கண்ட நாள் முதலாய்-பகுதி-20
.....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 20
"நான் அம்மாகிட்ட கொஞ்சம் பேசனும்..நீங்க பேசிட்டு இருங்க.."என்றவள் தப்பித்தால் போதுமென்று அம்மாவைத் தேடிச் சென்றுவிட்டாள்...
"அக்கா கிரேட் எஸ்கேப்.."
அவள் உள்ளே சென்றதும்..அரவிந்தனுக்கு மிகுந்த ஏமாற்றமாக போய்விட்டது...அந்த கடுப்பை அர்ச்சனாவிடமும் சுசியிடமும் காட்டினான்..
"இப்போ எதுக்கு எங்களை முறைக்கிற..நாங்க உனக்கு நல்லது பண்ணதான் நினைச்சோம்...அண்ணி இப்படி எஸ்கேப் ஆகுவாங்கன்னு யார் நினைச்சா.."
"ஒழுங்கா நீங்களாவே இடத்தைக் காலி பண்ணியிருந்தா அவள் ஏன் உள்ளே ஓடப்போறாள்..??"
"ரொம்பத்தான் பண்ணாத போடா...இனி எப்பவும் அண்ணி உன் கூட தானே இருக்கப் போறாங்க...ஒரு ஐஞ்சு நிமிசம் உன்னால அவங்க இல்லாம இருக்க முடியாதா..??..."என்றவள் அவனது பதிலுக்கு காத்திருக்காமல் சுசியையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்...
அர்ச்சனாவின் கேள்விக்கு அரவிந்தனின் மனம் ஆம் என்ற பதிலையே உரைத்தது...துளசி அருகில் இல்லாத ஓர் நொடி கூட அவனுக்கு வெறுமையாகத்தான் தோன்றியது..அவளில்லாமல் இத்தனை வருடங்களை எப்படி கடந்து வந்தேன் என்று அவன் பல தடவைகள் யோசித்ததுண்டு...அவள் அவனுக்கானவள் என்பதை அவளை என்று கண்டானோ அன்றே முடிவு செய்து கொண்டான்...அவளில்லாத ஒரு வாழ்க்கையை அவன் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க விரும்பவில்லை...
உள்ளே சென்ற துளசி...சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கலைவாணியை பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள்...கண்கள் அவளை அறியாமலேயே கண்ணீரைச் சிந்தத் தொடங்கின...அவள் அழுவதை திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்து கொண்ட கலைவாணி...
"என்னடா இது...இன்னும் சின்னப்புள்ள மாதிரி அழுதுகிட்டு...கல்யாணநாள் அதுவுமா...கண்ணைத் துடைச்சுக்கோ..."என்றவாறே அவள் கண்களைத் துடைத்த கலைவாணியின் கண்களும் கலங்கியிருந்தன...
"எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு மா...உங்களை எல்லாம் விட்டிட்டு என்னால எப்படிம்மா இருக்க முடியும்...?"என்றவாறே அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் துளசி..
அவள் தலையை வருடியவாறே கலைவாணி அவளை ஆறுதல்படுத்த தொடங்கினார்...
"எல்லா பெண்களுடைய வாழ்க்கையிலும் இந்த பிரிவு கட்டாயம் வந்துதான் ஆகும் டா...பெண்ணாகப் பிறந்தவள் உறவுகளை இணைக்கிற ஒரு பாலம் மாதிரி...அவள் என்னைக்குமே ஒரு இடத்தோட மட்டுமே தேங்கி நிற்கிறதில்லை..இருக்கிற இடங்கள்தான் மாறுமே தவிர உனக்கும் எங்களுக்குமான பந்தம் என்னைக்குமே மாறப்போறதில்லை..உணர்வு பூர்வமான உறவுகளிற்கு பிரிவு என்டதே இல்லை டா...எப்போ வேணும்னாலும் நீ இங்க வரலாம்..உன்னை எங்களுக்கு பார்க்கனும்னு தோனிச்சின்னா நாங்க உன்னை பார்க்க வரப் போறோம்...இதுக்கு போய் சின்னக் குழந்தை மாதிரி அழலாமா??...என் பொண்ணு எப்பவுமே சிரிச்சாத்தான் அழகு.."என்று கலைவாணி கூறி முடிக்கும் போதே துளசியின் முகத்தில் லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது...அப்போது அங்கே வந்த யோகேஸ்வரன்...
"என்ன அம்மாவும் பொண்ணும் கொஞ்சிட்டு இருக்கீங்க..??"
"என் பொண்ணை நான் கொஞ்சுறன்...உங்களுக்கு என்ன இப்போ அதில பிரச்சினை..??"
"இது என்ன வம்பா போச்சு...கேள்வி கேட்டது ஒரு குத்தமா..??என்றவாறே துளசியின் பக்கம் திரும்பி அவளோடு பேசத் தொடங்கினார்..
"இப்போதான்மா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு...எந்த அப்பனுக்குமே தன்னோட பொண்ணு பிறந்த இடத்தில இருக்கிற மாதிரியே போற இடத்திலையும் சந்தோசமா இருக்கனும்கிற கவலை இருக்கும்...உன் விசயத்தில எனக்கு முழு நம்பிக்கை இருக்கு...என்னோட நண்பனோட குடும்பத்தில நீ அவங்களுக்கு இன்னொரு மகளாகவே இருப்ப டா...எப்பவும் நீ சந்தோசமாவே இருக்கனும்டா..."என்று சொல்லும் போது அவரது கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தது...
அதைப் பார்க்கும் போதுதான் துளசிக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது...அவளது அப்பா எப்போதுமே வேலை வேலை என்று ஓடிக் கொண்டேயிருப்பவர்...அவரோடு பேசக் கிடைக்கும் நேரங்கள் மிகவும் அரிதானவை...சில நேரங்களில் அம்மாவைப் போல் அப்பாவிற்கு நம் மேல் பாசமில்லையோ என்று கூட அவள் நினைத்தது உண்டு...ஆனால் இன்று அவர் கண்களில் தெரிந்த கண்ணீரில் அவள் புரிந்து கொண்டாள்...அவள் மீதான அவரது அன்பு மிகவும் ஆழமானதென்று...அந்தக் கண்ணீருக்கு ஈடு இணையாக இவ்வுலகில் வேறெதுவும் இல்லையென்று தோன்றியது அவளுக்கு...
அன்பின் உலகத்தில் ஒருவரை ஒருவர் மறந்து நின்று கொண்டிருந்த அந்த மூவரையும் சுசியின் குரல்தான் நினைவிற்கு கொண்டு வந்தது...
"அக்கா...உனக்குத்தான் கோல்..."என்றவாறே அவள் கைகளில் போனைக் கொடுத்தவள்,கலைவாணியையும் கையோடு அழைத்துச் சென்றாள்...
"பேசிட்டு சீக்கிரமா வாம்மா..."என்றவாறே யோகேஸ்வரனும் அங்கிருந்து சென்றார்...
அனைவரும் சென்றதும் போனை எடுத்துக் காதில் வைத்தவள்,மறுபக்கத்திலிருந்து எந்த பதிலும் வராமலிருக்கவே...
"ஹலோ...யார் பேசுறீங்க...??"என்றாள்...
தொடரும்.....