விடையே தெரியாத வினாக்கள் சிறுகதை ​ பாகம் 1


​அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பினாள் ஸ்வாதி .என்னங்க சீக்கிரம் எழுந்திடுங்க , அம்மா கட்டிலில் இருந்து விழுந்துவிட்டாங்க . கூப்பிட்டுப் பார்த்தேன் , கண்ணேத் திறக்கல..பயமா இருக்கு வந்து பாருங்கள் என்று ஒரு பதற்றத்துடன் அழைத்ததும் குமார் வேகமாக எழுந்து ஓடினான் . என்னாச்சு , என்னாச்சு என்று படபடப்புடன் ஸ்வாதியை கேட்டான் . வழக்கம்போல காபி கொடுப்பதற்காக அறையில் நுழைந்ததும் தான் பார்த்தேன் என்றாள் கலக்கத்துடன் .

குமாரும் அம்மா அம்மா என்று உரத்தக் குரலில் அழைத்தும் எந்த அசைவும் இல்லாமல் போகவே , ஸ்வாதி நீ பார்த்துக்கொள் ...எதிர்வீட்டு டாக்டரை அழைத்து வருகிறேன் என்று அவசரமாக சட்டையை சரியாக கூட அணிந்துக் கொள்ளாமல் ஓடினான் . டாக்டர் அப்போதுதான் வாக்கிங் முடித்துவிட்டு வெளியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் . குமார் ஓடிவருவதைக் கண்டவுடன் எழுந்து சென்று கேட்டைத் திறந்து என்ன குமார் ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்றார் . அவன் மேல்மூச்சு வாங்க அரைகுறையாக பேசினான் அம்மாவிற்கு உடல்நலமில்லை சார். மயங்கி இருக்கிறார்கள் தயவு செய்து வந்து பாருங்கள் சார் என்று கெஞ்சும் குரலில் கூறினான் . இதோ வருகிறேன் என்று அவசரமாய் உள்ளே சென்றவர் ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு கையில் ஸ்டெதஸ்கோப் மற்றும் இரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர் , கவலைப்படாதே குமார் என்று அவனை தட்டி கொடுத்துக் கொண்டே அவனுடன் விரைந்தார். இந்த காலத்தில் இவ்வளவு அக்கறையுடன் துடிப்புடன் மனித நேயத்துடன் தொழில் தர்மத்துடன் சேவைபுரியும் எண்ணமுடன் டாக்டர்கள், வீட்டுக்கு வருவது என்பது, மிகவும் அரிது, தெரிந்தவர்களை தவிர .

குமாரும் டாக்டரும் வேகமாக வீட்டில் நுழைவதை கண்ட எதிர்வீட்டு பெரியவர் ஒருவர் என்ன தம்பி, என்னாச்சு என்று சத்தமாக கேட்டார் . இல்லை சார் அம்மாவிற்கு திடீரென்று உடல்நமில்லை அதனால்தான் என்று வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான் . அதற்குள் அந்த பெரியவர் சட்டை கூட அணியாமல் வேகமாக அவன் வீட்டை நோக்கி வந்தார் . என்ன ஆனாலும் அந்த காலத்து மனிதர் ஆயிற்றே ...நிச்சயம் மனிதமும் இரக்கமும் இருக்கும் அல்லவா ..!

