பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள் --காதல் சுவை--உலகத் தமிழர்களுக்காக --

மங்கையின் மகிமை

வேல் வெல்லுமா - என்
விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா? (வேல்)

கதை சொல்லுமா - வாழும்
வகை சொல்லுமா
கடல்போல எழுந்தின்பக்
கரை துள்ளுமா? (வேல்)

கோழைக்கும் வீரத்தைக்
கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய்
இருப்பவள் மங்கை

வாழ்வினில் மோகத்தை
வளர்ப்பவள் மங்கை - ஆண்
மனதில் வீடுகட்டி
வசிப்பவள் மங்கை

மங்கைஎன் பார்வையில்
மலையரையும் - பகை
வாளும் ஈட்டியும்
என்ன செய்யும்? (வேல்)

கண்ணகி போல் நாளைக்
கழிக்கவும் தெரியும்
காதலை மாதவி போல்
ரசிக்கவும் தெரியும்

மன்னனைச் சகுந்தலைபோல்
மதிக்கவும் தெரியும்
மணிமேகலை போல
வெறுக்கவும் முடியும்! (வேல்)

[மஹாலட்சுமி,1960]

எழுதியவர் : (29-Aug-17, 12:57 pm)
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே