வலியும் சுகமே காதலிலே
தழுவிய தென்றல்
தள்ளிச்செல்லும் வேளை
தனித்திட்ட மரமோ
படிக்குது மோகன கீதம்....!
இணைந்த இரவது
விலகி விடிந்திட
துணையற்ற காற்றோ
பொழியுது பனியென மோகம்...!
தழவிய நாவது
செயலற்று உறங்க
தவித்திடும் வாயோ
செய்யுது மௌன ராகம்...!
பொழிந்திட்ட மேகம்
பிரிந்திடும் நேரம்
வெளுக்கின்ற வானம்
வரையுது வர்ணவில் ஜாலம் ...!
குளிர்வித்த பொன்மதி
காணாமல் மறைய
குறையுற்ற குளமோ
நிறைத்து பூக்குது கமலம்...!
உன்னோடு துடித்து
உவந்த இதயமோ
ஒருசிறு தூரத்தில்
தறிகெட்டு அடிக்குது தாளம்...!
அளாவிய உயிர்கள்
அகன்றதன் வெறுமையில்
அடைவிட்ட நதியாய்
ஆர்பரிக்குதே காதல் வெள்ளம்..!