போதை ஓர் சாபம்

"டேய் எருமை இன்னிக்கும் குடிச்சிருக்கியா? எப்போ தாண்டா இந்த கருமத்த விட்டுத் தொலைவா? நானும் டெய்லி கரடியா கத்திக்கிட்டு தான் இருக்கன். உன் மரமண்டைல கொஞ்சமாச்சும் ஏறுதா?"
"நீ மனுசனா கத்தியிருந்தா ஏறி இருக்கும்"
"ம்ம் இந்த வாய்க்கொழுப்புக்கு மட்டும் குறைவில்லை. ஒழுங்கா வீடு போய் சேருவியா? இல்ல நான் வரணுமா?"
"நாங்கெல்லாம் குடிச்சாலும் ஸ்டெடியா நிக்குற ஆளுங்க. நீ போய் பால் குடிச்சிட்டு தூங்குற வழிய பாரு."
"நீ எல்லாம் திருந்தவே மாட்டா. வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு. bye."
"bye"
phone ஐ பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு வண்டியை உதைத்து கிளப்பினான் ஜீவன். விநோதனின் அக்கறை நிறைந்த அன்பு எப்பொழுதுமே ஜீவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒன்று. அவனுக்காகவே இந்த குடியை விடவேண்டும் என்று எவ்வளவோ முயன்றிருக்கிறான் தான். ஆனால் அவன் குடியை விட்டாலும் குடி அவனை விடமாட்டேன் என்கிறதே.
நண்பனின் நினைவில் சென்று கொண்டிருந்தவனின் கருத்தை கவர்ந்தது அவனை தாண்டிச் சென்ற ஸ்கூட்டி. பொதுவாக பெண்களின் பின்னே செல்பவன் அல்ல ஜீவன். அப்படி செல்பவர்களைக் கூட வெறுப்பவன் தான். ஏன் என்றால் அவனுக்கும் ரெண்டு தங்கைகள் இருந்தனர். ஆனால் இன்று அவன் குடிபோதையில் இருந்தான். போதை அவன் புத்தியை மறைக்க அந்த ஸ்கூட்டியின் பின்னே போனான். ஆனால் அப்பொழுதும் மோசமாக எதுவும் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணவில்லை. சும்மா விளையாட்டாக துரத்த தான் எண்ணினான். ஆனால் தன்னை ஒரு வண்டி பின்தொடர்வதை உணர்ந்த ஸ்கூட்டியில் வந்த அந்த பெண் வேகத்தைக் கூட்டினாள். இவனும் வேகத்தைக் கூட்டினான். அவனுடைய விளையாட்டு அந்தப் பெண்ணுக்கு வினையானது. ஸ்கூட்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து போஸ்டில் மோதியது. தூக்கி வீசப்பட்ட அந்த பெண்ணிடமிருந்து முனகல் சத்தம் கேட்டது. மரணத்தின் விளிம்பில் இருந்த உயிரின் அந்த முனகலை கேட்பதற்கு ஜீவன் அங்கு இல்லை.
மறுநாள் காலை ஜீவனின் போனுக்கு விநோதனிடமிருந்து அழைப்பு வந்தது. இரவு முழுதும் தூங்காமல் அழுது கொண்டிருந்தவனுக்கு விநோதனிடம் பேசினால் கொஞ்சமாவது ஆறுதலாய் இருக்கும் என்று தோன்றவே எடுத்துப் பேசினான். மறுமுனையில் வினோதன் சொன்ன தகவல் அவனுடைய இதயத்தில் கத்தியை வைத்து திருகுவது போன்ற வலியை உண்டு பண்ணியது.
"மச்சி நம்ம தங்கச்சி மாயா நம்மள விட்டுப் போய்ட்டாடா. நேத்து நைட் அவ ஸ்கூட்டி போஸ்ட்ல மோதி...." அதற்கு மேல் சொல்ல முடியாமல் கதறி அழ ஆரம்பித்தான் வினோதன்.
