பார்வை தவறேல்

வழக்கமான போக்குடன் சென்றுக்கொண்டிருந்த என் கல்லூரி நாட்களில் அன்றைய வாரம் தேர்வு நடந்துகொண்டிருந்தது... அந்த இரண்டாம் தளத்தில் கைப்பிடிச்சுவரோரத்தில் பரபரப்பாக புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பேன். அக்கணம் முன் பின் பார்த்திராத ஒரு பாவையின் பார்வை என்னை மொய்ப்பதையும் உணர்ந்தேன்.. பரபரப்பான நொடிகள்தான் அவை... இந்த மொய்த்தல் தேர்வுக்கு முன்னால் 5 அல்லது 10 நிமிடங்கள் நீடிக்கும்.. இப்படி இரண்டு தினங்கள் கழிய மூன்றாம் தினம் நான் தேர்வறையில் அமர்ந்திருக்க, எதார்த்தமாக வலப்பக்கம் திரும்பும்போது அதே பாவை வெளியில் நின்று என்னை அந்த வீரிய விழிகளால் சில நொடிகள் மொய்த்துவிட்டு அவள் தேர்வறைக்குச் செல்கிறாள்.. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை... என்னுள் ஒரே படபடப்பு.. தேர்வு முடிந்து தண்ணீர்க் குடிக்க நண்பனுடன் செல்கிறேன். அதே பாவை எனக்கு முன்னால் செல்கிறாள்.. நாங்கள் முணுமுணுத்தபடியே அவளைப் பின் தொடர்கிறோம்... 'யார் இவள்' என்று நண்பனிடம் கேட்க அவனோ என் தோழிதான் என்றான்.. ' நான் நம்ப மாட்டேன்' முடிந்தால் அவளைக் கூப்பிடு' என்றேன்.. அவளை ஏதோ ஒரு புனைபெயர் சொல்லி அழைக்கிறான்.. அவள் திரும்பவில்லை ... மீண்டும் இன்னும் ஓங்கிய குரலில் அழைக்க கோபமாய்த் திரும்பிப் பார்த்த அவள் சட்டெனத் தன் செருப்பைக் கழட்டி எங்களை நோக்கி ' செருப்பாலேயே அடிப்பேன்' என்பது போல் அவளது அசைவுகளை வெளிப்படுத்தினாள்....... எனக்கோ கோபம் ஒருபுறம், எதற்காக அப்படிச் செய்தாள் என ஒன்றும் புரியவில்லை.. ஒரு வேளை அது எனக்காக அப்படிச்செய்தாளா? என ஒரே கொதிப்பு, குழப்பம் விடைதெரிந்தே ஆக வேண்டுமென்ற வேட்கை ஒருபுறம்..
நண்பனிடம் காரணம் கேட்டால் அவன் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அவள் அப்படித்தான் என்கிறான்... ஆனால் என் மனம் அந்நிலையிலில்லை... அன்றே மதியவேளையில் அவளை அதே தண்ணீர்க்குடிக்கும் இடத்தில் எதார்த்தமாகப் பார்க்க அவளும் அந்த இனம்புரியா பார்வையை என்மீது வீசுகிறாள்.. மீண்டும் என்னுள் படபடப்புத் தொடர்கிறது... 'இங்கே வா ' என கை காட்டி அழைத்த படி அவளருகில் முன்னேறினேன்.. அவளோ அவள் வகுப்பறைக்கு சட்டென மின்னல் வேகத்தில் ஓடியே சென்றுவிட்டாள்..
அன்றே மாலை வேளையில் கல்லூரி முடிந்து என் வாடகை வீட்டிற்குச் செல்கிறேன்.. என் நண்பனில் ஒருவன் ' அங்கே பார்' என்றான். அதே பாவை அதே இரண்டாம் தளத்தில் தனியாக நிற்கிறாள்.. 'உனக்காகத்தான் காத்திருக்கிறாள்' என்றான். 'இல்லை' என அவளைக் கடக்கும்போது, அந்தப்பாவை கையை அசைத்து என்னை அழைக்கிறாள்..
நான் அவளருகில் முன்னேற அவளோ இரண்டடி பின் வாங்குகிறாள்... எதையோ சொல்லத்துடிக்கும மனதை அவள் முகம் பிரதிபலித்தது... அவ்வளவு எளிதாய் அவளது உதடுகள் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை... ' பயமில்லாமல் பேசு ஒன்றும் ஆகவில்லை' என என்னோடு வந்திருந்த தோழி ஒருத்தி அவளுக்கு தைரியம் சொல்கிறாள்.....
ஒரு வழியாய் பாவைவாய் பேச முற்பட்டது.... 'நான் செருப்பைக்காட்டி உங்களை அப்படிச் சொல்லவில்லை உங்களோடு வந்திருந்தானே அவனைத்தான் சொன்னேன்' அவனை எனக்கு நன்றாகத்தெரியுமென்றாள்' ... அவளது பேச்சு, அண்டை மாநிலத்தவர் தமிழ்பேசுவது போல ஒரு தனி பாணியில் இருந்தது.... அப்பொழுதும்கூட படபடப்புக் குறையாதவளாயிருந்தாள் அந்தப்பாவை.... பிறகு என் பெயரைக்கேட்டுத் தெரிந்துகொண்டவள், நேரமாகிவிட்டது நான் செல்கிறேன் என சொல்லிக்கொண்டே தன் கையில் வைத்திருந்த அவளது பாடக்குறிப்பேட்டிலிருந்து சில தாள்களைச் சட்டெனக் கிழித்து என் கையில் கொடுத்துவிட்டு புலியிடம் தப்பித்த மானைப் போல வேகமாகச் சற்று அருகிலிருக்கும் அவளது விடுதிக்கு ஓடிவிட்டாள்....

