கடைசி காலம்

செல்விக்கு இன்றோடு ஒய்வு பெரும் நாள். முதல் நாள் இந்த அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்த நியாபகம் வந்தது. கிளர்க்காக ஆரம்பித்தவள், எப்படியோ பல தேர்வுகள் எழுதி இன்று புள்ளியியலாராக ஒய்வு பெருகிறாள். வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்று கல்யாணம் ஆன இரு மாதத்தில் விட்டு சென்றவன், ஒற்றை கடிதத்தில் முடித்து விட்டான் இவள் கல்யாண வாழ்க்கையை. அங்கேயே ஒரு விதவையை மணந்து கொண்டான். அத்துடன் இவள் விவாகரத்து வாங்கி , தன் மகனோடு கோயம்புத்தூரில் குடியேறினாள். மகன் வினோத், ஒரு நல்ல கார்ப்பரேட் கம்பெனியில் ஹெச்சாறாக (மனித வள மேம்பாடு) உள்ளான்.
இனி என்ன செய்வது என்ற யோசனையில் வீடு திரும்பினாள். கடைசி காலத்தை எந்த வகையிலாவது யாருக்காவது பயன்படும் படி இருக்க வேண்டும். வீட்டில் சும்மா இருப்பது இயலாத விஷயம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், வீடு திரும்பினான் வினோத்.
"அம்மா, இன்றோடு நீ நல்லா ஒய்வு எடுக்கிற நேரம், அதோட நீ தனியா இருக்கணும் னு அவசியம் இல்ல. ரெண்டு பேர பாத்துக்கணும்."
"சரிதான், ஒய்வு பெற்று ஒரு மணி நேரம் கூட ஆகல, அதுக்குள்ள பிளான் பண்ணிட்டியே" கிண்டலாகவே பதிலளித்தாலும், சிறு பயம் வந்தது. இது வரை, இருவர் மட்டுமே என ஓட்டியாகி விட்டது. எப்படியாயினும், மருமகள் வந்தே தீர வேண்டுமே. கணவன் போனது முதல், மகனே எல்லாம் என அர்பணித்தாகி விட்டது. தாயாய் இருப்பதை விட, இவள் ஒரு நல்ல தோழியாகவே அவனுக்கு இருந்திருக்கிறாள். இதில் எந்த பங்கமும் வர கூடாது என்று எல்லா மாமியார் போல இல்லாமல், கொஞ்சமேனும் அவ்வெண்ணம் தலை தூக்கவே செய்தது.
"சரி டா, எப்போ பாக்கலாம்" என்றவளை, " அதுக்குள்ள அவசரம்.. ரெண்டு நாள் பொறு. வர சனி கிழமை சாந்தா முதியோர் இல்லத்துக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு போனா , நீ அவளை பாக்கலாம்"
என்றபடியே பதிலை கூட எதிர்பாராமல் தன்னறைக்குள் சென்று கதவை சாத்தி விட்டான்.
கல்யாணமே ஆகல, அதுக்குள்ள முதியோர் இல்லத்துல அட்மிசனா... சரி தான், காலம் முன்னேறி விட்டது. பிள்ளைகளை பார்த்து கொள்ள முடியாமல் டே கேர் ல விட்டா , இறுதி காலத்தில் பிள்ளைகள் தங்களை முதியோர் இல்லத்தில் விடுவர் போல. அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. இரண்டு நாள் எந்த விதத்தில் கேட்டாலும், அவன் வாயே திறக்க வில்லை.
சந்திக்க கூடிய நேரமும் வந்தது. சுற்றி வயல்வெளி. காற்றோட்டத்தை கூட்ட பெரிய பெரிய மரங்கள். அழகழகான சிறு பூச்செடிகள், அப்படியே இந்த மரத்தடியில் படுத்து தூங்கினால் எவ்வளவு சுகம். "நீ உள்ள போம்மா, நான் வரேன்" என்று மறைந்தான். பதினைந்து அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையின் வெளியிலும், திண்ணை. திண்ணைகளில் சிலர் தூங்கி கொண்டிருந்தனர். சிலர் உரையாடிக் கொண்டிருந்தினர்.
முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறோம் என்றே இல்லாமல், அனைவரும் நிம்மதியாக காண பட்டனர். ஒரு பெரிய அறையிருந்தது. குதூகலமான சத்தங்கள் அதிகமாக கேட்டன. ஆர்வம் மேலிட அங்கு சென்றாள். கைகளை பிடித்துக் கொண்டு ஒரு வட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தனர் முதியோர்கள். நடுவில் சாண்டா கிளாஸ் வேடமணிந்து உற்சாகமாக ஆடி கொண்டிருந்தார். சுற்றி இருந்த எல்லோரும் பாட்டு பாடி கொண்டிருந்தார்கள்.
அறையில் நுழைந்ததுமே தன்னையும் இணைத்துக் கொண்டு ஆட வைத்தார்கள். உள்ளே இருந்த குதூகலத்தை அனுபவித்தபிடியே இவளும் சிறிது நடமாடினாள். முதியோர் இல்லம் என்றால் இப்படி தான் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இருந்தது அந்த இடம். அங்கு தங்கினால் மகன் இல்லை என்ற குறையை தவிர வேறு எதுவும் இருப்பது போல் அவளுக்கு தெரியவில்லை.
