பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 8 அ

பெண் மனது ஆழமென்று...........

பாகம் 8 அ

.................................................

சரண்யாவின் டைரியில், எழுத நினைத்து எழுதாதப் பக்கங்களிலிருந்து....

கோயமுத்தூர் காரியாலயத்தில் என் மேலதிகாரிக்கு அலைபேசியில் தகவல் சொன்னேன். கோயமுத்தூரில் நானும் அம்மா அப்பாவும் வீடு எடுத்து தங்கிக் கொண்டு, டூட்டி பார்ப்பதென்று முடிவானது..

அப்போதுதான் எனக்கொரு பார்சல் வந்தது. கவரில் ஃப்ரம் அட்ரசில் ஹோட்டல் சிம்ப்பிள் டிம்ப்பிள் விலாசம் இருந்தது. டூ அட்ரசில் மிஸஸ் சரண்யா திவாகர் என்று எழுதி, மாமியார் வீட்டு விலாசமிருந்தது.. அங்கிருந்து இங்கு அனுப்பப் பட்டிருக்கிறது..!

பிரித்தேன்.

இன்னொரு கவர்.. ஊட்டி லாண்டரிக்கடை லேபிளோடு.. லேபிளில் கடையின் பெயர், விலாசம் இத்யாதி..!

பிரித்தேன்.

அடடா.. உதய்யின் பொருட்கள்.. அதே சட்டை.பாண்ட், சீப்பு மாத்திரை அட்டை..

எதற்கு இங்கு அனுப்பியிருக்கிறார்கள் ??

சலிப்போடு தூக்கிப் போட்டேன்..! ஒரு துண்டுக் காகிதம் விழுந்தது..

டைரியில் எழுதிய பிறகு கிழித்து பாண்ட் பாக்கெட்டில் வைத்து, பின் அழித்து விடுவார்களே.. அப்படிப்பட்ட ஒரு துண்டுக் காகிதம்..! அழிக்க மறந்த காகிதம்..!

பிரித்தேன்.

“ என் தங்கையைக் கொன்றவனைப் பழி வாங்கி விட்டேன்..! ”

திவாகரின் மரணத்தை விபத்து என்று நினைத்து ஓரளவு ஆறுதல் அடைந்திருந்தேன்..! இப்போது இதென்ன ???

இது யார் கையெழுத்து? தாளின் குறுக்கே எழுதப்பட்டிருக்கிறது... இந்த துண்டுக் காகிதத்தை அன்றைக்கு ஏன் பார்க்கவில்லை ??

அது பரிச்சயமில்லாத கையெழுத்து என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை..

நெற்றி சுருக்கினேன்..!

“ தப்பு இருக்கும்மா.. தப்பு இருக்கு..! ” - அப்பா.

“ போலிசோன்னு பயந்துட்டேன்.. ! ” லாண்டரிப் பையன்..

“ கடந்த காலத்துல தப்பு பண்ணியிருக்கலாம்.. அது பெண் விவகாரமா இருக்கலாம்.. ”- அண்ணன்..

“ அய்யாக்கண்ணுவோட தம்பிக்கு ஒரு மகள், ஒரு மகன்.. ! அந்தப் பொண்ணு மரமெல்லாம் ஏறும்..! ” ஊட்டி டீக்கடைக்காரர்...

அப்பாவின் கணிப்பு சரியாகி விட்டதா?

“ எந்த முடிவுக்கு ஒரு போலிஸ்காரன் வருவானோ, அதே முடிவை இருந்த இடத்துல இருந்தே என்னால வர முடியும்.. ” அப்பா அன்றைக்குச் சொன்னாரே ??

திவாகர் எனக்குத் துரோகம் செய்து விட்டாரா ???

என் மனதில் நோயாளிக்கு இடமுண்டு.. ஆனால் கயவனுக்கு ???

நான் அப்படியே கண்மூடி உட்கார்ந்தேன்.. முதலில் இருந்து.. ஒவ்வொன்றாக...

சட்டென்று தோழி வானதிக்கு ஃபோன் செய்தேன்..!

ஒரு வாரம் கழிந்தது..

மனம் ஒரு நிலையில் இல்லை..! அதே சமயம் நான் செய்யக்கூடியது எதுவுமில்லை..

மாறும்.. மாற வேண்டும்.. என்னை வீட்டில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் அசௌகரியமாய் உணர்கிறார்கள்.. முகேஷூக்கு வயதாகிறது.. நான் போனால் ஒழிய இன்னொரு பெண் இங்கு வர முடியாது..

ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்..