அதை அப்படியே மடித்து என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வாடகை வீட்டிற்குத் திரும்புகிறேன்.... என் நண்பர்கள் அந்த 'காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்'
'அது காதல் கடிதம்தானே' என கிண்டல் செய்துகொண்டே வந்தார்கள்.. 'என்ன எழுதியிருப்பாள்? ஒருவேளை பார்வை வேலைசெய்துவிட்டதோ?' என எனக்குள்ளே கேள்வியாகத் தொடர்கிறது..... ஒருவழியாய் நாங்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டை அடைந்தோம்......
நண்பர்கள் அனைவரும் ஒரே ஆரவாரமாய் என்ன எழுதியிருப்பாள் என 'தேர்வு முடிவுகளின்போது இருப்பதை போல என்னோடு அவர்களும் பரபரப்பாய் இருக்கிறார்கள்...
மெதுவாய் சட்டைப்பைக்குள் கடிதத்தை எடுத்து மெல்லப் பிரிக்கும் நொடியில் என் அலைபேசி ஒரு குறுந்தகவல் வந்திருப்பதை எச்சரிக்கிறது .... புதிய எண்ணாக இருந்ததால் யாரென்று தெரியவில்லை.... பொத்தானை அழுத்தி குறுந்தகவலைப் படித்து அதிர்ந்துபோனேன்... ' அதை நீங்கள் மட்டும் படிங்க' உங்க நண்பர்களிடம் காட்டிவிடாதிங்க' என இருந்தது.... எனக்கோ இன்னும் படபடப்புக் கூடிக்கொண்டே போகிறது,. ஒருவேளை பாவை காதல் கடிதம் தீட்டியிருப்பாளோ என்றெல்லாம் அக்கணம் நினைத்துக் குழம்பிப்போய் விட்டேன்.. இந்தத் தகவல் அந்த வீரியவிழி கொண்ட பாவையிடமிருந்துதான் வந்திருக்கிறதென்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன.... பிறகு சட்டென மடித்து அந்தக்கடிதத்தை பைக்குள்ளேயே வைக்க அதைப் படித்தே ஆகவேண்டுமென நண்பர்கள் ஆரவாரம் செய்ய, நான் வெளியில் ஓடியே போய்விட்டேன்....
'முதலில் என்னை மன்னித்து விட்டுப் பிறகு கீழே படியுங்கள். நான் தங்களை கடந்த இரண்டாண்டுகளாய் நன்கறிவேன். தாங்கள் என்னையறிய வாய்ப்பில்லை. என்னை அறிய வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை. என் மனம் மிகவும் துன்பத்தினிடுக்குகளில் சிக்குண்டுள்ளது. அது ஒரு கோரவிபத்து. என்னால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த உன்னத உறவின் இழப்பை, இறப்பை. என் பெற்றோர்களும் அப்படித்தான் நடைபிணமாய் இருக்கிறார்கள். இந்த இழப்பு பேரிழப்பு.