தமிழகத்தின் நீர்வளமும் – விவசாயத்தின் எதிர்காலமும்

இரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. ! அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீ.–ம், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீ–ம் கிடைக்கிறது. குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீ.-நீரும் கிடைக்கிறது ! தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது. இதில் கணிசமான அளவு கடலில் கலந்துவிடுகிறது ! கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்!

மேற்பரப்பு நீர்வளம் :

17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் (தனியார் குளங்கள் உட்பட) ஆகியவை மூலம் ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! (ஒரு கன மீட்டர் நீர் =1000 லிட்டர்). இதில் சரிபாதி நீரானது (நிலத்தடி நீர் கசிவுக்கும், அதிக வெப்பத்தால் நீராவியாவது போக) நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது. எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது 24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !

நிலத்தடி நீர்வளம் :

நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி.க.மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! இதில் 60 சதவீத அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கனவே உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி விட்டோம்! தற்போதைய கையிருப்பு 40 சதவீதம் (8875 மி.க.மீ) மட்டும் தான் !

“மொத்தமுள்ள 386 வட்டாரங்களில், 239 வட்டாரங்கள் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றன. இதில் 139 வட்டாரங்களில் ஒரு வருடத்தில் ஊறும் நீரில் 90 சதவீத அளவுக்கு மேல் உறிஞ்சப்படுகிறது ! 11 வட்டாரங்களில் குடிக்கத் தகுதியற்ற உப்புநீராக மாறிவிட்டது ! அரியலூர், சேலம், கோவை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள 10 வட்டாரங்களில் புதிதாக கிணறு, போர் தோண்டுவதற்கு தடைவிதித்து கருப்புப் பகுதியாக (black area) அறிவித்துள்ளது தமிழக அரசு ! 136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன !” என்று தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் 2009-ம் ஆண்டு ஆவணம் கூறுகிறது !

மொத்த நீர்வளமும் – எதிர்காலத் தேவையும் !

மாநில நீர்வள ஆதார நிறுவனங்களின் 1998-ம் ஆண்டு அறிக்கையின் படி, மேற்பரப்பு நீர் + நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தின் மொத்த நீர்வளம் 46.540 மி.க.மீ.(1643 டி.எம்.சி) ! என்றும், வளர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கணக்கில் கொண்டால் 2001-ல் 54,395 மி.க.மீ (1921 டி.எம்.சி) –யும், 2050-ல் 57,725 மி.க.மீ.ட்டர் நீரும் தேவைப்படும் என வேளாண் வல்லுனர்களும், நீரியல் நிபுணர்களும் மதிப்பிட்டுள்ளனர் ! 2001-லேயே 286 டி.எம்.சி. நீர் பற்றாக்குறை என்றால், தற்போது இப்பற்றாக்குறை 300 டி.எம்.சி-க்கு மேலும் அதிகரித்திருக்கும் என உறுதியாக நம்பலாம்!

2050-ல், 4% முதல் 6% வரை மக்கள் தொகை அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகத்திற்கான நீர்த்தேவை 55.72%-மும், தொழில்துறையின் தேவை 27.7%-மும் அதிகரிக்கும் எனவும், தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் குறைந்தபட்ச ஆற்றுநீர் வழிந்தோடுவதைப் பராமரிப்பதற்கு 1600 மி.க.மீ. நீர் தேவைப்படும் எனவும் துல்லியமாக மதிப்பிடும் அறிக்கை, விவசாயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும் ” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, விவசாயத்திற்கான நீர்த்தேவையை மதிப்பிடாமலே செல்கிறது ! அதாவது, எதிர்கால தமிழக விவசாயம் தற்போதுள்ள நிலைமையை விட மிக மோசமாக சீரழிந்து போகட்டும். விவசாயிகள் நிலத்தை விட்டே ஓடட்டும். என்பதை இந்த அரசு, ஏற்கனவே தீர்மானித்துவிட்டது என்பதுதான் இதன் பொருள் !

பாசனத் திட்டங்களின் அவலநிலை !

பாசனத் திட்டங்களின் அவலநிலை !

கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கால்வாய் பாசனத்தில், அண்டைமாநிலங்களின் இனவெறி அரசியல் ஒரு புறமிருக்க, நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை. 1960-களில் இருந்ததைவிட சற்று கூடுதலாக 21.5 லட்சம் ஏக்கர் என்ற அளவிலேயே நீடிக்கிறது !

குளங்கள் மூலம் பாசனவசதி பெற்றவை 1960-ல் 22.5 லட்சம் ஏக்கராக இருந்தது ! இது 2000–ல் 15.75 லட்சம் ஏக்கராகவும், தற்போது 10 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது ! சராசரியாக ஒரு குளத்தின் மூலம் சராசரியாக 48 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இன்று 30 ஏக்கருக்கும் கீழாக குறைந்துவிட்டது!

கிணற்றுப்பாசனத்தின் நிலையோ இதைவிட பரிதாபமாக கிடக்கிறது. நிலத்தடி நீர்வளம் தான் இதன் ஆணிவேர் ! நிலத்தடி நீரே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட பிறகு கிணற்றுப் பாசனம் மட்டும் எப்படி உருப்படும்? “மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. மொத்தப் பாசனப்பரப்பில் 52% நிலமான சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் கிணற்றுப்பாசனம் மூலமே பயன்பெறுகின்றன. இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியான ‘தமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்’ என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதுதான் மாநிலத்தின் மின் பற்றாக்குறைக்குக் காரணம்” என்ற அரைவேக்காட்டு அறிவாளிகளின் கூற்று எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் கன்னத்தில் அறைந்து நிரூபிக்கிறது ! கிணற்றுப் பாசனம் என்பது விவசாயிகள் தனது சொந்த மூலதனத்தில் உருவாக்கிக் கொண்டது ! அரசு முதலீடு இதில் எதுவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது !

தொகுப்பாகப் பார்த்தோமானால், பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் தத்தளிப்பதையும், தற்போதுள்ளதை விட மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாக இருக்கும் ஆபத்தையும் மேற்கண்ட விவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன !

எழுதியவர் : (30-Aug-17, 12:33 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1232

மேலே