அன்று வீடு பரபரப்பாக இருந்தது.. ஒரு மெல்லிய மகிழ்ச்சி என் உடலில் பூசியிருந்த ஜவ்வாது வாசம் போல் வீட்டை எங்கும் நிறைத்திருந்தது..

என் முகம் களையிழந்து காணப்பட்டதால் ப்யூட்டி பார்லருக்கு அனுப்பி அலங்காரம் செய்து வரப் பணித்தார் மோகனின் அம்மா..!

மோகனின் அப்பா, அம்மா இன்னும் சில உறவினர்கள், எங்கள் பக்கத்து உறவினர்கள் சில பேர்- என் வீட்டில் கூடியிருந்தனர்.. !

ஒரு சம்பிரதாயப் பெண் பார்க்கும் படலம் - மோகன் என்னைப் பார்ப்பதற்காக அல்ல.. உண்மையில் இருவீட்டார் பரஸ்பரம் அறிமுகமாவதற்காக ஒரு சின்ன வைபவம்.. பேச்சு வார்த்தை முடிவானால் இன்றைக்கே நிச்சயதார்த்தம்..! எனக்கும் மோகனுக்கும்...

ஏதோ இனிப்பும் காரமும் தயாராக இருந்தது.. வீட்டில் ஃபர்னிச்சர் மட்டும் ஓரிரண்டு புதிதாய் வாங்கியிருந்தனர். ஒரு மேஜை, சோபா கம் பெட்.. ரஹேங்கா கம்பெனியின் ஸ்டிக்கர் சோபாவில் ஒட்டியிருந்தது..

“ அங்கே ” இருந்த சோபா இதே மாடல் தானே..? நிறம்தான் வேறு...

நான் அழகு நிலையத்திலிருந்து திரும்பியிருந்தேன்.. இளஞ்சிவப்பு நிற பார்டர் போட்ட மஞ்சள் புடவை.. இளஞ்சிவப்பு அலங்காரச் சோளி.. அதற்கேற்ற அணிகலன்கள்..

மோகனை - பழைய நண்பனை- பார்க்கிறபோது வெட்கம் வரவில்லை..! சட்டென்று ஒரு புன்னகை தோன்றியது.. வெற்றியாளனை எனக்குப் பிடிக்கும்.. ! மோகனும் வெற்றியாளன்தானே ?? ஒரு காலத்தில் என்னைக் காதலித்தவன்..! இப்போது காதலில் வெற்றியடைகிற தருணமாயிற்றே ??

அவனும் சிரித்தான்..

மெலிதாய் தோன்றிய புன்னகை சற்று ஆழமாகி.. ஓரமாய் விரிந்து..

நான் உள்ளே சென்று விட்டேன்..

அண்ணனும் மோகனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டே இருந்தனர்....

நான் அப்படியே கண்ணாடியைப் பார்த்தேன்.. எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும்....

வானதி மெசேஜ் அனுப்பினாள்..

“ இந்த ரஹேங்கா கம்பெனி, பீட்டர்ஹெட் ரோடு தொடங்கி பெருமாள் கோயில் ரோடு வரைக்கும் வளைச்சிப் போட்டுடுச்சி போலிருக்கே..! ” சொல்லிக் கொண்டே சோபாவை ஒரு தட்டு தட்டி உட்கார்ந்தான் மோகன்..

ஹக்..

குபீரென்று ஏதேதோ சிந்தனைகள் குறுக்கு நெடுக்காக ஓடி, அந்தரத்தில் தொங்கின.. ஒவ்வொன்றாகப் பறித்து வீசி வீசி போட்டபோது ஒரு பயங்கர உருவம் மனக்கண் முன் தோன்றியது.. உள்ளிருந்து வெளியிலும் பாய்ந்தது.. ! !!

உருவம் வேகவேகமாக வளர்ந்தது.. அதன் நகங்களும் கோரைப் பற்களும் நீண்டன..!

நான் கத்த வாயெடுத்தேன்.. சத்தம் வரவில்லை.. !

அதன் நகங்கள் என்னை குத்திக் கிழிக்க வந்தன. ஓட நினைத்தேன்; முடியவில்லை..!

இன்னொரு வெண்ணிற உருவம் கீழிறங்கியது – திவாகர்.. ! திவாகர் பயங்கர உருவத்துக்கும் எனக்கும் இடையில் நின்றார்.. அவரை மீறி அந்தப் பயங்கர உருவம் எத்தனை முயன்றும் என்னை நெருங்க முடியவில்லை..!

திவாகர் பார்த்தார்- காதலுடன் பரிதாபமாக.. ! என்னை அணைத்தார்..! மெதுமெதுவாக மறைந்தார்..! ! !

கற்பனை கலைந்தது..!

