கண்ட நாள் முதலாய்-பகுதி-19

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 19

துளசியின் வீட்டை வந்தடையும் வரை அரவிந் அர்ஜீனைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்..அதை துளசி கவனித்திருந்தாலும் அவள் அதைப்பற்றி எதுவும் அவனிடம் கேட்கவில்லை...அவள் மனமும் பழையபடி சரியா தவறா என்ற போர்க்களத்தில் சுழலத் தொடங்கியிருந்தது..

பத்து நிமிடப் பயணத்தில் வீட்டை வந்தடைந்த துளசியும் அரவிந்தும் ஆர்த்தி எடுக்கப்பட்டு வீட்டினுள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்கள்...வீட்டினுள் காலடி எடுத்து வைக்கும் போதே துளசியின் மனம் இனி தனக்கும் அந்த வீட்டிற்குமான பந்தம் "எனது வீட்டிலிருந்து என் அப்பா அம்மாவின் வீடு" என்ற அடையாளத்திற்கு மாறிவிட்டது என நினைக்கும் போது இதுவரையில் பிரிவைப்பற்றியே எண்ணியிருக்காத அவள் உள்ளம் முதன் முதலாக குடும்பத்தையும் அந்த வீட்டையும் பிரிவதை நினைத்து கலங்கத் தொடங்கியது...அந்த கலக்கம் கண்ணீராக எட்டிப்பார்க்க அதை கரங்களால் யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டே உள்ளே சென்றமர்ந்து கொண்டாள்...

அரவிந் உள்ளே சென்றதுமே அவன் அப்பாவிடம் தன் போனை வாங்கி அர்ஜீனிற்கு அழைப்பினை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டான்...ஆனால் அவன் அழைப்புகளிற்குமே கிடைத்த பதில் போன் சுவிட் ஆஃப்பில் உள்ளதென்பதே...அவனது அலுவலக இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கதைத்தவனுக்கு அர்ஜீன் அங்கே வரவில்லை என்ற பதில் இன்னும் கலக்கத்தையே ஏற்படுத்தியது...அதை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவன் நண்பர்கள் சிலருக்கும் அழைப்பினை ஏற்படுத்தி கேட்டுப்பார்த்தான்..ஆனால் அதிலும் அவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே...உள்ளே மனம் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தாலும்...வெளிப் பார்வைக்கு சாதாரணமாக இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டான்...அப்போது அவன் அருகே வந்த அவனுடைய சித்தப்பா..

"அர்ஜீனுக்கு எடுத்துப் பார்த்தியா அரவிந்..லைன் கிடைச்சுதா..??"

"ஆஆ...சித்தப்பா...அவன் ஒபிஸ்க்கு எடுத்து கதைச்சன் அங்கதான் ஏதோ முக்கியமான மீட்டிங்ல இருக்கானாம்...அதான் அவனோட போன் கூட சுவிட்ச் ஆப்ல இருக்கு...நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சித்தப்பா அவன் இப்போ வந்திருவான்..."என்று அவரை ஆறுதல்படுத்த பொய்யுரைத்தான் அரவிந்...

"அப்படி என்னதான் வேலையோ??ஒரு வார்த்தை எங்க யார்கிட்டையாவது சொல்லிட்டு போயிருந்தா குறைஞ்சா போயிருப்பான்..?அண்ணனோட கல்யாணத்திற்கு கூட இல்லாம என்னதான் வேலையோ..?இன்னைக்கு வரட்டும் அவன்.."

"விடுங்க சித்தப்பா...ஏதோ அவசர வேலை என்டதாலதானே சொல்லாமலே போயிருக்கான்...வந்திருவான் சித்தப்பா...நீங்க போய் கூலா யூஸ் குடிங்க..எல்லாம் சரியாயிடும்..."

"சரி டா...இவனால உனக்கு வேற டென்சன்..."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சித்தப்பா...அவன் வந்ததும் நான் பேசிக்கிறேன்..."என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவனுக்கு அவரிடம் பொய்யுரைத்ததை நினைத்து குற்ற உணர்ச்சியாக இருந்தது..

என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவனை துளசியின் அப்பா பால் பழம் கொடுப்பதற்காக அழைத்துச் சென்றார்...

துளசியின் அருகே அமர்ந்திருந்த அரவிந்தனின் மனதில் அர்ஜீன் எங்கே போயிருப்பான் என்ற கேள்வியே சுழன்றடித்துக் கொண்டிருந்தது..அந்த மனநிலையோடே பால் பழத்தை துளசியோடு பகிர்ந்து உண்டவன் அவன் தங்கையும் துளசியின் தங்கையும் இணைந்து பண்ணிய கேலியிலேயே நினைவிற்கு வந்தான்..அனைத்தும் மறந்து அவர்கள் கேலியில் அவனும் இணைந்து கொண்டான்...

"அண்ணி பால் எப்படி இருக்கு..ரொம்ப ரொம்ப இனிப்பா இருக்கு போலயே.."

அரவிந்தனுடைய தங்கை அர்ச்சனா இப்படிக் கேட்டதும் ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று புரியாமல் இரண்டு கண்களையும் உருட்டிக் கொண்டிருந்த துளசியைப் பார்க்க தெவிட்டவில்லை அரவிந்துக்கு...

"அண்ணி மெல்லமா கண்ணை உருட்டுங்க இல்லைனா இங்க ஒருத்தர் இந்த உலகத்தை விட்டு வேற உலகத்தில பறக்கத் தொடங்கிடுவாரு.."

