும் !
இந்தத் திறத்தினிலே - நல்
இசையும் இணைந்திடவே
உந்திக் கவிதைபன்னு - உன்னோ(டு)
ஊதிக் கனல்வளர்ப்பேன் !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:31 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 54

மேலே