அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்
"கடைசியா என்ன தான்மா சொல்ற
சி திஸ் லாஸ்ட்"
"நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்
ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க"
'தடக் தடக் தடக் தடக்'
"லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!
இதான் லாஸ்ட் ஹியரிங்
நோ ஃப்ர்தர் டிலே"
"எல்லாத்தயும் ஏற்கனவே சொல்லியாச்சு சார் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல"
"இங்க பாரு தம்பி! உனக்கு விருப்பமில்ல அந்த பொண்ணு விரும்புதுல்ல
லெட் இட் பி முயூட்சுவல்
ஏற்கனவே உங்களுக்கு நிறைய டைம் கொடுத்தாச்சு, மனசு விட்டு பேசியும் தொலயமாட்றீங்க
இதுக்கு மேல இழுத்துட்டு இருக்க முடியாது"
'தடக் தடக் தடக் தடக்'
"ம்ம் கொடுத்துருங்க சார், இது வரைக்கும் அவ என்கிட்ட எதும் கேட்டதில்ல நானாவும் எதும் கொடுத்ததில்ல
மனசுக்குள்ள இருக்குறத வெளிய வாய்விட்டு சொல்லிருந்தா நானே விலகிருந்துப்பேன்.
இப்பயும் ஒன்னுல்ல, கொடுத்துருங்க"
"ஹே சீன் கிரியேட் பண்ணாத ஒகே
டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்
'ஃப்ராடு' 'மென் ஆர் ஃப்***ங் ஹைப்போக்ரைட்ஸ்"
"மா! இது கோர்ட், நான் ஜட்ச் ஒரு மட்டு மரியாதை இல்ல"
"சாரி சார்!"
"ஜீவனம்சம் எதும் வேனும்மா மா"
"சார் என் வாழ்கைய எனக்கு வாழ தெரியும் அதுக்கு யார் தயவும் தேவையில்ல காசும் தேவையில்ல"
"அவ்ளோ வெறுப்பு சார்,
சார் என் பையன்?"
"என் குழந்த என் கூட தான் இருப்பான், யார்கிட்டயும் தரமுடியாது"
"குழந்தைக்கு வயசென்ன மா"
"இரண்டு வயசு சார், நான் கொடுக்கமாட்டேன், நெவர்"
"இரண்டு வயசு ஒன்னும் பண்ணமுடியாது சட்டப்படி அம்மா கிட்ட தான் இருக்கனும். நீ வேனா மாசத்துக்கு ஒரு இரண்டு நாள் போய் பாத்துக்க"
"மாசத்துக்கு இரண்டு நாள் ம்ம்ம் என் பையன பாக்க இரண்டு நாள் மட்டும் தான் டைம்,
ம்ம்
ஒகே சார் தேங்க் யூ"
"சார் இதோட 113 ம்ம்" என்று டவாலி கூற.
"வாய மூடுற படுவா! ஹூம் இந்த பாவத்தலாம் எங்க போய் கழுவ போறேனோ" என்று அங்கலாய்த்தார் நீதிபதி.
'தடக் தடக் தடக் தடக்'
வாழ்க்கையில் எத்தனையோ உரையாடல்களை அவள் நினைத்து ரசித்ததுண்டு.
காதுமடலின் ஓரத்தில் மென்காற்று வீசி பின் முடியின் கழுத்தோரம் முத்தமிட்டு காதல் மொழிகள் கிசு கிசுத்த உரையாடல்களை நினைத்து நினைத்து களித்த மனது
மறுஜென்மத்தின் நல்வேளையில் அடிவயிற்றின் பாரம் தாங்காது கால் விரித்து கதறி அழுத தருணத்தில் உச்சந்தலையில் முத்தமிட்டு ஆறுதல் செப்பிய வாய்மொழிகளை நினைத்து கண்கள் கசிந்த மனது
ஆனால் மூவாண்டுகள் ஆனபோதும் இன்று இந்த உரையாடல்கள் திரும்ப திரும்ப அவள் காதுகளில் கேட்டு கொண்டு இருக்கிறது. அத்துனை கோபங்களும் தாபங்களும் தாங்கிய அந்த உரையாடலின் பரிசு வெறுமையான தனிமை வெண்மதிக்கு அது பிடித்து போனதா? அல்ல அவள் அதை பழகி கொண்டாளா! என்பதை அவளே அறியமாட்டாள் நினைத்து நினைத்து பேசும் மனதும் பேசிய வார்த்தைகளை நினைத்து கண்ணீர் விடும் மனதும் உளவியலுக்கே சாவல்விடும் பெண்ணின் குணம்.
