கண்ட நாள் முதலாய்-பகுதி-18
.....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 18
அர்ஜீன் மணமேடைக்கு அருகில் செல்லவும் ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்லி தாலியை அரவிந் கையில் கொடுக்கவும் சரியாக இருந்தது...அனைவரும் மணமேடையை சூழ்ந்து கொண்டிருந்ததால் அவனுக்கு மணமேடையில் என்ன நடக்கிறதென்பதே தெரியவில்லை...ஐயர் கெட்டிமேளம் என்றதும்தான் மற்றவர்களை கொஞ்சம் விலக்கி மேடையில் ஏறியவன் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியில் அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டான்...
யாரை அவன் கண்ட நாளிலிருந்து மனதுக்குள் வைத்து காதலித்துக் கொண்டிருந்தானோ...யாரை அவன் கைப்பிடித்து உலகம் எல்லாம் உலாச் செல்ல வேண்டுமென்று ஆசைகளை வளர்த்தானோ...அவனுக்கு மட்டுமே சொந்தமென்று நினைத்த அவளின் கழுத்தில் அவன் அண்ணன் மாங்கல்யத்தை அணிவித்து அவனின் சொந்தமாக்கிக் கொண்டிருந்தான்...
அர்ஜீனால் தான் காண்பதெல்லாம் உண்மை என்பதையே நம்ப முடியவில்லை...அந்த இடத்திலேயே பிரம்மை பிடித்தது போல் நின்றவன்,உடனேயே அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்..அனைவர் கண்களும் மணமேடையில் தம்பதிகளாகியிருந்த அரவிந் துளசி மீதே இருந்ததால்...அர்ஜீனை யாரும் கவனிக்கவில்லை...
துளசியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்துவிட்டு நிமிர்ந்த அரவிந்தனின் மனதில் தோன்றிய மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது...இந்த நொடியிலிருந்து அவள் அவனுக்கு சொந்தமானவள் என்று எண்ணும் போதே சிறிது கர்வமாக இருந்தது அரவிந்துக்கு...அவள் நெற்றியில் திலகமிட்ட போதும் சரி...அவள் கைப்பிடித்து அக்னியை வலம் வந்த போதும் சரி...அவள் விரல்களில் மெட்டியை அணிவித்த போதும் சரி...அவன் அவனாகவேயில்லை...அனைத்துச் சடங்குகளையும் அவன் ஓர்வித இன்ப அவஸ்தையோடே பண்ணிக் கொண்டிருந்தான்....
அவள் கழுத்தில் மாங்கல்யம் ஏறிய மாயமோ...இல்லை அவன் கரம் பற்றிய போது அவளுள் எழுந்த எதுவென்றே சொல்ல முடியாத உணர்வோ...துளசியின் மனதிலும் புதிய மாற்றங்களை உருவாக்கியிருந்தது...அவனோடு இணைந்து அனைத்துச் சடங்குகளையும் செய்த போது அவளையறியாமலேயே அவளுள் ஓர்வித அமைதி உருவாகுவதை அவளால் உணர முடிந்தது...அந்த அமைதி தந்த உற்சாகத்தில் அவள் உதடுகளில் கூட மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது...
அதன் பின் அனைத்து சம்பிரதாயங்களும் அடுத்தடுத்து நடந்து முடிய அவர்களின் திருமணம் சட்டரீதியாகவும் பதிவு செய்யப்பட்டது...அப்போதுதான் அர்ஜீனைப்பற்றிய நினைவு அரவிந்தனின் மனதில் எழ..
"சித்தப்பா...அர்ஜீன் இன்னும் வரலையா??ஒரு மணித்தியாலத்தில வந்திருவேன்னு சொன்னானே..??"
"அப்போவே வந்திட்டானேடா...மேல ரூம்ல தான் ரெடியாகிட்டு வாறேன்னு போனான்...எங்க போய் தொலைஞ்சான்...இரு நான் அவனுக்கு கோல் பண்ணிப் பார்க்கிறேன்..."
"சரி சித்தப்பா...சீக்கிரமா வர சொல்லுங்க.."என்றுவிட்டு அவன் துளசியின் அருகே சென்று அமர்ந்து கொண்டான்..
அவரும் இரண்டு மூன்று தடவைகள் அர்ஜீனுக்கு எடுத்துப் பார்த்து விட்டார்...அவனது போன் சுவிட்ச் ஆப் என்றே வந்து கொண்டிருந்தது...ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டேயிருந்தார்...அப்போது அவர் அருகே வந்த அரவிந்தன்...
