வெள்ளையானை- நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம்

ஜெமோ எழுதிய வெள்ளையானை என்னும் நெடுங்கதைப் புத்தகத்தை படித்தேன்.


எய்டன் என்ற அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்துப் படையில் சேர்ந்து காலனிய நாடான இந்தியாவில் மதராசப் பட்டனத்தில் கேப்டன் பொறுப்பில் இருப்பவனுடைய பார்வையில் விரிகிறது கதை. இன்றைக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஆண்டான் அடிமைத் தனமான மனோபாவம் உச்சத்திலிருந்த 1870 கள்தான் கதைக்களத்தின் காலம்.


மதராசப் பட்டினத்தில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான ஐஸ் ஹவுசில் நிகழும் தொழிலாளர்களின் மீதான கொடுமைகளும், அவர்களின் பனிச் சூழல் நரகநிலையும், தினக்கூலிகளாக எந்தவிதப் பெயரடையாளங்களுமற்று தினப்படி வேலைக்கு வரும் எண்ணிக்கையால் மட்டுமே அமைந்த அவர்கள் வாழ்வியல் கொடூரங்களும், அவர்களை கண்காணிக்கும் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த கண்காணிகளிடத்து பஞ்சமர்களான தொழிலாளர்கள் அடையும் விலங்குகளை விடக் கேவலமான வாழ்வு நிலையும் அமைந்த சூழலை, அத்தொழிலாளர்களில் இருவர் தங்கள் நிலை குறித்துப் புகார் செய்ய முயற்சித்ததனால் கடைசியாக் கொன்று, கடலில் வீசப் படுகிற கணவன் மனைவியான இரு தொழிலாளிகள், கேப்டன் எய்டன் கண்ணில் பட்டு அறிமுகமாகும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த நெடுங்கதை!



ஆட்சி நிகழ்த்தியிருக்கும் அவலம்...1877 காலகட்டம்

சில தானியங்களுக்கான காத்திருப்பு...


ஷெல்லியைப் படிக்கும், பிடிக்கும் ஒரு அசந்தர்ப்பவாத பிரிட்டிஷ் பேரரசின் படை வீரனாக அறிமுகமாகும் எய்டனின் பாத்திரப் படைப்பும், அவனுடைய வாழ்க்கைச் சூழலும், அயர்லாந்திலிருந்த அவனது குடும்பத்திலிருந்தும் அது தரும் ஆயாசமான முன்னேற்றத் தடைபடும் வாழ்வியல் சூழிலிருந்து தப்பிக்க ஒரேவழியாக காலனி நாடுகளுக்கான பிரிட்டிஷ் படையில் சேர நேரும் அவலமானதுதான் அவனது சொந்த வாழ்க்கையும்; பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிரிட்டனிலும் இருக்கும் சமூகப் படித்தரங்களில் அவனும் ஒரு விதத்தில் பஞ்சமர் நிலையிலான அடிமைதானெனினும், 'எதையும் சட்டத்தின் பாற்பட்டு அணுகும்' மாபெரும் பிரிட்டிஷ் பேரரசின் இயக்க அடுக்குகளில் எப்படி அவனது பஞ்சமர் நிலை, அப்பட்டமாக வெளித் தெரியாத நாசூக்குடன் வெளிப்படுகிறது என்ற விவரணையில் - ஆள்பவர்களுக்கிடையான சாதி அல்லது இனங்கள் பாற்பட்ட ஆண்டான் அடிமைத் தனம் நிலவும் எய்டன் பாத்திரத்தின் கதைத் தளமும் ;