இரயிலில் அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை ஜன்னலோரம் வீசும் காற்றை கூட தீண்ட முடியாமல் தவித்தாள் வெண்மதி.
இரயில் புறப்பட தயாரானது புதுமண தம்பதிகள் வெண்மதியின் எதிரே வந்து அமர்ந்தனர். கடைசி நிமிடத்தில் சட்டென இரயிலை பிடித்து வெண்மதி எதிரே அமர்ந்தான் ஜீவா. "சார்! ஏன் இப்படி அரக்க பரக்க வர்றீங்க சிலிப் ஆகிருந்தா" என புதுமாப்பிள்ளை கேட்டார்.
"சார் நீங்க வேற சென்னைல ப்ளைட்ட புடிக்கனும்"
"ஹோ அதுக்காக இப்படியா"
"என்ன சார் பன்றது அர்ஜன்ட்"
"எங்க சார் போறீங்க"
"வாழ்க்கைய தேடி சார்" என கூறி ஜன்னலோரம் பார்த்தான். வெண்மதி தலைசாய்ந்து கண்மூடி கிடந்தாள்.
மனதில் சில வண்ணத்துபூச்சிகள் சிறகடிக்க தொடங்கியது அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் காது மடல்களை, மூக்கின் வளைவுகளை அதில் மின்னிய மூக்குத்தியை, இதழ்களை, அவள் கழுத்தை சற்று கிழ் இறங்கி அவள் மடியை பார்த்து கொஞ்சம் கலங்கி போனான்.
தடக்கின் வேகம் குறைய சட்டென்று கண்முழித்து மடியில் கிடந்த கண்ணனை பத்துரபடித்தினாள் இது நடக்க சில விநாடிகள் எடுத்து கொண்ட நேரத்தில்.
புது மாப்பிள்ளைக்கு பதில் கிடைத்தது.
"சிங்கப்பூர் சார்" என்று.
"ஒஹோ"
"வோர்க்குகாக போறீங்களா"
"இல்ல சார் நிரந்திரமா போறேன்"
"ம்ம் என்ஜாய் சார், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்ச"
"இல்ல சார்! ஐயம் ஹன்ட்ரட் பர்சன்ட் ப்யூர் சிங்கிள்,
நீங்க நீயூ மேரிடா வாழ்த்துகள், ஒரு சின்ன அட்வைஸ் மனசுவிட்டு பேசுங்க உள்ள போட்டு எதையும் மறைக்காதிங்க"
"சிங்கிள்னு சொன்னீங்க செம டிப்ஸ் கொடுக்கறீங்க"
இந்த உரையாடல் நீண்டு கொண்டே போனது அவ்வ போது ஜீவா கண்கள் வெண்மதியை வேட்டையாடியது.
வெண்மதிக்கு உள்ளம் சலசலக்க ஆரம்பித்து விம்மி வாய்விட்டு அழ துடித்தது. தன்னவனின் நினைவுகளை சுமக்கலானாள். அவன் தொடாத பாகம் தன்னுள் இல்லை என்றபோதும் எதோ ஒன்றை அவன் மறந்துபோனதை நினைத்து புழுங்கினாள். இனி அவனை செல்லுலாய்டுகளில் சிறைபிடித்த தருணங்கள் மட்டும் தான் அவளுக்கு துணை. இதற்கு காரணம் அவனை மறக்கமுடியாத மனதும் வேறொரு ஆடவனை நினைக்க முடியாத மனதும் தான்.