'மாயா சாகலடா. நான் தான் கொன்னுட்டேன். நான் பாவிடா. என்னை உன் கையாலயே கொன்னிடு. நான் வாழத் தகுதி இல்லாதவன்' கத்திக் கொண்டே கனவிலிருந்து விழித்தான் ஜீவன். முத்து முத்தாய் முகத்தில் பூத்திருந்த வியர்வையை துடைத்து தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் படுத்தான். தூங்க முடியவில்லை. ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. கடந்த மூன்று வருடங்களில் அவன் நிம்மதியாக ஒரு நாள் கூட தூங்கியதில்லை.
மாயா விநோதனின் தங்கையாக இருந்தாலும் ஜீவனிடமும் அதே அளவு சகோதர பாசத்துடன் தான் பழகுவாள். அவனும் மாயாவை தன் சொந்த தங்கையாக தான் பாவித்தான். அப்படிப்பட்ட தங்கையின் சாவுக்கு தான் காரணமாகிப் போன நாளில் இருந்து அவன் தூக்கத்தை தொலைத்து விட்டிருந்தான். அவனுடைய புத்தியை மழுங்கச் செய்த குடியையும் அந்த சம்பவத்திற்கு பிறகு விசமென வெறுத்தான். ஆனால் வினோதன் உட்பட யாரிடமும் தன்னால் தான் மாயா இறந்தாள் என்பதை சொல்லவில்லை. தண்டனைக்கு பயந்தல்ல. உயிர் நண்பனை இழக்க வேண்டி நேருமே என்று தான். ஆனால் அது தப்பு என்று கொஞ்ச நாளாகவே எண்ணத் தொடங்கியிருந்தான்.
'அவன் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும் சரி இல்லை கொன்றே போட்டாலும் சரி. உண்மையை கூறாமல் இத்தனை நாள் துரோகியாய் வாழ்ந்தது போதும். இன்று எப்படியும் நடந்ததை சொல்லியே தீர வேண்டும். அதற்குப் பின் அவன் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். ' மனதிற்குள் எண்ணமிட்டவாறே தூங்கிப் போனான்.
விடிந்ததும் முதல் வேலையாக விநோதனை பார்ப்பதற்காக கிளம்பியவனை அனாமதேய போன் கால் தடை செய்தது.
"மாயாவோட சாவுக்கு காரணம் நீதான்னு எனக்கு தெரியும். இந்த உண்மை வெளிய போகக் கூடாதுன்னா நான் சொல்ற இடத்துக்கு நீ இப்பவே வரணும்."
ஜீவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கு மட்டுமே தெரியும் என்று அவன் நினைத்திருந்தது இப்பொழுது வேறு ஒருவருக்கும் தெரிந்திருக்கிறதே என்பது தான் அவனை ஆச்சரியப்படுத்தியது. எப்படியும் விநோதனிடம் அவனே சொல்லத்தான் நினைத்திருந்தான். ஆனாலும் அதற்கு முன்பாக இவன் அழைக்கும் இடத்துக்கும் தான் போய் பார்ப்போமே என்று எண்ணம் தோன்றவே எங்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அடுத்த இருபதாவது நிமிடத்தில் போனில் பேசியவன் கூறிய இடத்தில் நின்றான் ஜீவன். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையும் காணவில்லை. போனை எடுத்து அவனுடைய நம்பருக்கு டயல் செய்தான். முதுகுக்கு பின்னே வெகு சமீபமாக போனின் அழைப்பு மணி ஒலித்தது. அவன் வந்து விட்டதை உணர்ந்து திரும்பிய ஜீவனுக்கு முகத்தில் பலமாக குத்தொன்று விழுந்தது. எதிர்பாராத இந்த அடியின் தாக்கத்திலிருந்து ஜீவன் மீளும் முன்பாக சரமாரியாக மேலும் பல குத்துக்கள் விழுந்தன.
