மழையும் நானும்

முதல் மழை முற்றத்தில் விழுந்து எழும் மண் வாசனையை,
இதுவரை எந்த மலரும் எனக்கு கொடுத்ததில்லை..
மெல்லிய தூரல்களுக்கு இடையே,
சூரிய கதிர்வீச்சும் இணைந்து பூமியை சந்திக்க வரும் போதெல்லாம்,
என் இரு கைகளையும் பறவையின் ரெக்கை போல அசைத்து அசைத்து வானத்தை நோக்கி பறக்க முயற்சித்து தோற்று இருக்கிறேன்..
கருமேகம் சூழ்ந்து
இடியும் மின்னலும் என்னை துரத்தும் போதெல்லாம்,
அருகிலிருக்கும் ஓலை குடிசைக்குள் பயந்து ஓடி ஒளிந்திருக்கிறேன்.
சின்ன மழைத்துளிகள் பெருமழையாக மாறும் போது,
வீட்டின் தாழ்வாரத்தில் மழை நீரில் கண்கள் சிவக்கும் வரை குதியாட்டம் போட்டு கொண்டிருப்பேன்..
பள்ளிக்கூடம் செல்லும் நேரம் மழை வேண்டி பிரார்த்தனை செய்வேன்,
அப்படியாவது இன்று பள்ளிக்கு மட்டம் தட்டலாமே என்று,
அருகில் வானொலி பெட்டியில் மழைகாலங்களில் பள்ளி விடுமுறை என்று சுற்றறிக்கை வாசிக்க மாட்டார்களா என ஏங்கியதுமுன்டு.
புத்தகம் பொதிந்த மஞ்சள் பைக்கட்டை மழையில் நனையாத படி நெஞ்சோடு சேர்தணைத்தபடி வீட்டிற்க்கு ஓடி வந்து,
உலை கொதிக்கும் பானையில் உலர்த்தியதும் உண்டு..
மழையில் தொப்பலாய் நனைந்து வந்த போது,
அம்மாவின் முந்தானையால் தலை துவர்த்தி,
தேநீரில் முறுக்கினை நொறுக்கி போட்டு கொடுக்கும் அந்நிகழ்வுகாகவே,
மீண்டும் ஒருமுறை நனையத் தோன்றும்..
நான் நேசித்தவள் மழையில் நனைந்து வருவதை பார்த்து,
நானும் குடைகளை மறைத்த படி,
நனைந்ததும் கனாக்காலம்தான்.
மழைகள் சந்தோஷத்தின் சின்னம்.
அதனாலயே நான் மழையில் நனைந்த படி அழுவதில்லை,
இனிப்பான நீரினோடு,
என் உப்பு கரைசலை எப்படி சேர்ப்பேன்.
மழையும் நானும் எதிரெதிர் துருவங்கள்தான்,
ஆனாலும் அருகருகே வரும் போது ஒருவரை ஒருவர் ஈரத்தால் ஈர்த்து கொள்கிறோம்.

எழுதியவர் : சையது சேக் (26-Sep-17, 7:06 pm)
Tanglish : mazhaiyum naanum
பார்வை : 684

மேலே