சுழல்நிலை

மாலை.

“ரகு....” – ராஜ் அவசரமாக.
டிங் டிங்... டிங் டிங்... டிங் டிங்...
“டேய் ரகு கதவ தொறடா... ரகு...”
டிங் டிங்... டிங் டிங்...
“வரேன் வரேன். வந்துட்டேன் டா. குளிச்சிட்டு இருந்தேன்.” – ரகு
ரகு கதவை திறக்க.
“எப்படா வந்த ஊர்ல இருந்து?” – ராஜ் அமைதியாக
“ராஜ், நீ நேத்து போட்டிருந்த சட்டையிலேயே வந்துருக்க ராஜ்.” – ரகு கவலையாக
“டேய், நான் என்ன கேக்குறேன், நீ என்ன உளற?”
“உனக்கு புரியாது. உள்ள வா.”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரவு.

“இதுல இருந்து எப்படி வெளியபோறதுனு தெரியல. என் நிலமைய இங்க யாருக்கும் சொல்லி புரிய வைக்கமுடியல.
நாளைக்கு நான் கண் முழிக்கும்போது, இதெல்லாம் மாறிபோயிட்டா எவ்வளவு நல்லா இருக்கும். தினமும் இப்படி பொலம்பிட்டே இருக்கவேண்டியது தானா?
ஊருக்கே போயிடலாம், ஆனா வேலை கிடைச்சும் எப்படி ஊருக்கு போறது? வேலை கிடைச்சிருச்சுனு சொல்லிக்ககூட முடியல.
நல்ல சம்பளம் தான், இருந்து மட்டும் என்ன ப்ரோச்சனம்?
நான் சரியா கணக்கு வைக்கல, இது எத்தனாவது நாளுன்னு.
ஏதோ ஒரு சின்ன விஷயம் தான்னு புரியுது, ஆனா அது என்ன? இது ஏன் எனக்கு மட்டும் நடக்கணும். மண்டையே வெடிக்கிற மாதிரி இருக்கு.
ஒரே மாதிரியான வாழ்க்கையை எத்தன நாள் தான் வாழ்றது.
சட்டைய கிழிச்சிகிட்டு கத்திகிட்டே ஓடனும் போல இருக்கு, அப்படியும் ஒரு நாள் ஓடியிருக்கேன். அடுத்த நாளும் இதே வாழ்க்கை தான?”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் மறுநாள்.

“டேய் ரகு, எழுடா இன்டர்வியூ இன்னைக்கு தான?”
“டைம் என்ன?” – ரகு படுக்கையில் இருந்தபடியே.
“எட்டாச்சி, நான் கிளம்புறேன். ஆபீஸ்க்கு டைம் ஆச்சு. சாவிய...”
“ம்ம்ம். சாவிய மெயின் போர்ட் கிட்ட வச்சிடுறேன்.”
“சரி, ஆல் தி பெஸ்ட். நல்லா பண்ணு. பை.”
“ம்ம்ம்.”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

காலை.

