இங்கே நிம்மதி - நகைச்சுவை குட்டிக் கதை

....................................................................................................................................

இங்கே நிம்மதி

நிம்மதி எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிப்பார்களாம் மாந்தர். ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் கிடைக்காத ஒன்று கா.து. பானு நயினார் வளாகத்தில் கிடைத்தது என்றால் அது ஆச்சரியமாக இருக்கத்தானே செய்யும்?? அதுவும் ஒரே இடத்தில், இருபது இருபத்திரெண்டு பேருக்கு நிம்மதி கிடைத்ததென்றால் அது உலக அதிசயம்தானே??

மேற்படி கா.து. பானு நயினார் வளாகத்தில் ஒரு ஏடிஎம் மெஷின் இருக்கிறது.. நாங்கள் சுத்துவர பதினெட்டுப்பட்டி தெருவில் இருப்பவர்களின் டூ வீலர்கள் பிரேக் பிடிக்காமலேயே கச்சென்று நிற்குமிடம் பெண்கள் கல்லூரியல்ல; அந்த ஏடிஎம்தான். பெயர், பிறந்த நாள் எல்லாம் கேட்டு பிறந்த நாள் வாழ்த்துக் கூட சொல்கிற பாசக்கார ஏடிஎம் அது.. டெபிட்கார்டை உள்வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் விளையாடும்.. பணத்தைத் துப்பிய பிறகு டெபிட்கார்டை தூக்கியெறிந்து விடும்...!

அன்றைக்கு ஒரு அவசரச் செலவு..

நடுத்தரக் குடும்பம் ஞாயிற்றுக் கிழமையானால் அழுக்குக் கைலியுடன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்க்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் இருநூற்று இருபதாவது திருத்தமாகும்.. அதையும் மீறி வெளியில் கிளம்புகிறோம் என்றால் என்ன ஒரு அவசரச் செலவு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்..

வழக்கப்படி ஏடிஎம் போய், வழக்கப்படி அது கேட்கிற விவரங்களைக் கொட்டிவிட்டு, மூவாயிரம் ரூபாய் வேண்டுமென்று டைப் அடித்தேன்.. நூறாக வேண்டுமா என்று கேட்டது. நான் ஓகே போட்டவுடன் நூறு ரூபாய் நோட்டுக்கள் இல்லை என்றது.. இல்லை என்றால் எதற்கு கேட்க வேண்டும் என்று யாரைக் கேட்க வேண்டும்??

ஆயிரம் ரூபாய் வேண்டுமா என்றது. ஓகே போட்டவுடன் பூனை, பாத்திரத்தை உருட்டுவதைப் போல சில ஒலிகளுடன் மூன்று துண்டுச் சீட்டுகள் வெளிவந்தன. ஒருவேளை கவர்ன்மெண்ட் புதிதாக அச்சடித்த ஆயிரம் ரூபாய்த் தாள்களோ என்று ஆச்சரியப்பட்டு எடுத்துப் பார்த்தால், “ ஸாரி, ஏடிஎம் ஈஸ் அவுட் ஆஃப் ஆர்டர்.. ரெக்ரெட்டட் ஃபார் இன்கன்வீனியன்ஸ் ” என்று எழுதியிருந்தது.

மூவாயிரத்துக்கு வெற்றிகரமாக மூன்று துண்டுச் சீட்டுக்கள் வாங்கிய அசட்டுக் களையுடன் டெபிட்கார்டுக்காக காத்திருந்தேன்.. ஒரு நொடி..! ஒரு நிமிடம்..! பத்து நிமிடம்...!

ஊஹூம்..!

ஏடிஎம்மை அப்படி தட்டி, இப்படி தட்டி எப்படி தட்டினாலும் ஏதோ நசுங்குவதைப் போல் ஒலி கிளம்பி திகில் கொள்ள வைத்ததே ஒழிய டெபிட் கார்டு வரக் காணோம்..

என்ன பண்ணுவது?? இதயம் “ டபக் டபக் ” என்று தண்டவாளத்தில் ஓடியது..!

ஒரு முறை என் மூன்று வயது மகனுக்கு மிட்டாய் தொண்டையில் மாட்டிக் கொண்டபோது என் மனைவி அவன் கைகளை பின்னால் கட்டி, முதுகில் ஒரு எக்கு எக்கியது ஞாபகம் வந்தது..!