'தடக் தடக் தடக் தடக்'
சத்தத்தின் வேகம் தான் சற்று குறைந்தது ஆனால் மனதில் ஏற்பட்ட சத்தத்தை தான் அடக்க முடியவில்லை ஏதோ ஒரு உணர்வு மனதின் சுவரோரத்தில் அரித்து கொண்டிருந்தது இப்படியே தான் இந்த பயணம் தொடர்ந்திடாதா வார்த்தைகள் மௌனித்து கண்கள் பேசி கலந்திடாதா என்று துடித்தாள். தூரத்து பார்வையின் சல்லாபம் கூட அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் கிடைத்ததில்லையே என மனம் ஏங்கியது ஆக்ஸிஜன் கூட காதல் காற்றையே நுரையீரலுக்கு கடத்தி சென்றது நினைத்த பாகம் என்னதென்று தெரிந்திற்று ஆனால் அந்த வலித்த பாகத்தை எங்ஙனம் போய் தேடுவது வலித்த மனதிற்கு எப்படி தான் மருத்துவம் பார்ப்பது. எங்கு ௐளிந்து கொண்டு உயிரை உறுவி எடுக்கிறாய் என்று மனக்குரல் மனதிடம் கேட்டது, அதற்கு மனது எப்படி பதில் கூறமுடியும்!.
எல்லோரும் இறங்கிவிட்டார்கள் அவனும் தான், இரயில் கூட அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டது பாவம் அந்த சண்டாளிக்கு தான் நிலை கொள்ளவில்லை. இரயிலின் ஜன்னல் ஓரம் அவன் முகம் தெரிந்திட அள்ளி மாரனைத்து ஓடி வந்தாள் இரயிலின் படிகளில் நின்று கண்களை உலவவிட்டாள் அதோ அகபட்டுவிட்டான் ! அப்படியே சிறைபிடித்திட மாட்டோமா என்று வலித்த பாகம் ஏங்கியது அது முடியுமா!.
மெள்ள அருகில் வந்து அவள் வாயெடுப்பதற்குள்ளே விழித்த கண்ணன் அழைத்தான் "அப்பா! அப்பா!" என்று.
கொஞ்சம் மகிழ்ச்சி தான் இருந்தும் மௌனித்து நின்றான் அள்ளி அணைக்க கைகள் துடித்தது நடுவில் தடுத்து பறித்தாள் வெண்மதியின் தாய், கண்கள் கலங்கியது. வெண்மதியின் கண்களை பார்த்தான் கண்களில் சம்பாஷனை நிகழ்ந்தது வார்த்தைகள் விடுமுறை எடுத்து கொண்டது மொழிகள் காலவரையின்றி மௌனமானது. கண்கள் பேசிக்கொண்டே இருந்தன. இரயில் புறப்பட ஆயத்தமானது. தண்டவாளங்கள் திசை மாற காத்துகொண்டிருந்தது. இப்போதாவது வாய்விட்டு 'நீ எனக்கு வேனும்' என்று சொல்வாளா என சந்திப்பில் விடைபெறும் இரயில்கள் கூட அதிசய்த்து இருந்தது. பாதகத்தி சொல்லாமலே நிற்கிறாள் என கோபங்கொண்டு கிளம்பியது. ஜீவாவின் கண்கள் பரபரத்தன இரயிலை பிடிக்க மூளை உத்தரவிட்டது வெண்மதியின் கரங்களை பற்ற நெஞ்சம்
சொன்னது. நாவும் சதி செய்தது 'சொல்லி தொலயடா !' என உருவமில்லா ஒரு குரல் கூச்சலிட்டது இருந்தும் இருவர் மனதிலும் அந்த உடன்படிக்கை வாசிக்கப்பட்டது.
"ஜீவகாருண்யாவுக்கும் வெண்மதிக்கும் செய்யப்பட்ட விவாகத்தை சட்டப்படி இந்த கோர்ட்டு ரத்து செய்கிறது"
- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி