இறுதி நிமிடம்

ஒரு மூடிய கதவின் வெளித்தோற்றத்தை பற்றியது ...

பாரதியாரின் புகைப்படமும் நா.முத்துக்குமாரின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது

" தினமும் ஒரு புதிய படைப்பினை படைத்து கொண்டே இரு " என கருப்பு வெள்ளை நிற படத்தில் நா.முத்துக்குமார் சாந்தமாக இருக்கையில் நாம் வீழ்ந்தாலும் நம் படைப்புகள் விழ்வதில்லை என்று ரௌத்திர கண்கள் 'சிமிட்டாமல்' பாரதி முத்துவிடம் கதவோடு பசையில் ஒட்டி கொண்டு பேசி இருக்கும் போது முண்டாசு பாரதியின் தலையில் ஓங்கி கொட்டி கொட்டி

" டேய்..டேய் ...கதவ தொற டா ....டேய் " என்று அவன் சசிகலா அம்மா கதவை தட்டி இன்று அவன் தூக்கத்தின் கனவையும் களைத்தாள் ஆனால் மக்களின் குறைகளை கேட்டும் கேட்காமல் இருக்கும் அரசாங்கம் போல ஆனந்தும் தூங்கி கொண்டே இருந்தான்

யாரு இந்த ஆனந்த் ?
ஆனந்த் பி.இ, ( ஈ.சி ) ஆனால் இந்த பெயருக்கு பின் வரும் பட்டத்தை வாங்கி கருப்பு கவுன் போட்டுக்கொண்டு ஒரு போட்டோ எடுத்து வீட்டில் தொங்க விடுவதற்குள் படாதபாடு தான் பட்டான் என்பது வேறு கதை .ஏதோ ஒரு கனவை களைத்தாள் என்று கூறினேனே அது அவன் கதவில் தொங்கி கொண்டிருக்கும் கவிகளின் வார்த்தைகளையே ... ஆங்கில வழி கல்வி பயின்றவன் இருந்தும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த எதுகை மோனை வைத்து கொண்டும் , இரண்டு காதல் தோல்வியின் அனுபவம் கொண்டும் தன் முதல் காதலி தமிழ் தான் என்று மீண்டும் காதலிக்க தொடங்கினான் . சில பல ஹைக்கூ கவிதைகள் ,காதல் ,காமம் ,சமூகம் என வட்டங்கள் விரிந்தாலும் அந்த வட்டத்தின் ஆரம் (radius) குறைந்தது . இப்போது உள்ள இளைஞர்களை போலவே இவனும் பொறியியல் படித்த பின்னரே தன் கனவிற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்தான் , ஆனால் பல வேடிக்கை மாந்தரில் இவனும் ஒருவன் ஆதலால் அவனால் யோசிக்க மட்டுமே முடிந்தது இன்று "survival of the fittest " ஆக கணிபொறிக்கு முன் TARGET TARGET என்று பொத்தான்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறான் !

சரி கதவை தட்டுவதில் இருந்து மீண்டும் தொடருவோம் "டாமர் ..டப் .டப் ..டேய் ..கதவ தொற டா...." நல்ல வேளை பாரதி படத்தில் ஒட்டி கொண்டு இருந்தார் ..என்னா அடி ( ஒரு வேலை அந்த அடி "ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறியதால் கூட இருக்கலாம் இல்லையேல் தமிழில் சமஸ்கிருத சொர்கள் சேர்த்து கவி பாடியதால் கூட இருக்கலாம்)..

ஆனந்த் கதவை திறந்தான் ..

"என்னடா எவ்ளோ நேரம் தட்டுறது ...என்ன இது புது பழக்கம் கதவ மூடிட்டு தூங்குற..ஏன் கதவ மூடுன"

ஆனந்த் தனது கண்ணாடியை துடைத்து மாட்டும் பொழுது மியாவும் சன்னியும் கண் முன் வந்து போனார்கள் ஆனால் கதவை முடியதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல ....

" 7.30 மணிக்கு கெளம்புனா போதும் 9 மணி officeக்கு ஆனா 6 மணிக்கே fan ஆ off பண்ணிறீங்க அதான் பூட்டுனேன் "

" போய் பால் வாங்கிட்டு வாடா தம்பி க்கு எக்ஸாம் இருக்கு "

அவன் வாய் கொப்பளித்து விட்டு கடைக்கு சென்றான் ..அவன் சென்ற பிறகு வீட்டில் ..

"fan ஆப் பண்றேனாம் கரண்ட் பில் எவ்ளோ வருது தெரியுமா " என்று இட்லி சட்டியிடம் சண்டை போட்டுக்கொண்டே புலம்பி கொண்டு இருந்தாள்

ஆனந்த் மளிகை கடையில் அரை லிட்டர் பால் வாங்கி விட்டு தொங்க விட்டு இருக்கும் செய்தி பாதகையை பார்த்தான்
" பெட்ரோல் டீசல் விலை உயர்வு !
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் "

அரசாங்கத்தை திட்டலாம் என்று நினைத்தாலும் நம்மகிட்ட தான் பைக் இல்லயே நாம ஏன் எதை பத்தி யோசிக்கனும் என்று இணைத்து கைலியை தூக்கி காட்டி கொண்டு நடையை கட்டினான் !

