கண்ட நாள் முதலாய்-பகுதி-21
....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 21
"ஹலோ யார் பேசுறீங்க..??"
"வாழ்த்துகள் மிஸஸ் துளசி அரவிந்தன்..."என்றவாறே பவியின் குரல் போன் வழியாக ஒலித்தது...
"அட நீதானா...என்ன கொஞ்ச நேரத்திற்கு பேச்சையே காணோம்..?"
"நெட்வோர்க் கொஞ்சம் ப்ரோபிளம்டி அதான்...அப்புறம் மேடமோட ரொமான்டிக் சீன்ல நான் கரடி மாதிரி நுழைஞ்சிட்டனோ..??"
"இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...அப்பா அம்மா கூட கதைச்சிட்டு இருந்தேன்...ரொம்ப கஸ்டமா இருக்குடி...எல்லாரையும் விட்டிட்டு எப்படித்தான் இருக்கப் போறேனோ..??
"என்ன மேடம் பீலிங்கா...இது உனக்கு செட்டே ஆகல.."
"சும்மா போடி...உனக்கும் இப்படியொரு நாள் வரும்தானே..அப்போ கவனிச்சுக்கிறேன் உன்னை.."
"அது சரி...உன் கல்யாணம் நடந்ததும் நடந்திச்சு...என்னோட அம்மா என் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சு என் காது இரண்டையும் புண்ணாக்கிட்டாங்க..."
"ஏன் இப்படியே இருந்திடலாம்னு ஏதும் பிளான் வச்சிருக்கியா என்ன...??அவங்களுக்கும் நீ ஒரே பொண்ணு...நீ என்னடான்னா வேலை,படிப்பென்டு ஓடிட்டே இருக்காய்...சீக்கிரமா கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லி பண்ணிக்கிற வழிய பாரு..."
"வர வர நீ பாட்டி மா மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டாய்...எனக்காக ஒரு அடிமை பிறக்காமலா போயிருப்பான்...அவன் கண்ணில பட்டதும் உடனே பண்ணிக்க வேண்டியதுதான்..."
"யார் பெத்த பிள்ளையோ...உன்கிட்ட வந்து சிக்கி அவஸ்தைப்படப் போறான்..."
"ரொம்பத்தான் போடி.."
"ஆமா இது என்ன நம்பர் புதுசா இருக்கு..??
"இனிமே இதான்டி என் நம்பர்...சேவ் பண்ணிக்கோ..."
அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே ஆதி வந்து துளசியை வருமாறு அழைத்தான்...அத்தோடு பவியுடனான அழைப்பை முடித்துக் கொண்டவள்...ஆதியோடு வெளியே வந்தாள்...அங்கே அனைவரும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர்...
கலைவாணியோடும் யோகேஸ்வரனோடும் கதைத்த பின் துளசியின் மனம் ஓரளவிற்கு அமைதி அடைந்திருந்தது...சுசியையும்,ஆதியையும் கட்டித் தழுவிக் கொண்டவள்...கலங்கிய கண்களோடே அவர்களிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டாள்...கலைவாணியும் யோகேஸ்வரனும் அவளுக்கு ஆனந்தக் கண்ணீரோடே விடை கொடுத்தார்கள்...வெளியிலிருந்த அவள் ஊஞ்சலை ஓர் நிமிடம் தடவிப் பார்த்தவள்...காரில் ஏறும் முன் வீட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்தவாறே அவளது உறவுகளிடமிருந்து விடை பெற்றாள்...
கண்ணிலிருந்து அனைவரும் மறையும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள்..அவளது கரத்தை அழுத்திப் பிடித்த அரவிந்தனின் தொடுகையில் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரோடே அவனைத் திரும்பிப் பார்த்தாள்...அவனது அந்த அழுத்தம் உனக்கு எல்லாமுமாய் நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னது...அந்த தொடுகையும் அவனது விழிகளில் தெரிந்த அளவில்லா காதலும் அவளை ஏதோ செய்ய தலையை பின்னுக்கு சாய்த்தவாறே பாதையை வெறிக்கத் தொடங்கினாள்...கார் அரவிந்தனின் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது...
திருமண மண்டபத்திலிருந்து பிரம்மை பிடித்தவனாய் வெளியேறிய அர்ஜீன் நேராக வந்தது..துளசியை முதன் முதலாகக் கண்ட அந்த கடற்கரைக்குத்தான்...அதுவரை நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை கடல் அலைகளோடு இணைந்து கரைத்துக் கொண்டான்...அவனது மனம் நடந்த அனைத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்தது...யாரை தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று இத்தனை நாட்களாக மனதில் வைத்து காதலித்துக் கொண்டிருந்தானோ...அவள் இன்று இன்னொருரின் சொந்தமாகிவிட்டாள்...அவனது அண்ணனின் மனைவியாகிவிட்டாள்...என்பதை எல்லாம் நினைக்கும் போது அர்ஜீனுக்கு நடந்தவை எல்லாம் வெறும் கனவுகளாக இருந்து விடக்கூடாதா என்றிருந்தது....