ஏடிஎம் மெஷினுக்கு கை இல்லை; முதுகு இருந்தது.. என்ன பயன்? என் முழங்கால் வலித்ததுதான் மிச்சம்..

வங்கி, வாடிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் போன் போட்டேன்..

“ டெபிட் கார்டை முடக்கிடுங்க.. ரெண்டு மாசம் கழிச்சு சரி பண்ணிக்கலாம் ” என்றார் மானேஜர்..

பாவிகளா ! ! ! ரெண்டு மாசம் வரைக்கும் நீயாடா எனக்கு சாப்பாடு போடுவே??

“ ஏங்க?? இதோ வந்துடறேன்னுட்டு போனவர் எங்க மசமசன்னு நின்னுட்டிருக்கீங்க?? ” என்று அலைபேசியில் அர்ச்சித்தாள் மனைவி..

“ டெபிட் கார்டு மாட்டிகிச்சுடி.. ” என்றேன்..

“ வந்தா டெபிட் கார்டோட வாங்க.. இல்ல அப்படியே போயிடுங்க.. ” என்று போனை வைத்து விட்டாள் ராட்சசி..

எந்த சாமிக்கு எந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் விட்டேன், யார் முகத்தில் விழித்தேன்.. குரு பெயர்ச்சி எப்படி என்றெல்லாம் யோசனை ஓடியது..!

என்னைப் போல் பாவப்பட்ட ஜென்மம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். வலையில் அகப்பட்ட புறா நான்தான் போலும்..

அண்டையில் சில பேர் நடந்த வண்ணமிருந்தனர்.. சிலர் வேர்க்கடலை கொறித்துக் கொண்டு.. இரண்டு பேர் சதுரங்கம் விளையாடிக் கொண்டு..

அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்த சமயம் செக்யூரிட்டி ஒரு வளர்த்தியான சின்னப் பையனோடு வந்தார்.. பையனின் கைகளில் ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் இத்யாதி..

பையன் வந்து ஏடிஎம் மெஷினோடு போர் புரிந்தான். தலைநகரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஒரு எஃகுப் பெட்டியை வெளியே எடுத்தான்..

எட்டிப் பார்த்தேன்..

ஏகப்பட்ட டெபிட் கார்டுகள்..!

செக்யூரிட்டி சில பேரை கையால் அழைத்தும், சில பேரை அலைபேசியில் விளித்தும் கூப்பிட,
அண்டையிலிருந்த அத்தனை பேருமே ஏடிஎம் முன்னால் குழுமி விட்டனர்..! !

அடக் கடவுளே..! வலையில் அகப்பட்டது நிறைய புறாக்கள்..! ! !

“ இது ரங்கராஜன்.. இது பானுமதி.. இது கையெழுத்துப் போடல..! ” சீட்டுக்கட்டை விரித்தாற் போல் விரித்து டெபிட் கார்டுகளை பட்டுவாடா செய்தார் செக்யூரிட்டி..

வாராது வந்த மாமணியாய் என் கார்டை நான் கௌவினேன்.

“ அப்பாடா..! ! வயித்தில பாலை வார்த்தீங்க.. ”

“ எனக்கு பாலோட டிக்காஷனும் சர்க்கரையுமே வார்த்திருக்கீங்க.. ! ! ”

வாழ்த்து மழையில் நனைந்தனர் களம் கண்ட மெக்கானிக்கும் செக்யூரிட்டியும்.. !

ஒருத்தர், “ உங்களுக்கு எதுனா கொடுக்கணும் போல இருக்கு.. இருக்குறது இதுதான் ” என்று ஒரு ரூபாய் நாணயம் எடுத்து மெக்கானிக்கிடம் நீட்டினார்..

மெக்கானிக் “ பரவாயில்லைங்க.., பரவாயில்லைங்க..! ” என்று பெருந்தன்மையோடு மறுக்க, நாங்கள் ஆனந்தக் கண்ணீர் உகுத்தோம்..!

எல்லோருக்கும் சந்தோஷம்..! ஒரு நிம்மதி...!

ஏடிஎம்முக்கு வந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதைப் புறந்தள்ளுங்கள்..! இந்த நிம்மதி தற்காலிகமானது தான் என்பதையும் விட்டு விடுங்கள்..!


நிம்மதி நிம்மதிதானே ? ? ? ?


..............................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (1-Sep-17, 12:43 pm)
பார்வை : 413

மேலே