என் பொண்ணு வேலைக்கு போகணுமா

வீடே அமைதியாக இருந்தது. மனதில் பல குழப்பங்களோடு தனது தட்டில் உள்ள தோசையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார் டேவிட் சக்கரவர்த்தி.
டேவிட் சக்கரவர்த்தி சொந்தமாக ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருபவர். நிறைய கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அவருடைய தின வாடிக்கையாளார்கள்.
"எப்போதும் கலகலன்னு பேசுவீங்க இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு" என்று தோசையை எடுத்துக்கொண்டு வந்து பக்கத்தில் அமர்ந்தாள் மல்லிகா.
மல்லிகா ஒரு பொறுப்பான குடும்ப தலைவி. அவளுக்கு தெரிந்த உலகமே அவளுடைய குடும்பம்தான். இந்த தம்பதியருக்கு இரண்டு பெண்குழந்தைகள்.
"என்னங்க நான் பேசிட்டு இருக்கேன் எதுவும் பதில் சொல்லாம இருக்கீங்க" என்று மீண்டும் கேட்டாள் மல்லிகா.
"அது வந்து......" நிறுத்தினார் டேவிட்
"என்ன ஆச்சு உங்களுக்கு உங்க பொண்ணுக்கு வேலைகிடைத்ததில் இருந்து நீங்க மந்திரிச்சு விட்ட மாத்திரையே இருக்கீங்க" என்றாள் மல்லிகா
"ஆமாம் மல்லிகா நம்ம பொண்ணுங்க நம்மோட இவ்ளோ கஷ்டத்திலும் நான் அவங்களுக்கு ஒரு அப்பாவா செய்ய வேண்டிய கடமையை எப்போவும் செஞ்சிருக்கேன்" என்றார் டேவிட்
"ஆமாங்க இப்போ அதுல என்ன பிரச்னை" என்றாள் மல்லிகா
"இப்போ நம்ம பொண்ணு வேலைக்கு வர சொல்லிருக்காங்க................" என்று இழுத்தார் டேவிட்
"ஓஹோ! இது தான் உங்களுக்கு இப்போ பிரெச்சனையா உங்க பொண்ண வேலைக்கு அனுப்பாம வீட்டிலேயே வச்சுக்க போறிங்களா" என்றாள் மல்லிகா
"அப்படி சொல்லல அவள் வேலைக்கு போகணும் யாரையும் சார்ந்து அவ வாழ்க்கை இருக்க கூடாது, அப்படி நினைச்சு தான் அவளை படிக்க வச்சேன்" என்று நிறுத்தி தோசையை பிய்த்து ஒரு வாய் சாப்பிட்டார் டேவிட்.
"ஆமாங்க இப்போ உங்க பொண்ணு அவ சொந்தக்காலில் நிக்க போற அவளை சந்தோசமா வழி அனுப்பாம எதுக்கு இப்படி உம்முன்னு இருக்குறீங்க" என்றாள் மல்லிகா
"அதாண்டி பொண்ண வெளில அனுப்புனா அவளை அவ பாத்துப்பாள? நேரத்துக்கு சாப்பிடுவாளா?........." என்று கேள்விகளை அடிக்கிக்கொண்ட போனார் டேவிட்
"என்னங்க போதும் உங்க பொண்ணு ஒன்னும் குழந்தை இல்லை கல்யாணம் பன்ற வயசாகிடுச்சு" என்று தன் மனதில் இருக்கும் விஷயத்தையும் கூறினாள் மல்லிகா.
"ஆமாடி கல்யாணம் வேற பண்ணனும் மாப்பிள்ளை வீட்டோட மாப்பிள்ளையாத்தான் பாக்கணும்" என்றார் டேவிட்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களின் மூத்த மகள் வீட்டிற்குள் வந்தாள்.
"முகம் கழிவிட்டு வந்து சாப்பிட வா" என்றாள் மல்லிகா தன் மகளிடம்.
அவர்களின் மகள் முகம் கைகால் கழுவி விட்டு சாப்பிட வந்து அமர்ந்தாள்.
"என்ன பாப்பா இன்னைக்கு உன்முகம் சோகமா இருக்கு" என்றார் டேவிட்
உடனே மல்லிகா சொன்னாள் "உங்களுக்கு சோகமா இருந்தா எல்லாரும் சோகமா இருக்குற மாதிரி தான் தெரியும்" என்றாள் அதட்டலோடு.
"என்னமா நடக்குது இங்க" என்றாள் டேவிட்டின் மகள்.
"ஒன்னும் இல்லடி உன்ன வேலைக்கு அனுப்ப உங்க அப்பா ரொம்ப யோசிக்கிறார்" என்றாள் மல்லிகா
"அப்பா நீங்க கவலை படாதீங்க நான் ஒன்னும் குழந்தை இல்லை. அதோட நீங்க எங்களை சொந்தக்காலில் நிக்கிற அளவுக்கு தைரியசாலியா வளர்த்திருக்கிங்க" என்றாள் டேவிட்டின் மகள்.
"இல்லாம்மா எனக்கு தெரியும்... இருந்தாலும்....."என்று நிறுத்தி நிறுத்தி பேசினார் டேவிட்.
"அப்பா நான் உங்க பொண்ணுப்பா இந்த உலகத்தில் எப்படி வாழணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றாள் டேவிட்டின் மூத்த மகள் நிஷா.
அப்பொழுது "என்னை விட்டுட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா" என்று கூறிக்கொண்டே தன் பன்னிரெண்டாம் வகுப்பு கணித புத்தகத்தை மேஜையில் வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள் டேவிட்டின் இளைய மகள் கவிதா.
"என்னடி எப்போவும் கணித புத்தகத்தையே வச்சுக்கிட்டு இருக்குற வேற புத்தகமே படிக்க மாட்டியா" என்றாள் மல்லிகா தன் இளைய மகள் கவிதாவிடம்.
"நான் கணித ஆசிரியர் ஆகா போறேன் உனக்கு என்னமா பிரெச்சனை" என்று தோசையில் சட்டினியை எடுத்து ஊத்தி சாப்பிட ஆரம்பித்தார்.
தன்னுடைய வளர்ப்பில் பிள்ளைகள் பொறுப்பும் தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள பிள்ளைகளாக இருப்பதை கண்டு மனமகிழ்ச்சியோடு தன்னுடைய மனதில் இருந்த துக்கம் நீங்கியவராய் தோசையை எடுத்து சாப்பிட தொடங்கினார் டேவிட்.

எழுதியவர் : மொழியரசு (17-Oct-17, 11:10 am)
பார்வை : 262

மேலே