அன்பின் தீபாவளி எப்போது வருமோ
தீபாவளி தீபாவளி
தீபஒளி திருநாள் இது
தீபாவளி தீபாவளி
தங்க திருநாள் அது
தெருவெல்லாம் மத்தாப்பு
மனசெல்லலாம் சிரிப்பு
வாயெல்லாம் இனிப்பு
வயிறெல்லாம் களிப்பு
அன்புக்காக ஆயிரம்பேர்
அநாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
ஏங்கிக்கொண்டிருக்க
அலைபேசியில் உரக்க
கத்தி கொள்கிறோம்
ஹாப்பி தீபாவளி!
ஹாப்பி தீபாவளி!
நம் சொந்தங்களிடம் மட்டும் ....
ஒளியேற்ற யாருமில்லாமல்
எத்தனையோ இதயங்கள்
இங்கு இருண்டுகிடக்க
கட்டாயம் விளக்கு
ஏற்றி வைத்து
அழகு பார்க்கிறோம்
நம் சாமிக்கு மட்டும் !.
அரை வயிறோடு
ஆயிரம் பேர்
எங்கங்கோ
எப்படி எப்படியோ
வாடிக் கிடக்க
வகை வகையாய்
அடுக்கி வைத்து
நமக்கும் சாமிக்குமென
வயிறு முழுவதுமாய்
நிறைத்துக்கொள்கிறோம்
தப்பாமல் நாம் மட்டும்!
மெல்லிதாய் கொஞ்சம்
மத்தாப்புக்களோடு
புன்னைகைத்து
நிறுத்திக்கொள்வோம்
என்று சொன்னாலும்
பண்டிகை என்றால்
அணுகுண்டு வெடியும்
சரசர சரவெடியும்
ராக்கெட் வெடியும்
விட்டு வெடிசத்ததோடு
உரக்கத் தான்
சிரிப்போம் குட்டி
நரகாசுரன்களாய் என்று
காற்றை குப்பையாக்கி
தெருவையும் குப்பையாக்கித்தான்
கட்டாயம் தீபாவளியை
முடிப்போம் நாங்கள்....
ஆச்சாரங்கள் செய்து
அமர்க்களங்கள் கொண்டு
ஆட்டம் போட்டு
அசத்தலாக கொண்டாடி
வழக்கம் போலவே
வருடம் தோறும்
முடித்து விடுகிறோம்
இந்த தீபாவளியை !
விடாமல் முண்டியடித்து
வரிசையில் நின்று
தீபாவளி திரைப்படங்களின்
முதல்நாள் காட்சியை
பார்த்த பின்னரே
பெருமூச்சு விடும்
பெரும் விசுவாச
கூட்டங்கள் நாங்கள் !
விட்ட குறைக்கு
விடாமல் எங்கள்
வயிறு முழுக்க
மதுவை நிரப்பி
நனைந்து கொள்கிறோம்
தீபாவளி மழையில்
தள்ளாட்டமும் அதனோடே
கொண்டாட்டமுமாய் நாங்கள் !
சுயநல நரகாசுரனை
சுயத்தில் வீழ்த்தி
அப்பழுக்கற்ற அன்பை
அறியாதவனிடமும் பரிமாறி
அழகாய் இணைந்து
அவனியில் கொண்டாடும்
அன்பின் தீபாவளி
எப்போது வருமோ !!