முகம் தெரியாதவர்களுக்காக நான் ஏன் Neet ஐ எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்

செப்-1 அனிதாவின் மரணச் செய்தி கேட்டதும் வருத்தமே மேலோங்கி இருந்தது , பின் வருத்தம் கோவமாக மாற இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது . ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சேர அமெரிக்காவின் மிச்சிகன் - நோவி நகரில் இரங்கல் கூட்டம் செப்-2 இல் நடத்தினோம் . செப் -10 இல் ரோசெஸ்டர் நகரில் இரண்டாவது கூட்டம் நடத்தினோம்

இரங்கல் கூட்டமாக மட்டும் இல்லாமல் , நீட் என்றால் என்ன ? அதன் பாதிப்புகள் முதலியவற்றை விளக்கும் நிகழ்வாகவும் இருந்தது . தொடர்ந்து நண்பர்கள் நீட் பற்றிய விளக்கங்களை கொண்டு செல்வதற்காகவும் அதன் பாதிப்புகளை விளக்கவும் , கல்வியாளர்கள் , நீதிபதிகள் , சமூக அக்கறை உள்ளவர்கள் , நீட் ஐ எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் ஆகியோரை பல்வழி அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு விளக்க கூட்டங்களை நடத்துகிறார்கள் . அடுத்த கட்டமாக அமெரிக்காவில் 40 இடங்களுக்கு மேலாக நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கையெழுத்துக்களை சேகரித்து , இந்தியன் consulate கு பெட்டிஷன் ஆக கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்கள் .

இந்த இரண்டு வாரங்களுக்குள் whatsup இல் ஆதரித்தும் எதிர்த்தும் நிறைய தரவுகள் . எதிர்த்து வந்தவை அதிகம் .

நீட் ஐ எதிர்க்கும் அனைவரும் , கட்சி சார்பானவர்கள் , நாமக்கல்லில் பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் , பிண அரசியில் செய்பவர்கள் , தனியார் மருத்துவ கல்லூரிகளினால் பயன் அடைபவர்கள் , அதனால் பாதிக்கப்பட்டு இடம் கிடைக்காமல் போனவர்கள் அல்லது தன் சுற்றி உள்ள நெருங்கிய உறவினர்கள் பாதிப்படைந்ததால் சுயநலத்துக்காக குரல் கொடுப்பவர்கள் என நிறைய சித்தரிப்புகள் நடந்தன , நடக்கின்றன .

நான் நீட் ஐ எதிர்க்க மேல சொன்ன எந்த காரணமும் இல்லை .

நீட் போராட்டங்கள் தமிழகத்தில் திட்டமிட்டு முடக்கப்படும் நிலையில் , தொலைக்காட்சிகள் , பத்திரிகைகள் சிலவற்றை தவிர்த்து பெரும்பாலும் இச் செய்திகளை ஒளிபரப்பாத தருணத்தில் , பரபரப்புக்கு எல்லாரும் எழுதும் போது நாமும் எழுதலாம் என்று இரண்டு வாரங்களுக்கு முன் எழுதாமல் இப்போது எதற்கு எழுத வேண்டும் ? ஒரே காரணம் - தமிழகதில் இது அடக்குமுறைக்கு உள்ளாகும் போது
புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதால் , இது நீர்த்து போகக்கூடாது
என்பதால் எழுதுகிறேன் .

மேல சொன்ன எந்த காரணமும் இல்லை என்றால் நீட் ஐ எதிர்த்து முகம் தெரியாத அனிதா போன்றோருக்காக நான் என் குரல் கொடுக்க வேண்டும் ?? என்ன அவசியம் ?

முகம் தெரியாத யாரோ போராடியதன் பலனாகத்தான் அரசாங்க பள்ளிகள் வந்தன - நான் படிக்க முடிந்தது .
முகம் தெரியாத யார், யாரோ கொடுத்த நன்கொடையால்தான் - என் பள்ளி கட்டிடம் உருவானது .

முகம் தெரியாத எவரோ எடுத்த முடிவில்தான் - முதன் முறையாக , அரசாங்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் சேர்க்கப்பட்டது .

முகம் தெரியாத வேலை வெட்டி இல்லா யாரோ செயல்படுத்தியதன் விளைவாக - கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரிக்கான ஊக்கத்தொகை கிடைத்து படிக்க முடிந்தது .

முகம் தெரியாத எனக்காக - அவ்வளவு பழக்கம் இல்லாத என் கல்லூரி சீனியர்கள் CIT கல்லுரி என்று பெயர் கேட்டதும் எடுத்த இரண்டு மணிநேர நேர்முகத் தேர்வு வகுப்பால்தான் என்னால் IT நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடிந்தது .

நான் மட்டும் இல்லை , முகம் தெரியதா எவர் எவரோ , செய்த செயல்களால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம் நண்பர்களே . அவர்களுக்கு நாம் திருப்பிச் செய்ய முடியுமா ? நம்மை தெரிந்துதான் குல கல்வி முறை வேண்டாம் என்று எதிர்த்தார்களா? பிறப்பின் அடிப்படையில் மட்டுமே கல்வி என்று இருந்திருந்தால் ஒரு சமூகத்தை தவிர நாம் எல்லாம் படித்திருப்போமா ?

இதனால்தான் நீட் ஐ முகம் தெரியாத என் தம்பி தங்கைகளுக்காக , என் தமிழ் மாணவர்களுக்காக , பொருளாதார வசதி அற்ற என் சமூகம் ஆரம்ப சுகாதார நிலையங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக , என் கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக , நான் , நாம் நீட் ஐ எதிர்த்து குரல் கொடுக்கிறேன், கொடுக்க வேண்டும் .

நம் முகம் தெரிவதோ , யாருக்காக நாம் எதிர்கிறோமோ அவர்கள் முகம் நமக்கு தெரிவதோ முக்கியம் இல்லை , நம் எதிர்ப்புக் குரல் தொடர்ந்து கேட்பதுதான் முக்கியம் .

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களே , வாருங்கள் பதாகை தாங்கி உரக்கச் சொல்வோம் நீட் எங்களுக்கு வேண்டாம் !!!!!!!!!!!!!!!!!


  • எழுதியவர் : பாவி
  • நாள் : 11-Sep-17, 11:28 pm
  • சேர்த்தது : பாவி
  • பார்வை : 287
Close (X)

0 (0)
  

மேலே