“இன்டர்வியூ போக விருப்பமில்லதான். ஒருவேளை, என் வாழ்க்கை இன்னைக்கு பழைய படி மாறிட்டா? அந்த நம்பிக்கையில தான் இன்னைக்கும் போறேன்.
எல்லாவிதமான பேட்டர்ன்னும் அனலைஸ் பண்ணிட்டேன். வேற வேற மாதிரி இந்த நாள மாத்தி பாத்துட்டேன், ஒரு ராத்திரி முழுக்க தூங்கமா கூட இருந்து பாத்துட்டேன். எதுமே யூஸ் இல்ல.
பசிக்குது. ராஜ் என்ன செஞ்சிருப்பான்? உப்புமா தான். பேக்ல ஊர்ல இருந்து கிளம்புபோது வாங்குன பிஸ்கட்டும், முறுக்கும் இருக்கும். வழில டீ குடிசிக்கலாம். டீ குடிக்கிற பேட்டர்ன் கூட மாத்தி பாத்துட்டேன்.
ச்சே. என்ன மாத்தி பாத்தேன், எத விட்டேன்னு எனக்கே ஞாபகம் இல்ல.
ஒரு நாள் சீக்கிரமா எந்திரிச்சுடனும். குறிப்பா ராஜ் கிட்ட உப்புமா செய்யாதன்னு சொல்லணும்.
ராஜ் கிட்ட ஒருநாள் சொன்னேன், ஈவ்னிங் வந்ததும், ஊர்ல இருந்து எப்ப வந்தேன்னு கேக்காதடா. குறிப்பா இன்னைக்கு போட்ட சட்டையில வா, நேத்து போட்ட சட்டையில வராதன்னு. அவனுக்கு ஒன்னும்புரியல. எப்படி புரியும். எப்படி புரிய வைக்கமுடியும்?
சில நேரம், ராஜ்ஜ ஆபிஸ் போகவிடமா இருக்கவைக்க கூட முயற்சி பண்ணிருக்கேன். ஒரே முறை அந்த முயற்சி பளிச்சது. இருந்தும், நான் இன்டர்வியூ போயிட்டு வரதுக்குள்ள அவன் ஆபிஸ் போயிட்டான்.
தைரியத்த வரவச்சி ஒரு நாள் இன்டர்வியூ போகாம கூட இருந்தேன். எதுமே மாறல.
ராஜ் வீட்ல, எப்பவுமே சரியான அளவுல சுடுதண்ணி வரும், அதுல பொறுமையா குளிக்கிற சுகமே தனி. இப்ப குளிக்க போகணும்”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதியம்.

“ஓகே ரகுவரன். லாஸ்ட் குவஸ்டீன்”
“எஸ்.”
“வாட் இஸ் ரெகர்சிவ் பங்க்ஷன்?”
“எ ரெகர்சிவ் பங்க்ஷன் இஸ் எ பங்க்ஷன் தட் கால்ஸ் இட்ஸெல்ப் டுரிங் இட்ஸ் எக்சிகுஷன். திஸ் எனபல்ஸ் தி பங்க்ஷன் டு ரிபீட் செவெரல் டைம்ஸ், அவுட்புட்டிங் தி ரிசல்ட் அண்ட் தி எண்ட் ஆப் ஈச் ஐடேரேஷன்.”
“எனி ரியல் டைம் எக்சாம்பிள்”
“ம்ம்ம்... நோ ஐடியா.”
“ஓகே. பைன். தேர் இஸ் எ ஜோக். டு அன்டர்ஸ்டேன்ட் ரெகர்ஷன், யூ மஸ்ட் அன்டர்ஸ்டேன்ட் ரெகர்ஷன்.”
“ஹாஹா.”
“ஹாஹா. ஓகே. தட்ஸ் ஆல். வெயிட் பண்ணுங்க. ரிசல்ட் சொல்லுவாங்க.”
.
.
.
“ திவ்யா நெக்ஸ்ட் கண்டிடேட வரசொல்ல்லுங்க...”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

“ரகுவரன். எஸ்” – திவ்யா.
“எஸ்.”
“நீங்க தான ரகுவரன். யு ஆர் செலக்டெட். நீங்க மண்டேல இருந்து ஜாயின் பண்ணிகோங்க.” – புன்னையோடு
“தேன்க் யூ”.
“உங்க முகத்துல செலக்ட் ஆனா ஹப்பினசே தெரியலையே. ஜாயின் பண்ண இன்ட்ரெஸ்ட் இல்லையா?”
“அப்படி எல்லாம் இல்ல. நான் செலக்ட் ஆயிடுவேன்னு தெரியும்.”
“ஒ. கான்பிடன்ட். ஓகே. மத்த டீடெய்ல்ஸ் மெயில் பண்ணறேன். யூ மே லீவ் நவ்.”
“ஓகே. நான் வரேன்.”
“ஓகே. பை.”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