நான் எழுந்தேன் - சித்தப்பிரமை பிடித்தவளாக..!

குஞ்சம் வைத்து மலரலங்காரம் செய்த சடையை கத்தரிக்கோலால் வெட்டி தூக்கி யெறிந்தேன்...! ! ! ! !

தூய வெள்ளைப்புடவை அணிந்தேன்.. ஒவ்வொரு அலங்காரமாகக் களைந்தேன்..! !

முழு விதவைக் கோலத்தில் என் சூட்கேஸை அடுக்கினேன்..!

அம்மாவும் மோகனின் அம்மாவும் எதற்கோ உள்ளே வந்தவர்கள் என்னைப் பார்த்து அலறினர்..! ! !

வீடு அல்லோல கல்லோலப்பட்டது.. ! !

“ உனக்கென்ன மூளை குழம்பிடுச்சா ?? ” அண்ணன் கத்தினான்.. ! ! அடிக்க கை ஓங்கினான்..! ! நான் தடுத்தேன்.. ! ! என் கையின் பலம் நான் கூட அறியாதது.. அண்ணன் பின் வாங்கினான். நான் பேச வாயெடுத்தேன்.. வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கின..

மோகனின் அம்மா இருந்த இடத்தில் சோகம் கப்பிய முகத்துடன் என் மாமியார் தெரிந்தார்.

“ தி...வா...க..ர்... ” என் உதடுகள் துணுமுணுத்தன.

என் மன உறுதி எல்லாரையும் கட்டிப் போட்டது..! அப்பா கற்சிலையாகச் சமைந்திருந்தார்..

“ என் மாமியார் வீட்டுக்குப் போறேம்ப்பா.. அதுதான் என் வீடு.. ” அப்பாவின் காலில் அப்படியே சரிந்தேன்..


***

பாகம் 8 ஆ

மோகனின் டைரியில் எழுத நினைத்து எழுதாதப் பக்கங்களிலிருந்து...

அவமானம்..! அவமானம்..! !

இதைப் போன்ற அவமானம் எனக்கு ஏற்பட்டதே இல்லை... ஏற்படப் போவதும் இல்லை...!

வெற்றிலைபாக்கு கொடுத்து வரவழைத்து, பன்னீர் தெளித்து, அரியணையில் உட்கார வைத்தபிறகு செருப்பால் அடித்தால் எப்படியிருக்கும்???

சரண்யாவின் இந்த திடீர் முடிவு...!

அப்பா பேச்சு தட்டாத சரண்யாவை அவளுடைய அப்பாவாலும் தடுக்க முடியவில்லையே??

என்னைப் போலத்தான் முகேஷூம் நின்றிருந்தான் சிலையாக..!

சற்று முன்னால்...
அழகு நிலையத்திலிருந்து வெளிப்பட்ட சரண்யா.. ! என்னைக் கண்டு இதழ் விரித்த சரண்யா..!

முகேஷோடு ஏனோதானோவென்று பேசிக் கொண்டிருந்தாலும் நான் ஓர விழியில் ரசித்ததும் உள்ளுக்குள் பேசியதும் சரண்யாவிடமே..!

கை நழுவிப் போன தேவதை இதோ என்னுடைமையாகப் போகிறாள்..!

அள்ள அள்ளக் குறையாத அழகுப் பெட்டகம் அவள்..! அவள் இடுப்பின் வளைவு எவனையும் வளைத்துப் போடும்..! ! அவளுக்கேற்ற சரியான ஜோடி நான்தான்..! !

எனக்குப் பிடிக்காத வெள்ளையுடை உடுத்தி, எனக்குப் பிடிக்காத பேரை உச்சரித்து, எனக்குப் பிடிக்காத இடம் போகிறாள்..! ! !

என் பெற்றோரும் உறவினரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்..! நான் பெரிதாக ஏதும் நடக்காதது போன்று முகேஷின் தோளைத் தட்டி விட்டு வெளியே வந்தேன்..!

உள்ளுக்குள் வெடிக்கிறது பிரளயம்..!

ஒரு விதவைப்பெண் என்னை ஏற்க மறுத்து விட்டாள்..!

என்னை.. ! !

சாமர்த்தியம், இங்கிதம், பணம், ஆணழகு எல்லாம் சேர்ந்த என்னை..!

இந்த மோகனை..! ! ! !

வெண்ணெய் திரண்ட நேரம் தாழி உடைந்து விட்டது.. செத்தும் கெடுத்தான் திவாகர்..! !

அவள் மனதில் இன்னமும் திவாகர்..! ! ! !


அடுத்த பாகத்தோடு முடியும்..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (25-Aug-17, 11:46 am)
பார்வை : 311

மேலே