அவன் கண்முன்னே நடந்த அந்த கல்யாணக் காட்சியையே அவனது மனம் மீண்டும் மீண்டும் நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தது...தன் அண்ணனின் திருமணத்தை நினைத்து மகிழ்வதா...இல்லை தனக்குரியவள் என்று நினைத்தவள் அவனுக்கு அண்ணியாக வந்துவிட்ட கொடுமையை நினைத்து துயரப்படுவதா என்று தெரியாமல் இரு வேறுபட்ட உணர்வுகளுக்கிடையில் சிக்கி அவன் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான்...கண்ணீர் வழிய கடலையே வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவன்,ஒரு முடிவிற்கு வந்தவனாய் காரை நோக்கிப் புறப்பட்டான்...
அரவிந்தனின் வீட்டை சிறிது நேரப் பயணத்தில் வந்தடைந்தார்கள்...அங்கேயும் இருவரும் ஆர்த்தி எடுக்கப்பட்டே வரவேற்கப்பட்டார்கள்...அந்த வீட்டிற்குள் துளசி காலடி எடுத்து வைக்கும் போது..அவளது கரங்களை மீண்டும் இறுக்கமாகவே பற்றிக் கொண்டான் அரவிந்தன்...அவனது ஒவ்வொரு தொடுகையின் போதும் துளசி மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள்...அந்த தொடுகை அவளுக்கு அவனிருக்கிறான் என்ற உணர்வினை மனதினுள் ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தது...
வீட்டினுள் அடியெடுத்து நுழையும் போது இனி என் துக்கங்கள் இன்பங்கள் எல்லாம் அவனோடு மட்டுமே என்ற நினைவோடே உள் நுழைந்தவள் அவளை அறியாமலேயே அவனது கரத்தினை இன்னும் இறுக்கமாய் பற்றிக் கொண்டாள்...அவளது இறுக்கத்தை உணர்ந்த அரவிந்தனின் உதடுகளிலும் புன்னகைப் பூக்கள் வந்து ஒட்டிக் கொண்டது...
அதன் பின் சுவாமி அறைக்குள் சென்று விளக்கினை ஏற்றி கடவுளின் ஆசிர்வாதங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்...அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும் இருவரும் ஓய்வெடுப்பதற்காக தனித்தனி அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்...
அரவிந்தனுக்கு இன்னும் சிறிது நேரத்திற்கு வேறு வேறு அறைகளில் தங்க வேண்டுமென்பதே மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது...அவள் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்லும் வரை அவளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்...ஆனால் அவள்தான் இவனது ஏக்கப் பார்வைகளுக்கு பதில் பார்வைகளை வீசும் நிலையிலேயே இல்லையே...
"இவளுக்கு பீலிங்சே இல்லையா...இங்க ஒருத்தன் தவியா தவிச்சிட்டு இருக்கான்...இவ என்னடானா ஒரு பார்வை கூட பார்க்காம போய் கதவை சாத்திக்கிறா...இன்னும் கொஞ்ச நேரம்தானே...என்கிட்ட தனிய சிக்கும் போது கவனிச்சுக்கிறேன்"என்று மனதில் பொறுமியவாறே பெரிய பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்...
அப்போது அங்கே வந்த அர்ச்சனா...
"என்ன அண்ணா...மூச்செல்லாம் பலமா இருக்கு...அதெல்லாம் கரெக்ட் டைமுக்கு அண்ணியை டான்னு உன்கிட்ட அனுப்பி வைக்கலாம்...இப்போ உன் ரூமை பார்த்து கிளம்பு.."
"இருடி...எனக்கொரு காலம் வரும்...அன்னைக்கு உன்னை பார்த்துக்குறேன்..."
"பார்க்கலாம்...பார்க்கலாம்...இப்போ நீ இடத்தை காலி பண்ணு...ஆமா இந்த அர்ஜீன் எங்க??அவன் கல்யாணத்துக்கு வந்தானா இல்லையா..?"
அர்ச்சனா அர்ஜீனைக் கேட்டதும் உள்ளூர தோன்றிய பதற்றத்தை மறைத்துக் கொண்டு...
"ஆஆ...அவன் வந்திருந்தான்...ஆனால் ஏதோ அவசர வேலைன்னு உடனே கிளம்பிட்டான்....கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்னு சொன்னான்..."
"வந்திருந்தானா...?நான் பார்க்கவே இல்லையே..?அவன் வரட்டும் இன்னிக்கு...என்றவாறே அர்ச்சனா அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்...
அர்ச்சனா சென்றதும் மீண்டும் போனை எடுத்து அர்ஜீனுக்கு அழைப்பினை மேற்கொண்டான்...இந்த முறை ரிங் போய்க் கொண்டே இருந்தது...ஆனால் அந்த அழைப்பினை அர்ஜீனோ எடுக்கவில்லை....பல முறை முயன்றும் அவனது அழைப்பினை அர்ஜீன் எடுப்பதாகவேயில்லை...அரவிந்தனின் மனதில் மீண்டும் பதற்றமும் குழப்பமும் ஒருசேரக் குடியேறியது..
தொடரும்...