"என்னாச்சு சித்தப்பா...கோலை அட்டெண்ட் பண்ணினா இல்லையா...??"
"இல்லைடா...அவன் போன் சுவிட்ச் ஆப்ன்னே வருது...எதுக்கும் நான் போய் மேல ரூம்ல பார்த்திட்டு வாறேன்..."
"நீங்க இருங்க,நான் போய் பார்த்திட்டு வாறன்.."
"இல்லைபா...இப்போ நீ இங்கயிருந்து போனா அவ்வளவு நல்லா இருக்காது...நானே போய் அவனைத் தேடுறன்.."
"நீங்க சொல்றதும் சரிதான்...ஏதும்னா கோல் பண்ணுங்க.."
"ம்ம்..சரி டா.."என்றுவிட்டு மேல் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சித்தப்பாவையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில்"எங்க போயிருப்பான்..??"...என்ற கேள்வியே மறுபடியும் மறுபடியும் எழுந்து கொண்டிருந்தது...அதே யோசனையிலேயே மூழ்கி இருந்தவன் அவனது அம்மாவின் குரல் கேட்டதும் தான் முழித்துக் கொண்டான்..
"அரவிந்தா இங்க என்னபா பண்ணிட்டு இருக்காய்..?இப்போ துளசியோட வீட்டுக்கு போகனும்...எல்லாரும் கிளம்பிட்டாங்க...போய் துளசியோட நில்லுடா.."
"ஆஆ...சரி மா.."
திருமணத்திற்கு வந்திருந்த பலர் கிளம்பிப் போயிருக்க இரு வீட்டாருக்கும் நெருங்கிய உறவினர்கள் மாத்திரமே மண்டபத்தில் இருந்தார்கள்..உறவினர்கள் அனைவரும் வேனில் ஏறிக் கொள்ள..துளசியும் அரவிந்தனும் அவர்களுக்கான காரில் ஏறிக் கொண்டார்கள்...
காரில் ஏறி அமர்ந்து கொண்ட அரவிந்தனின் கண்கள் அவனது சித்தப்பாவையே தேடிக் கொண்டிருந்தது...அவர் அவசர அவசரமாக ஓடி வருவதைக் கண்டவன்..காரிலிருந்து இறங்கி என்னவென்று கேட்டான்..
"அர்ஜீன் மேல இல்லையா சித்தப்பா..??"
"இல்லை பா...மேல ரூம்ஸ்லையும்,மண்டபம் பூராவும் தேடிட்டேன்..அவனை எங்கையும் காணோம்...போனும் சுவிட்ச் ஆப்லதான் இருக்கு...எங்கதான் போனானோ..??.."
"ஏதும் அவசரவேலைன்னு கிளம்பி போயிட்டானோ தெரியல...என்னோட போனும் அப்பாகிட்டதான் இருக்கு...நான் வீட்டை போனதும் அவன் ஓபிஸ்க்கு கோல் பண்ணிக் கேட்கிறேன்...அதுவரைக்கும் வேற யாரும் அர்ஜீன் எங்கன்னு கேட்டா...முக்கியமான வேலைன்னு கிளம்பிப் போய்ட்டான்னு சமாளிச்சிடுங்க..."
"சரி பா...என்னதான் வேலைன்னாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்..."
"வந்திருவான் சித்தப்பா...நீங்க போய் வேனில ஏறுங்க..."
என்னதான் அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்திருந்தாலும் அரவிந்தன் உள்ளூரக் கொஞ்சம் பயந்துதான் போயிருந்தான்...காரணம் அர்ஜீன் எப்போதும் இப்படி நடந்து கொண்டதில்லை....என்ன முக்கியமான வேலை என்றாலும் வீட்டில் யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான் செல்வான்...அப்படியிருக்கையில் இன்று இந்த முக்கியமான நேரத்தில் இங்கில்லாமல்...யாரிடமுமே சொல்லாமல் சென்றிருக்கிறான் என்றால் ஏதோ பிரச்சினையாக இருக்க வேண்டுமென்றே அரவிந்தனின் மனம் எண்ணிக் கொண்டது...
அதே குழப்பத்தோடே காரில் ஏறி அமர்ந்து கொண்டான்...கார் துளசியின் வீட்டை நோக்கி விரைந்தது...
தொடரும்...