அனிச்சம் பூவே உதிராதே

காற்றின் தீண்டலுக்கே
காயம் படுமா ஒரு மலர் ?
தென்றலின் விரலுக்கு
தெரியுமா வன்முறை ?

வண்ணத்துப் பூச்சியின்
கால்கள் பட்டு
உதிர்ந்துபோன
பூக்களுண்டா ?

நிலவின் ஒளியில்
மல்லிகை கருகுமென்றால்
பௌர்ணமிகளெல்லாம்
பாழாய்ப் போய்விடாதா ?

பனித்துளி படர்ந்ததால்
உறைந்து இறந்துபோன
ரோஜாவைப் பார்த்ததுண்டா ?

வண்ணங்களால்
வசீகரிக்கும் பூக்களுண்டு
வாசனையால்
கைது செய்யும்
பூக்கள் அதிகம் !

பெயரிலேயே போதையூட்டும்
பூவை
பிய்த்துப் போட
பித்தனுக்கும் மனசு வராது

காதல் சொல்லப் பூக்கள் தரலாம்
கசக்கியெறியும் எண்ணம்
கனவிலும் நுழையாதென்று
சொல்லித்தான் தெரியவேண்டுமா
அனிச்சம் பூவே !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (31-Aug-17, 7:59 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 498

மேலே