எனக்குள் நீ

நான் குடிக்கும் தேநீரின்
கலந்திருக்கிறாய் துளிகளாய்
நான் அருந்தும் பானத்தில்
கரைந்து கிடக்கிறாய் இனிப்பாய்

நான் ருசிக்கும் உணவில்
உதிர்ந்து கிடக்கிறாய் பருக்கைகளாய்
நான் ரசிக்கும் முகத்தில்
வந்து அமர்கிறாய் பருக்களாய்

நான் பார்க்கும் வானத்தில்
பரவிக் கிடக்கிறாய் நட்சத்திரங்களாய்
நான் பார்க்கும் பூமியில்
விரவி கிடக்கிறாய் வேர்களாய்

நான் போகும் பாதையில்
தொடர்ந்து வருகிறாய் காற்றாய்
நான் போகும் இடங்களில்
துணையாய் ஆகிறாய் நிழலாய்

நான் பார்க்கும் பொருளில்
அசைந்து ஆடுகிறாய் நாற்றாய்
நான் உறங்கும் இருளில்
எனக்குள் இருக்கிறாய் சுழலாய்

நான் விசித்து அழுகையில்
வந்து விழுகிறாய் கண்ணீர்துளிகளாய்
நான் புசித்து முடிக்கையில்
வந்து சேர்கிறாய் ஏப்பமாய்

நான் முசிந்து சோர்ந்துபோகையில்
காதில் நுழைகிறாய் இசையாய்
நான் உருகி வாசிக்கும்போது
கண்ணில் நுழைகிறாய் எழுத்துக்களாய்

நான் மருகி சாயும்போது
என்னில் சேர்கிறாய் கனவுகளாய்
நான் இறுக கல்லாகும்போது
என்னை தீண்டுகிறாய் உளியாய்

நான் கருக வாடும்போது
என்னில் நீரூற்றுகிறாய் மழையாய்
நான் இருளில் துழாவும்போது
என்னில் வீசுகிறாய் (வி)ஒளிக்கீற்றுகளாய்

நான் உருண்டு விழுகையில்
என்னை தாங்கிக்கொள்கிறாய் துணையாய்
நான் மருண்டு அழுகையில்
என்னை மடிசேர்க்கிறாய் தாயாய்

என் திசைகள் புரண்டு புரண்டு யோசிக்கின்றன
என்னோடு வருவாயா துணையாக
என் ஆசைகள் திரண்டு திரண்டு யாசிக்கின்றன
என்னோடு வருவாயா இணையாக



நன்றி இந்த கவிதையை எழுத வைத்த ரக்ஷனாவின் அனைத்திலும் நீ என்ற கவிதைக்கு ..

எழுதியவர் : யாழினி வளன் (25-Aug-17, 4:49 pm)
Tanglish : enakkul nee
பார்வை : 296

மேலே