சித்தியிடம் பால் பாக்கெட்டை கொடுத்து விட்டு குளிக்க சென்றான் ...மாதத்தின் இறுதி நாள் என்பதை டூத் பேஸ்ட் நினைவு படுத்தியது . அதன் கழுத்தை ஏமாற்றிய காதலியின் கழுத்தாக எண்ணி அழுத்தி ஒரு சொட்டு பசையை எடுத்து பல் துலக்கி குளித்து கிளம்பினான் .

அடுத்து அவன் கவலையெல்லாம் இந்த MTC பேருந்தின் பயணத்தை பற்றியதே ...
என்றுமே உக்கார இடம் கிடைக்காத பயணம் ..
"உள்ள வா உள்ள வா படில நிக்காத "
உள்ள எங்கடா இடம் இருக்குன்னு கேக்கணும்னு தோணும் கேக்க மாட்டான்
" checking வருவாங்க டிக்கெட் எடுத்துருங்க " என்ற நடத்துனரின் அதட்டல் ...
"படில நிக்குறவன்ல ஏறி இறங்கு " அப்படி சொல்லியும் சிலர் அப்படியே நிற்க
தினமும் ஏதோ ஒரு சண்டை ...
நிக்க இடம் இல்லாத இறுக்கம் ...
மழை காலத்தில் பேருந்தின் உள்ளேயும் குடை பிடித்து தான் நிற்க வேண்டும் ஆனால் பிறர் கண்ணில் குத்திவிடும் என்பதால் அதையும் செய்வதில்லை அந்த நேரத்தில் மழை கவிதை தோன்றுமா அவனுக்கு ?? கேட்டால் மசுறு கவிதை என்று திட்டி விடுவானோ ??
இடது பக்கம் முழுவதும் பெண்களுக்கு என்றாலும் வலது புறமும் சிலர் தலையில் ரோஜா பூ மல்லிகை பூ இருந்து எரிச்சல் உண்டாக்கும் இருந்தும் பெண்ணியம் பேசுவதால் பொறுத்து
கொள்வான் ! காலையை விட மாலை பொழுது இன்னும் கொடுமை டிராபிக்கில் சிக்கி வருவதற்குள் 10 தெலுங்கு படம் பார்த்த நபராக வீடு வந்து சேர்வான் !

இதனால் இம்முறை சம்பளம் வந்தவுடன் அதிகம் milege தரும் splender passion ஏதாவது வாங்கி விடலாம் என்று அவன் நண்பனிடம் விசாரித்து வைத்து இருந்தான் !

இட்லி வைத்து விட்டு மொளக பொடிக்கு மெல் நல்லெண்ணையை ஊற்றி அதன் மேல் இதையும் ஊற்றினால்

" இன்னைக்கு தான சம்பள நாளு பா "

" ஆமா " ( மத்ததுக்கு எல்லாம் டா ..இதுக்கு மட்டும் பா வா )

"சரி சரி ...அபிய coaching class சேக்கணும் ..."

" என்ன கோச்சிங் .."

" நீட் entrance க்கு "

" என்ன விளையாடுறீங்களா எட்டாவது படிக்குற பையனுக்கு எதுக்கு அதுக்குள்ள "

" ஆமா அபி cbse படிக்குறான் பாரு பக்கத்து வீட்ல இருக்க பையன நேத்து தான் செத்துருக்கா .. இப்பல இருந்து போன தான் பாஸ் ஆக முடியும் "

" சேரி fees எவ்ளோ "

" 5 ஆயிரம் பா "

"சரி " என்று சொல்லி பைக் வாங்கும் கனவை களைத்து நடையை கட்டினான் இல்லை என்று சொல்லி இருக்கலாம் அதுக்கு பின்னர்
"உங்க அப்பா மட்டும் என்ன இழுத்துட்டு வராம இருந்து இருந்தா" என்று அவர் புகைப்படத்திற்கு முன்பு அழுகும் காட்சியெல்லாம் வரும் என்பதை உணர்ந்து நகர்ந்தான் ..

பஸ் பயணம் * அலுவலக வேலை * மீண்டும் பஸ் பயணம் * முடிந்து

வாங்கிய சம்பளத்தை வீட்டில் கொடுத்து விட்டு அவன் அறைக்குள் நுழைத்தான் இம்முறை தாழ்ப்பாள் போடவில்லை ..

பேனாவையும் , பேப்பராயும் எடுத்து
கவிதைகள் எழுத வார்த்தைகள் தேடினான் கிடைக்க வில்லை இந்த குடும்ப சுமையும் நகரின் இரச்சலும் அவன் வரிகளை கொன்று இருந்தது ...மிகவும் போராடி இரண்டு வரிகள் எழுதி தூங்க சென்றான் !

" கனவுகள் பெரிதனால் நீண்ட உறக்கமும் தேவையே ..
வலியில்லாமல் இருக்கட்டும் எழுதுகோளின்
கூர்முனைகளே ..."
" இறுதி நிமிடம்"

இறுதி நிமிடம் என்பது அவனில் இருக்கும் கவிஞனுக்கு மட்டுமே ஆனந்த் பி.இ (இ.சி) க்கு அல்ல

எழுதியவர் : ஷாஜன் கவிதா (1-Sep-17, 11:47 am)
சேர்த்தது : ஷாஜன் கவிதா
Tanglish : iruthi nimidam
பார்வை : 278

மேலே