காதலுக்கு முன்
“உன் கண்ணின் ஒளி,
மின்னலாய் என் நெஞ்சை துளைக்குதடி”,
என தவிக்கும் காதலா
உனக்கு சில கேள்விகள்.
ஒருநாள்,
காணலைக் காட்டி ஏமாற்றும்
கண்ணின் ஓரம் மிளிரும்
கடைசித்துளி காதலும் கசியும்.
விடியல் துயில்தலின் இடைப்பட்ட
சலிப்புச் சக்கரத்தில் சிக்கி
வாழ்க்கை நசுங்கும்.
வாக்கியங்களை மௌனக் கரையான் அரிக்கும்.
அன்று,
உன்னால் என் ஒற்றை விரல் கோர்க்க முடியுமா?
உடல் இறுக்கம் தளரும்,
மனம் தளர்ந்து இறுகும்,
நீள் நிசப்தத்தில் நிர்கதியாய் கிடப்போம்.
ஊன் சிலிர்ப்பற்ற உறக்கத்தில் மிதப்போம்.
அன்று,
இன்று பெருக்கெடுக்கும் காதலின்
கரையாவது மிஞ்சுமா?
பிரபஞ்சத்தின் பெரும்பகுதி வெறுமை,
வெறுமையின் சிறுபகுதி வாழ்க்கை;
பிடித்தோ,
பிடிக்காமலோ,
சேர்ந்து வேடிக்கை பார்க்கத் தயாரா?
படுக்கை அறை, குழந்தை,
பரிட்சயம், தனிமை பயம்
இதைத்தவிர நம்மை பிணைக்க
ஏதோவொன்றை உன்னால் கொணர முடியுமா?
குறட்டை, வேளாவேளை மருந்து,
உப்பிய வயிறு, சுருங்கிய கன்னம்;
வெண்ணிலாவிற்கும், வெண்புறாவிற்கும்
வேலையற்ற நிதர்சனம்
தாக்குப்பிடிக்க தயாரா?
நீ என் உயிர்
என்று பிண்டத்தின் வாயிலாய் பிதற்றாமல்,
உயிரோடு உயிர் உண்மையில்
கலக்க முடியுமென்றால்,
வா காதலிக்கலாம்.
ஊன்
உயிர்
உதிரம் கொட்டி
காதலிக்கலாம்.
அண்டத்தின் தனிமை
வெட்கி தலைக்குனியுமளவிற்கு
காதலிக்கலாம்.