பிரிட்டிஷ் இந்தியாவில் அன்று (இன்றும் கூட) நிகழ்ந்த சாதீய அடுக்குளின் பாற்பட்டு இடம் பெற்றிருந்த எண்ணற்ற சாதீய அடக்கு முறைகள், அவற்றின் விளைவாக கடைநிலை மக்கள் இடைநிலை மக்களிடமும், இடைநிலை மக்கள் மேல்நிலை மக்களிடமும் அடைந்த துயர வாழ்வின் நிலைகளையும், அவலத்திலும் அவலமாக ஒரு உயிராகக்கூட மதிக்கப் படாது கொன்றழிக்கப் படும் அல்லது செத்து மடியும் அவர்களின் வாழ்வு நிலையான காத்தவராயன் கதைத் தளமும் ;


இவ்விரு கதைத் தளத்திலான இரண்டு 'அடிமைகள்' தங்கள் வைக்கப்பட்டிருந்த நிலைமீறிய கல்வி, கலை, மற்றும் கவிதானுப சிந்தனைகளினால் முகிழ்ந்த சமுதாயப் பார்வை விளைவுடன், கதைத் தளத்தில் ஒருவரையொருவர் சந்திக்க நேரும்போதான சம்பவங்கள், அவர்கள் உத்தேச உன்னதங்களை விவரித்து அதை அடைய முயலும் வழியில் அவர்களுக்கு நேரும் இழப்புகள், அனுபவங்களை, அக்கால கட்டத்தின் மிகப் பெரிய பஞ்சத்தினூடாகச் சொல்லிச் செல்கிறது கதை.


நிரம்பிய அவலம் மனதை நடுங்கச் செய்யும் அந்த நிலையில் இந்த இருபாத்திரங்களும், சுமார் 60 லட்சம் பேரைக் கொன்றொழித்த அந்த கொடும் பஞ்சகாலத்தினூடாகப் பயணிக்கிறார்கள். 1877-79 கால கட்டத்தில் மதராசப் பட்டணம், ஸ்ரீரங்கப் பட்டணம், நிஜாம்தேசம் ஆகிய (இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்நாடகம்) தென்னிந்தியப் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 60 லட்சம் மக்கள் இரண்டாண்டுகளில் மடிகிறார்கள் ! அதுவும் பஞ்சத்தால், உணவின்றி பிழைக்க வழியின்றி, கழனிகளில் உழைத்து விளைவித்துப் பிழைத்த அம்மக்கள் நீராதாரம் இல்லாத நிலையில் நிலங்கள் கைவிட்டு, உண்ண உணவின்றி, பருக நீரின்றி ஒவ்வொருநாளும் ஆயிரக் கணக்கில் மடிகிறார்கள் ! 720 நாட்களில் 60 லட்சம் பேர் என்றால் ஒரு நாள் எத்தனை பேர் என்று ஒரு சிறிய கணக்குப் போடுங்கள், வீதியெங்கும் பிணங்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்களின் பிணங்கள் ! உழைக்க இயலாத, நோயுற்ற மக்கள் நகர எல்லையிலேயே நகருக்குள் நுழைவதிலிருந்து தடுக்கப் பட்டு, காடுகளில் உழன்று, பசித்தீயில் சிறிது சிறிதாக செத்து விலங்குகளுக்கு இரையாகும் கொடும் சூழலினூடாகப் பயணிக்கிறது கதை.


இத்தகைய நிலையிலும் சாதிய அடுக்குகளைப் பேணிக் காப்பதிலும், தங்கள் வருமானத்தைப் பெருக்கும் உத்திகளைச் செவ்வனே செய்து 30 லட்ச ரூபாய்களில் புதிய திட்டங்ளைத் தீட்ட பிரிட்டிஷ் கவர்னருக்கு பங்கிங்காமிற்கு யோசனையும்( இத்திட்டத்தின் ஒரு பகுதியே சென்னையின் பங்கிங்காம் கால்வாய்) , அதில் கவர்னருக்கும் தனக்கும், தனது மேல்தட்டு தொழிலதிபர் நண்பர்களுக்கும் கிடைக்குப் போகும் பெரும் பணத்தை உறுதி செய்யும் உத்திகளைச் செய்து மேன்மேலும் மேன்மையுறும் முரஹரி அய்யங்கார்கள், எப்படி உண்மையில் பிரிட்டிஷ் இந்தியாவை நிர்வகிக்கும் நிர்வாக சக்தியாகத் திகழ்ந்தார்கள் என்பதை கூரான கத்தியாகச் சொல்லிச் செல்கிறது இந்தக் கதை.