அந்த சாண்டா கிளாஸ் யாராக இருக்கும் என்று அனைவரும் முகத்திரையை அகற்ற முயல, அவர் அங்கும் இங்கும் போங்கு காட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தான் வினோத். அவனையும் பிடித்துக் கொண்டு எல்லோரும் சம்பாஷித்து கொண்டிருந்தனர். வறுபுறுத்தியதின் பேரில் இவளும் சற்றே உணவருந்தினாள் எல்லோருடனும். வினோத்துடன் வேலை பார்க்கும் சக ஆட்களும் பெண்களும் இங்கு எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்ததும், எல்லோரும் வெற்றிலை பாக்கு போட்டு விட்டு அவரவர் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தான் நியாபகம் வந்தது. "எங்கேடா, பெண்ணை காட்டுகிறேன் என்று காட்டவில்லை." "நீ இன்னுமா கண்டுபிடிக்கவில்லை." இங்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள், இதில் யாரைக் காட்டுகிறான். இவளுக்கு இருவரையுமே பிடித்திருந்தது. திடீரென்று ஓவென்று சத்தம். திரும்பி பார்த்தால், சாண்டா கிளாஸ் உருவத்தில் இருந்தது ஒரு பெண். அவளை அடையாளம் காட்டியவுடன், சில பெரியவர்கள் அப்பெண்ணை வந்து கட்டிக் கொண்டார்கள்.
"எனக்குத் தெரியும், நீ தான் என்று. இரண்டு வாரமாக லீவு போட்டுட்டியே என்னாச்சி?" என்றாள் ஒரு அம்மா. "உங்கள மாதிரியே, இன்னும் நிறைய பேர பாக்க போயிருந்தேன் அம்மா. அதனால தான் வர முடியல. பாருங்க கிறிஸ்துமஸ் கு மறக்காம வந்துட்டேன் உங்கள பார்க்க" என்று சமாதானம் சொன்னாள். சந்தேகமில்லை. இந்த பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று மகனை ஏறிட்டாள். அவன் தன்னை பார்க்காமல் அந்த பெண்ணையே பார்த்து புன்னகைத்தவுடன், ஊர்ஜிதம் ஆனது. அந்த பெண் இவளை நோக்கி வந்தாள்.
"ஹல்லோ அம்மா. நான் தான் மீரா. மன்னிச்சிக்கோங்க, நீங்க வந்ததும் உங்க கிட்ட பேச முடியல. உங்கள பத்தி எல்லாம் சொல்லிருக்காரு வினோத். கல்யாணம் பண்ணிக்காம இவரை கஷ்டப்பட்டு வளர்த்ததை. உங்க மேல பெரிய இம்ப்ரஷன் எனக்கு. நான் இப்போ சொல்ல போறத மறுக்காம ஏத்துக்கணும். ப்ளீஸ்."
இவள், மாமியாரை முதியோர் இல்லத்தில் விடுபவள் இல்லை, பின் எதற்கு இந்த பீடிகை. "என்னம்மா, உங்க கல்யாணத்துக்கு தடை போடுவேன் நெனச்சியா. " என்றாள்.
"ஹா ஹா. அதற்கெல்லாம் தடை போடுபவர் நீங்கள் இல்லை என்பது தெரியும். இது வேறு. முதலில் நீங்கள் சம்மதியுங்கள்" என்றால் மீரா. "வருவதற்கு முன்பே மாமியாரை புரிந்து கொண்டாயா. இரு நீ வீட்டுக்கு வந்தவுடன் என்ன பண்ணறேன் பாரு" என்றாள் நகைத்த படியே .
"நீங்களா நானான்னு பாத்துடலாம்!!! " என்றாள் அவளும் விட்டு கொடுக்காதவாறு. "அம்மா தாய்ங்களா, உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க, முதல் ல விஷயத்தை சொல்றேன். அம்மா. இத்தனை நாள் நீங்க எனக்காக கஷ்ட பட்டது போதும். அதனால தான் நாங்க இங்க உங்களுக்கு ஏத்த ஒரு மனிதரை செலக்ட் செஞ்சிருக்கோம். உன் சம்மதம் வேணாம், நீ ஆள மட்டும் தேர்ந்துடு. "
"டேய், உனக்கு பொண்ணு பாக்க வந்தா நீ எனக்கு பாக்கணும் னு சொல்ற." என்றவள், சிறிது இடைவெளி விட்டு சொல்ல ஆரம்பித்தாள். "என்னோட கடைசி காலத்தை எப்படி உபயோகமா செலவழிகிறது ன்னு நினைக்கும் போது நீ எனக்கு ஒரு நல்ல வழிய காட்டிட்டே. இந்த முதியோர் இல்லத்துக்கு வந்ததே எனக்கு அலாதியான மனநிறைவு கொடுக்குது. என் பணத்தை வச்சி உனக்கு வாழனும் னு இல்ல. என்னோட கடைசி காலத்தை இந்த மாதிரி முதியோர் இல்லமோ, அனாதை இல்லமோ சென்று நேரத்தை கழிப்பது என்று முடிவு செய்து விட்டேன். இத்தனை காலம் தனியாக வாழ்ந்த எனக்கு மீதி இருக்கும் காலத்தை கழிப்பதா கஷ்டம். தவிர, நீ எனக்கு கொல்லி போட வந்தா மட்டும் போதும். மருமகள், நினைத்த படியே நம் வீட்டிற்கு ஏற்றவளாக வந்த பின் எனக்கென்ன டா கவலை. "
இருவருமே கண் கலங்கினர். "நாங்கள் இருவருமே வேலைக்கு செல்வதால், வீட்டில் நீ தனியாக இருப்பதை நினைத்து உனக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தோம். உனக்கு எப்போது வேண்டுமோ அப்போது ஒரு துணையை ஏற்றுக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. " என்ற இருவரையும், கட்டி அணைத்து கண் கலங்கினாள். ஆனந்த கண்ணீர் அந்த அறையை நிறைத்தது.

எழுதியவர் : நிலா (24-Sep-17, 9:32 am)
சேர்த்தது : MadhuNila
Tanglish : kadasi kaalam
பார்வை : 278

மேலே