நடந்து 20 நாட்களாகிறது. இன்னமும் அவன் செல்லமாய்க் கூப்பிடும் 'பூலாந்தேவி' பூலாந்தேவி....' என் செவிகளில் கேட்கின்றன... விதி அவனை இறைவனடி சேர்த்துவிட்டது. அவன் வேறுயாமில்லை என்னுடன் பிறந்த என் ஆருயிர் அண்ணன்தான். நீங்கள் பார்ப்பதற்கு அப்படியே என் அண்ணனைப் போலவே இருக்கிறீர்கள். நான் என் தோழிகளிடம்கூட அடிக்கடி சொல்லியிருக்கிறேன் நீங்கள் என் அண்ணனைப்போலவே இருக்கிறீர்களென்று. அது என்னவோ தெரியவில்லை அன்று தேர்வுக்குமுன்னால் உங்களைப் பார்த்தபோது இறந்துபோன என் அண்ணனே எழுந்து நேரில்வந்து என்னைப் பார்ப்பதுபோல இருந்ததால் இறைவனுக்கு நன்றி சொல்லி என் மனதைத் தேற்றிக்கொண்டு உங்களை உற்றுநோக்கினேன். என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா.' என எழுதி முடித்திருந்தாள்...
என்னவொரு ஆச்சரியம் பாருங்கள் தோழர்களே! நான் அதை காதல் கடிதம் என முட்டாள்தனமாக நினைத்துவிட்டேன். பெண்கள் ஆண்களைப் பார்க்கும் பார்வை காதல் பார்வையாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? ஏன் அதில் சகோதரத்துவம் இருக்கக் கூடாதா? தோழமைகலந்த உணர்வாக இருக்கக் கூடாதா? எதை வைத்து அதை காதல் என கண்மூடித்தனமாக நம்மால் ஒரு மங்கையின் பார்வையை எண்ணத்தோன்றுகிறது. பார்த்தீர்களா அந்தப் பூலாந்தேவியின் பார்வையில் எத்துணை ஏக்கம், எத்துணை வேதனை, எத்துணை துயரம் அடங்கியிருக்கிறது என்று!?
ஆம் நண்பர்களே, இன்று பெருகிவிட்ட மக்கட்தொகையில் ஏற்பட்டுள்ளப் பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க அநேக பெண்கள் அதாவது இளம் மங்கைகள், இல்லத்தரசிகள் என வேலைக்குச்செல்வதையும் அன்றாடம் காண்கிறோம். மேலும் பள்ளி, கல்லூரி, கூலிவேலைகளென பல இடங்களுக்குச் செல்கிறார்கள்.அதில் பலர் கணவனையிழந்த விதவையாக இருக்கலாம், வீட்டை விட்டு அடித்துவிரட்டப்பட்டு அநாதை ஆசிரமங்களில் தங்கியிருப்பவர்காக இருக்கலாம், மகள்(ன்)களை இழந்து துயரத்தில்வாடும் தாயாக இருக்கலாம், சகோரனை சகோதரியையிழந்தவர்களாக இருக்கலாம். இப்படி பல துன்பத்தின் இடுக்குகளில் சிக்குண்டவர்களாய் இருக்கலாம். அதனால் அவர்களுடைய பார்வையில் நாம் அவர்களிழந்த மகனாகவோ தந்தையாகவோ அண்ணகவோ தம்பியாகவோ தெரியலாம். ஆகையால் அதை நாம் தவறாகவோ இரட்டை அர்த்தமுள்ள அநாகரிக பார்வையாக எண்ணிவிட வேண்டாம்... ஒருவருக்கொருவர் ஆறுதலாய் அன்பாய் தோழமையுடன் ஒற்றுமை ஒருமைப்பாட்டுடனும் சாதி மதம் மொழி இனம் தாண்டி நம் தாயாகிய பெண்களை நன்முறையில் மதித்து வாழ்ந்து விடைபெறுவோமாக...

எழுத்து: கார்த்திகைசெல்வன்
கதை: கற்பனையல்ல உண்மை.

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (24-Aug-17, 11:51 pm)
பார்வை : 379

மேலே