இந்த முரஹரிகள், ஆள்பவர்களுக்கும் தோனாத கொடுங்கனவுகளை, வியப்பூட்டும் எளிமையுடன் நிகழ்த்துவதில் வல்லவர்கள்; அதை அவர்கள்தான் நிகழ்த்தினார்கள் என்பது ஆளும் படித்தரங்களில் இருக்கும் மற்றவர்கள் கூட அறிய இயலா வண்ணம் நிகழ்த்துவதில் வல்லவர்கள்; தினப்படி வாழ்வின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு காரணியாகத் தலைவர்களை அணுகும் எளிய மக்கள் கொட்டடியில் அடைபடுட வெயிலில் சாகும் நிலை வந்தாலும், அழைத்து வரப்பட்டு தலைவர்களின் பிரதாபங்களைக் கேட்க வைக்க அடைக்கப் பட்டு கொல்லப் பட்டாலும், தமதெண்ணங்களை ஈடேற்றும் வல்லமையைப் பணத்தாலோ, போதையாலோ அல்லது வேறு எது காரணியோ அதைப் பயன்படுத்தித் தான் எண்ணிய வற்றை, விரும்பிய வற்றை அடையும் தீர்க்கமானவர்கள். இவர்கள் எடுக்கும் விடிவங்களை உணர்ந்து தெளிதல் அரிதினும் அரிது. அதிகாரத்தில் இருப்பவர்களிடன் அணுக்கமாக இருப்பதென்பது இவர்களுக்கு வாய்ப்பது போல எவருக்கும் வாய்ப்பதில்லை; அந்நிலையடைய எத்தகைய தியாகங்களுக்கும் தாயாராயிருப்பவர்கள் ! அதிகாரத்திலிருப்பவர்களுக்கு அணுக்கமானவர்களாக இருப்பினும் உண்மையான அதிகாரத்தைச் செயல்படுத்துபவர்கள் இவர்களே; எந்நேரத்திலும் மறைமுகவாவும், சமயத்தில் நேரடியாகவும் அதிகாரத்தை அடையுமிவர்கள் அதிகாரத்த்திற்காக சதுரங்கத்தில் எவரையும் வீழ்த்தத் தயங்குவதில்லை. சுயநலம் ஒன்றே எப்போதும் பிரதானம்.


சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எய்டன்கள் மற்றும் காத்தவராயன்கள் நைந்து தோற்பது எப்போதும் இந்த முரஹரிகளிடமே. வெள்ளையானை விவரிக்கும் காலகட்டத்திலும் இது நிகழ்கிறது. எப்போதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது; சிறிதளவேனுமாயினும் நல்ல சமூக மாற்றங்களை் நிகழ்த்த விரும்பிய எய்டன்கள் முகவரியற்று மூலைக்குச் செல்லவே எப்போதும் நேரிடுகிறது.


பாவப்பட்ட மக்களுக்கு தன்னிலை உணராத தன்னிலை மறந்த நிலையும், அவ்வப்போது வீசி எறியப்படும் சிற்சில ரொட்டித் துண்டுகளும் மட்டுமே எஞ்சும்; அந்நிலையில் வாழ்ந்தோ அல்லது தன்னிலை மறந்து வீதியில் விழுந்து சாகும் நிலையோ அவர்களுக்கு வாய்க்கலாம். எய்டன்களும் காத்தவராயன்களும் முகவரியற்றுப் போகலாம்.


ஆனால் முரஹரிகள் நிலைத்து நிற்பார்கள்!

வெள்ளையான - ஒரு அவசிய வாசிப்பு.



எழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன்

எழுதியவர் : (1-Oct-17, 6:22 am)
பார்வை : 199

மேலே