அர்ச்சனா அரவிந்தை வாரியதில் அசடு வழிய துளசியின் பக்கமிருந்த கண்களை விலக்கியவன் அர்ச்சனாவின் காதைப்பிடித்து திருகினான்...

"ஆஆஆஆஆ....விடு அண்ணா...அப்புறம் நீ பண்ற கூத்தையெல்லாம் ஊரைக்கூட்டிச் சொல்லிடுவேன்...பார்த்துக்கோ??"

"இங்க பாருடா..இவ என்னை மிரட்டுறாளாம்...ஊரைக் கூட்டி என்னடி சொல்லுவ...?"

"ம்ம்...என் அண்ணா அண்ணியை விழுங்கி விட்ற மாதிரி சைட் அடிக்கிறான்னு சொல்லுவேனாக்கும்..."

அவள் அப்படிச் சொன்னதும் குலுங்கி குலுங்கிச் சிரித்த அரவிந்தை பார்த்து கடுப்பாகிய அர்ச்சனா...

"இப்போ எதுக்குடா வீடே அதிர மாதிரி சிரிக்கிறாய்..?"

"பின்ன ஜோக் சொன்னா சிரிக்க மாட்டாங்களா..??" என் அறிவுக்கொழுந்து தங்கையே என் பொண்டாட்டியை நான் சைட் அடிக்காம வேற யாருடி சைட் அடிப்பாங்க...?"இதை ஒரு குத்தம்னு இவ ஊரைக்கூட்டி வேற சொல்லப்போறாளாம்..என்றவன் மீண்டும் சிரிக்கத் தொடங்கினான்...

"ஹி...ஹி...ஆமால்ல....சரி சரி ஏதோ ஒரு ஆர்வக் கோளாறுல சொல்லிட்டன்...அதுக்காக ரொம்பத்தான் பண்ணாத..."

அரவிந் அர்ச்சனாவோடே வழக்கடித்துக் கொண்டிருந்ததில் துளசியைக் கவனிக்கவில்லை...அர்ச்சனாவோடு கதைத்துக் கொண்டே துளசியைத் திரும்பிப் பார்த்தவன் வெட்கத்தில் சிவந்திருந்த அவள் கன்னங்கள் அவன் இதழ்களை வாவென்று அழைப்பது போலவே இருந்தது அவனுக்கு...

அப்போதுதான் அவளை இன்னும் விழுங்கி விடுபதை போல பார்த்தவன் ..தன்னை மறந்து அவள் அருகே இன்னும் நெருக்கமாய் தள்ளி அமர்ந்து கொண்டான்..அப்போது...

"ம்க்கும்...நாங்களும் இங்கதான் இருக்கோம் மாமா..."என்று தானும் அர்ச்சனாவும் அவர்கள் அருகே இருப்தை உறுதிப்படுத்திக் கொண்டாள் சுசி..

"எனக்கு வில்லன்கள் எல்லாம் வெளியில இருந்து வரத் தேவையில்லை...பக்கத்திலேயே இருக்குதுக..."

"ஒரு சின்னத்திருத்தம் மாமா...நாங்க வில்லன்கள் இல்லை வில்லிகள்.."என்றவாறே அர்ச்சனாவோடு ஹை பை கொடுத்துக் கொண்டாள் சுசி..

"இப்போ இது ரொம்ப முக்கியம்...ஆமா உங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா..?"

"என்ன அண்ணா இப்படிக் கேட்டுட்டாய்...உங்களை கவனிக்கிறத விட எங்களுக்கு என்ன அப்படி முக்கியமான வேலை இருந்திடப் போகுது..."

"அது சரி.."என்றவாறே அவன் நன்றாக தள்ளி அமர்ந்து கொண்டான்..

"ம்ம்...உன்னைப் பார்க்கவும் பாவமாத்தான் இருக்கு...சரி அண்ணி சொன்னா நாங்க இரண்டு பேரும் இங்க இருந்து போறோம்..என்ன சுசி ஓகேதானே..??"

"ஆமா...ஆமா...அக்கா நீ சொல்லு..நாங்க உடனே இடத்தைக் காலி பண்ணிறோம்.."

இப்போது துளசியின் நிலையோ அதோகதி என்றாகிவிட்டது...அவர்கள் பண்ணிக் கொண்டிருந்த கேலியில் ஏற்கனவே முகத்தை எங்கே கொண்டு மறைப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவள்..அவர்களிருவரும் அவளை நன்றாக மாட்டி விட்டதில் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசையத் தொடங்கினாள்...

"அக்கா மாவு பிசைஞ்சது போதும் எங்களுக்கு ஒரு முடிவைச் சொல்லு.."

அரவிந்தும் அவள் சொன்னாள் இதுக இரண்டும் கிளம்பிடுமே என்ற ஆவலில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

துளசிக்கோ இவர்களை கிளம்பச் சொன்னால் அவனிடம் தனியாக மாட்டிக் கொள்ள வேண்டும்...வேண்டாமென்று சொன்னால் அவர்களின் கேலிக்குள் சிக்கித்தவிக்க வேண்டும்...இரண்டில் எது நடந்தாலும் அவள் பாடு திண்டாட்டம்தான்...அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் வேறு ஒன்றைச் சொல்லி தப்பித்துக் கொண்டாள்...



தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (28-Aug-17, 7:00 pm)
பார்வை : 590

மேலே