உரமேற்ற வாடிகண்ணு
துப்புகெட்ட நாட்டினிலே
சொப்பு போன்ற வீட்டினிலே
உப்பு கொஞ்சம் கூட திண்ணு
தப்பி வந்து பொறந்தாயோ..!
கோஹினூரு வைரந்தோக்கும்
கோலாரு தங்கந்தோக்கும்
குடிசைவூட்டு குத்துவிளக்கே
கோளாறு செஞ்சதென்ன..!
நோய்புடிச்ச சனங்களுக்கு
சேயாகி சேவை செய்ய
பாய் போட்டு தூங்காமே
பகலிரவு படிச்சியே...!
கெட்டெண்ணம் புடிச்சிவக
திட்டம்போட்டு சட்டமொன்ன
நீட்டுன்னு நீட்டியதால்
நெலகுலைஞ்சி போனியோ...!
சீக்குபுடிச்ச அரசுகிட்ட
சிக்கித்தான் தவிச்சீயோ..?
நாக்குமுழி பொறந்தள்ளி
நாண்டுகிட்ட நல்லவளே...!
ஆத்தங்கரை ஓரத்தில
அஞ்சாநாளு காரியமாம்..
ஆனாலும் நல்லவளே
அழியாது ஓநெனப்பு...!
சினிமாவுல ஆவியெல்லாம்
பழிவாங்கி பாத்திருக்கோம்
இனிமேலும் பொறுமையென்ன
எறங்கி வாடி ராசாத்தி...!
உனக்காக இல்லைனாலும்
உன்னபோல பலபேரு
உரிமைக்காக போராட
உரமேற்ற வாடிகண்ணு...!
மறுசென்மம் எடுத்துகிட்டு
மவளே நீ வாரதுக்குள்ள
நீட்டென்ற தீட்டுதனை
நீக்கிடனும் ஊருக்குள்ள...!