"அநியாயமா என் மாயவ கொன்னுட்டியேடா பாவி. அவளும் இல்லாம அவள சாகடிச்ச உன்னையும் கண்டுபிடிக்க முடியாம இந்த மூணு வருசமா நான் தவிச்ச தவிப்பு என்னன்னு உனக்கு தெரியுமாடா? உனக்கு எப்டி தெரியும்! நீ தான் மனுசனே இல்லையே. பிரண்டோட தங்கச்சிய கொன்னுட்டோமேங்கிற குற்றஉணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாத நீ எல்லாம் கண்டிப்பா மிருகமா தான்டா இருக்க முடியும்"
அவனுடைய அடிகளை விட ஒவ்வொரு அடியின் போதும் அவன் சொன்ன வார்த்தைகள் தான் ஜீவனுக்கு வலியை உண்டுபண்ணியது. மன வலி உடல் வலி இரண்டும் சேர்ந்து தாக்க மயக்கமானான் ஜீவன். மறுபடியும் அவனுக்கு உணர்வு வந்தபோதும் அதே இடத்தில் தான் இருந்தான். ஆனால் விநோதனுடைய மடியில் அவனுடைய தலை இருந்தது. மெல்ல கண்களை சுழற்றிய போது கொஞ்ச நேரத்துக்கு முன்பாக அவனை தாக்கியவன் இன்னமும் கோபம் மாறாத முகத்தோடு நிற்பதையும் அவனை சமாதானம் செய்யும் முகமாக இன்னொருவன் அவனுடன் பேசிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.
ஜீவனின் காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த வினோதன் அவன் மயக்கம் தெளிந்து விழித்து விட்டதையும் அவனுடைய விழிகளில் தேங்கி இருந்த கேள்வியையும் கண்டுகொண்டான். கூடவே அவனுடைய இதழ்கள் எதையோ சொல்லத் துடிப்பதும் அவனுக்கு புரிந்தது. ஆனால் அவன் சொல்ல விரும்புவது என்னவென்று அவனுக்கு முன்னமே தெரிந்திருந்தபடியால், "நீ எதுவும் சொல்ல வேணாம்டா. எனக்கு எல்லாமே தெரியும்." என்று ஜீவனிடத்தில் சொன்னான்.
ஜீவனுக்கு ஒரே நேரத்தில் வருத்தமாகவும் வியப்பாகவும் இருந்தது. தான் சொல்லுவதற்கு முன்பாக வேறு ஒருவன் மூலமாக விநோதனுக்கு இந்த விடயம் தெரிந்து விட்டதே என்பதனால் வருத்தமும், அப்படி தெரிந்தும் கூட தன் மேல் ஏன் அவன் கோபம் கொள்ளவில்லை என்பதை நினைத்து வியப்பும் அடைந்தான்.
"என்னை மன்னிச்சிடுடா. அது மாயான்னு தெரியாம தான் அப்டி நடந்துக்கிட்டேண்டா. மாயாவோட சாவுக்கு நான் தான் காரணம்னு தெரிஞ்சா எங்க நீ என்ன வெறுத்திடுவியோன்னு தான் உன்கிட்ட இருந்து மறைச்சன். இன்னிக்கு உன்கிட்ட அத சொல்லலாம்னு தான் இருந்தன். ஆனா அதுக்குள்ள இந்த பையன் உன்கிட்ட சொல்லிட்டான்." தலையை தொங்கப் போட்டவாறு பேசிக் கொண்டிருந்தவனை இடையிட்டான் வினோதன்.
"அந்த இடத்தில மாயா இல்லாம வேற ஒரு பொண்ணு இருந்திருந்தாலும் அது ஒரு இழப்பு தானே. நீ அன்னிக்கு நடந்துக்கிட்ட விதம் யாராலுமே மன்னிக்கமுடியாது. ஆனா நான் மன்னிச்சன். ஏன் தெரியுமா? ஏன்னா நீ உன் சுய நினைவோட அந்த தப்ப பண்ணல. போதை உன் புத்தியை மறைச்சிடிச்சு. அந்த சம்பவத்துக்கு பிறகு நீ குடியை சுத்தமா விட்டிட்டா."
விநோதனின் பேச்சு ஜீவனுக்கு குழப்பமாய் இருந்தது. 'நான் குடியை விட்டதற்கு காரணம் மாயாவின் மரணம் தான் என்பது விநோதனுக்கு தெரிந்திருக்கிறதென்றால் இதைப்பற்றி முன்னமேயே இவனுக்கு தெரிந்திருக்கிறதா?' மனதில் தோன்றிய கேள்வியை வார்த்தையிலும் வெளியிட்டான். விநோதனும் ஆமோதிப்பாய் தலையசைத்து எப்படி தெரியும் என்பதையும் கூறினான்.
