நா முத்துக்குமார் நினைவு அஞ்சலி
அவன் அப்படி ஒன்றும் அழகில்லை;
ஆனால் அவன் அன்பின் விழியில் எல்லாம் அழகே!!
அவன் அப்படியொன்றும் கலரில்லை;
அவனுக்கு யாரும் இணையில்லை.
அவன் ஆனந்தயாழை மீட்டியவன்;
வண்ணத்துப்பூச்சிகளோடு வாசம் செய்தவன்;
கவிதைகளை கட்டிப்பிடித்து உறங்கியவன்;
நடந்து செல்லும் நதிகளிடம்
நலம் விசாரித்தவன் ;
நீந்தி செல்லும் நிலவோடு ஒளிந்து விளையாடியவன்.
பட்டாம்பூச்சி விற்றவன் படுத்துறங்கிவிட்டான்;
வேடிக்கைப் பார்த்தவன் வேறுலகம் சென்று விட்டான்;
பச்சையப்பனிலிருந்து தமிழ் வணக்கம் சொன்னவன்
பாடையிலிருந்து இறுதி வணக்கம் சொல்லி விட்டான்.
நியூட்டனின் மூன்றாம் விதி நிம்மதி இழக்கும்;
அணிலாடும் முன்றில்கள் அவனைத் தேடும்;
மின்சாரக் கம்பிகள் மீதும்
மைனாக்கள் கூடு கட்டும்.
உதிர்ந்து போன மலரின் வாசமே!
உடைந்து போன வளையல் வண்ணமே!
கடலோடு கலந்து விட்ட நதியே
உமது கதையை காலமும் சொல்லும்.
வண்ணத்துப்பூச்சிகளுக்காக வீற்றிருக்கின்றன
அவன் கல்லறைப்பூக்கள்.