நீர் நிலைகளை பாதுகாத்தல்
நீரின்றி அமையாது உலகு... என்பது வள்ளுவன் வாக்கு. உணவு இல்லாமல் கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எத்தனை வளமிருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்பது தண்ணீர் பிரச்சனைதான். காவிரி, பாலாறு, தென்பெண்ணையாறு என வெளிமாநில நதிகளைத்தான் நீர் ஆதாரத்துக்காக நம்ப வேண்டியிருக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளில் தண்ணீரை சாதாரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும். மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆற்றையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கிறது. நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று இப்போது பணம் பண்ணும் தொழிலாகிவிட்டது. நதிகள் ஒன்றாக இணைந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும். அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும். சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகின்றன. ஆனால் எல்லா அரசுகளும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரு வாக்குறுதியாக அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஒதுங்கி விடுகின்றன.
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை. மழைக்காலங்களில் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் கவலைப் படுவதில்லை. அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று நீர்வள அமைச்சகத்தின் அறிவிப்பு நம்மை மிரளச்செய்கிறது. உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான்,
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. நிலத்தடி நீரை நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம். இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க அரசு கடும் சட்டம் இயற்ற வேண்டும். ஏரிகளை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவற்றை பட்டா போட்டு வீடு கட்டுகிறது, அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் கட்டுகிறது. இடப்பற்றாக்குறைக்காக நீர் ஆதாரங்களை கொள்ளையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நீரை பாதுகாக்கவும், சூழலின் சமன்பாட்டை நிலைத்திருக்கச்செய்வதும் மக்கள் கையில்தான் உள்ளது. நீரை சேமிப்போம், வருங்கால தலைமுறையை பாதுகாப்போம்.