அன்று வேலை முடிய வழக்கத்தை விட அதிக நேரம் ஆகியிருந்தபடியால் துணைக்கு வர சொல்லி விநோதனை அழைத்திருந்தாள் மாயா. அவன் வீட்டிலிருந்து கிளம்பியதும் தானும் ஆபீசில் இருந்து கிளம்பினாள். எப்படியும் போகும் வழியில் இடையில் அவனுடன் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு சென்றவள் யாரோ தன்னை துரத்துவதை அறிந்து வேகமாக முன்னேறினாள். எதிரில் வந்து கொண்டிருந்த விநோதனை அவளும் காணவில்லை. ஜீவனும் காணவில்லை. ஆனால் இருவரையும் கண்டுவிட்டு வினோதன் கூப்பிடும் முன்பாக விபத்து நடந்து விட்டது. மாயா மோதி விழுந்தவுடன் சில நொடிகளுக்கு வேகத்தை குறைத்த ஜீவன் மீண்டும் முன்னிலும் வேகமாக சென்றபோது தான் விநோதனுக்கு எதனால் இந்த விபத்து நடந்திருக்கிறது என்று புரிந்தது. அதுவரையில் ஜீவன் மாயாவுக்கு துணையாக வந்ததாக தான் வினோதன் நினைத்திருந்தான். எதையும் நினைப்பதற்கு நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து மாயாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினான். ஆனால் அதிகாலை வரை போராடியும் மாயா உயிர்பிழைக்கவில்லை. ஜீவன் இதை தன்னிலை மறந்து தான் செய்திருப்பான் என்பது ஒரு உற்ற நண்பனாக விநோதனால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே இதை தனக்கு தெரியும் என்று ஜீவனிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை. மற்றவர்களிடத்தில் சொல்லவும் இல்லை.
ஆனால் விபத்தை நேரில் பார்த்தது இவன் மட்டுமல்ல. இன்னொருவனும் தான். அந்த இன்னொருவன் மாயாவுக்கு தெரிந்தவன் என்பதோடு மாயாவை உயிருக்குயிராய் நேசித்த ஹரிஷ் இன் உயிர் நண்பனும் கூட. அவனுக்கு ஜீவன் வினோதனது நண்பன் என்பது அப்பொழுது தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. அதை ஹரிஷ் இடம் சொன்னான். ஆனால் ஹரிஷ் ஜீவனைக் கொலை செய்து விட்டுத் தான் மறுகாரியம் பார்ப்பேன் என்று கிளம்பியதும் மிரண்டு போனான். எவ்வளவு தடுத்தும் ஹரிஷ் கேட்கவில்லை என்ற பின் தான் விநோதனிடம் முறையிட்டான். அதற்குள்ளாக ஹரிஷ் ஜீவனை மயக்கம் வருமளவுக்கு அடித்து துவைத்திருந்தான். அவனிடமிருந்து ஜீவனைக் காப்பாற்றுவதற்குள் மற்ற இருவருக்கும் போதும் போதுமென்றாகி விட்டது.
எல்லாவற்றையும் வினோதன் சொல்லி முடித்தபின் ஹரிஷிடம் சென்று மன்னிப்பு கோரினான் ஜீவன்.
"மன்னிப்பு கேக்குறதால மாயா திருப்பி வரப் போறதில்ல. ஆனா எனக்கு இதை தவிர வேற என்ன பிராயச்சித்தம் பண்றதுன்னு தெரியல்ல. என்ன மன்னிச்சிடுங்க ஹரிஷ்" தடாலென ஜீவன் காலில் விழுந்து மன்னிப்பு கோரியதும் மற்ற மூவருக்குமே கண்கள் கலங்கி விட்டன.
ஹரிஷ் ஜீவனை எழுப்பி "நீங்க தான் என்னை மன்னிக்கணும். செய்த தப்ப உணர்ந்த உங்களை இப்டி காயப்படுத்தினதுக்கு மாயா கூட என்ன மன்னிக்க மாட்டா." சொல்லியவாறே கட்டித் தழுவிக் கொண்டான். மற்ற இருவரும் கூட அந்த அணைப்பில் இணைந்து கொண்டார்கள்.

எழுதியவர் : துளசி (28-Aug-17, 8:50 pm)
Tanglish : pothai or saabam
பார்வை : 358

மேலே