“திவ்யா. திவ்யான்னு பேரு வச்சாலே அழகா தான் இருப்பாங்களா? இல்ல எச்.ஆர்னாலே அழகா இருக்காங்களா?
இவ்வளவு பிரச்னைக்கு நடுவிலயும், திவ்யாவ தினமும் பாக்குறது எவ்வளவு சந்தோசமா இருக்கு.
எதுவுமே மாறாத இந்த வாழ்க்கையில, திவ்யா கிட்ட போய், உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீ ரொம்ப அழாகா இருக்க, உன் கீழ் உதடு ரொம்ப அழகா இருக்குனு சொல்ல தோணும். டஸ்கீ.
திவ்யா கோவப்பட்டு போனாகூட கவல இல்ல. நாளைக்கு திரும்பவும் எல்லாமே முதல இருந்து நடக்குமே. ஒருவேளை, ரெகுலர் லைப்க்கு திரும்பிடுச்சுனா? அதுக்கு அப்புறம் திவ்யா கிட்ட பேசவே முடியாதே, தப்பா பேசிட்டோம்னும் மனசு உறுத்திட்டே வேற இருக்கும். நான் என்ன தான் பண்றது.”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் மாலை.

“இப்ப குளிக்க போறேன். சரியா நான் உள்ள போனதும் ராஜ் வருவான். காலிங் பெல்ல ஓயாம அடிப்பான், நான் அறக்க பறக்க ஓடிபோய் கதவ திறக்கணும். தொறக்காம அடமா நானும் சில நாள் இருந்து பாத்துட்டேன். அவன் தான் கடைசில ஜெய்ப்பான். அமைதியா உள்ள வந்து, எப்ப ஊர்ல இருந்து வந்தேன்னு கேப்பான்.
இன்னைக்கு என்ன ஆனாலும் கதவ தொறக்ககூடாது.” – கதவை தாழிட்டு, குளியல் அரை சென்றதும்.
“ரகு”
டிங் டிங்... டிங் டிங்... டிங் டிங்...
“டேய் ரகு கதவ தொறடா... ரகு...”
டிங் டிங்... டிங் டிங்...
“டேய் ரகு. என்னாடா பண்ணற? கதவ தொறடா. ரகு.”
.
.
.
“டேய். ரகு, ஒரு மணி நேரமா என்ன டா பண்ணற? கதவ தொறடா.”
“இனி பொறுத்திருக்க முடியாது. வீட்டு கதவை திறக்கவேண்டியது தான். எப்படியும் அமைதியா வந்து, எப்ப ஊர்ல இருந்து வந்தன்னு கேப்பான். இப்போதைக்கு அவன் கோவத்துக்கு ஆளாகம இருந்தா போதும்.”
“டேய் ரகு, எவ்ளோ நேரமா டா கத்துறது. ஏன்டா கதவ தொறக்கல? ஹார்ட் டிஸ்க் எடுத்துட்டு திரும்ப ஆபிஸ் வேற போணும்”
“எனக்கு திக்கென இருந்தது, ராஜ் கதவை உடைத்து உள்ளே வந்துட்டான். இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததே இல்ல. இது புது பேட்டர்னா இருக்கு. எனக்கு எதுவுமே புரியல. நான் எதையும் யோசிகிறதுக்குள்ள....”

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் மாலை.
“நான் திரும்ப குளியல் அறையில இருக்கேன். எனக்கு அந்த ஜோக் இப்ப ஞாபகம் வருது.
டு அன்டர்ஸ்டேன்ட் ரெகர்ஷன், யூ மஸ்ட் அன்டர்ஸ்டேன்ட் ரெகர்ஷன்.
ராஜ் காலிங் பெல்ல அடிக்கபோறான். நான் கதவ தொறக்ககூடாது.”
.
.
.
“ரகு”
டிங் டிங்... டிங் டிங்... டிங் டிங்...
“டேய் ரகு கதவ தொறடா... ரகு...”

டிங் டிங்... டிங் டிங்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (1-Oct-17, 3:06 am)
சேர்த்தது : நிரலன்
பார்வை : 417

மேலே