டாக்டர் உள்ளே சென்று அந்த அம்மாவை பரிசோதித்தார் . இரண்டு முறை பாட்டி என்று அழைத்தும் பார்த்தார் . ஆனால் ஒன்றும் அசைவும் இல்லை கண்ணைத் திறக்கவும் இல்லை . இரத்த அழுத்தத்தை பரிசோதித்துவிட்டு , குமார் அம்மாக்கு ஏற்கனவே இது போன்று நடந்துள்ளதா என்று கேட்டார் . எப்போது சர்க்கரை லெவல் டெஸ்ட் செய்தார்கள் ..என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார் . அவன் உடனே இரண்டு மாதம் இருக்குமா ஸ்வாதி என்று கேட்க அவளும் ஆமாம் என்றாள் . உடனே டாக்டர் குமாரை வெளியே அழைத்து சென்று அம்மாவின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளது . உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்றதும் அவன் உடனே அவரின் கையைப் பிடித்துக்கொண்டே ...என்ன சார் ஒன்றும் பிரச்சினை இல்லையே சீரியஸ் இல்லையே என்று பதற்றத்துடன் கேட்டான் . என்ன ஆச்சு சார் என்றான் . முதலில் அவரை ஆஸ்பத்திரியில் சேருங்கள் கவலை வேண்டாம் . ஏதோ ஒரு நர்சிங் ஹோம் பெயரை சொல்லி அங்கே அழைத்து செல்லுங்கள் ஆம்புலன்ஸமூலம் . நான் போன் செய்து பேசுகிறேன் அவர்களுக்கு என்றார். அதற்குள் அருகில் நின்றிருந்த எதிர்வீட்டு பெரியவர் , தம்பி நேரம் கடத்த வேண்டாம், டாக்டர் சொல்றபடி செய்ப்பா என்றார் உரிமையுடன் . டாக்டர் அவனிடம் ஒரு காகிதத்தில் ஒரு சிறு குறிப்பு மாதிரி எழுதி அதை குமாரிடம் கொடுத்து ,இதை அங்கே சென்றதும் Duty டாக்டரிடம் காட்டுங்கள் என்றார். அதில் என்ன எழுதியுள்ளார் என்று குமாருக்கு புரியவில்லை .

இதற்குள் அந்த பெரியவர் 108 க்கு போன் செய்துவிட்டார் கையில் உள்ள செல்போனின் மூலம் . குமார் டாக்டரை வழியனுப்பிவிட்டு வேகமாக உள்ளே சென்று ஸ்வாதியிடம் ஏதோ மெல்லிய குரலில் பேசினான் . அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று அந்த பெரியவர் யூகித்துக் கொண்டு , தம்பி அதெல்லாம் யோசிக்காதே , ஒன்றும் கவலை வேண்டாம் , முதலில் அம்மாவை அங்கே சேர்க்கலாம் வா என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்து விட்டது . உண்மையில் 108 ஆம்புலன்ஸ் வசதி பலருக்கும் , குறிப்பாக ஏழைகளுக்கும் நடுத்தர குடும்பங்களுக்குக்கிடைத்த மாபெரும் சேவை , நல்லதொரு வாய்ப்பு என்றே நினைக்கிறேன் .

அதற்குள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குரல் கேட்டது . குமாரும் அந்த பெரியவரும் திரும்பி பார்த்தார்கள் . என்ன சார் ஆச்சு , ஆம்புலன்ஸ் வந்திருக்கிறதே என்றார் ஒருவர் அங்கிருந்தபடியே . குமார், நீ ஆக வேண்டியதை பார் என்று கூறிவிட்டு அந்த பெரியவர் பக்கத்து வீட்டுக்காரர் அருகில் சென்று விவரங்களை எடுத்து கூறினார் . அவர் உடனே அந்த அம்மாவை நேற்று மாலை பார்த்தேனே , வெளியில் நின்று கொண்டிருந்தார்கள் என்றார் . பாவம் அமைதியானவர்கள் என்று சான்றிதழ் வழங்கி கொண்டிருந்தார் . உடனே அந்த பெரியவர் ஆஸ்பத்திரி பெயரை கூறி அங்கேதான் அனுமதிக்க போகிறார்கள் என்று தள்ளி சென்றுவிட்டார் . அதற்குள் ஆம்புலன்ஸில் வந்த ஒரு டாக்டர் , நர்ஸ் , மற்றும் இருவரும் குமாரிடம் விவரங்களை கேட்டுவிட்டு அந்தம்மாவை அழைத்துப்போக ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி கொண்டு வந்தனர் . உடனே அந்த பெரியவர் வீட்டிற்கு சென்று சட்டை அணிந்துகொண்டு வந்து நின்றுவிட்டார் அங்கே . அதற்குள் ஸ்வாதி தேவையான பொருட்களையும் எடுத்து கொண்டு விரைந்து வந்து அவர்கள் கூடவே ஆம்புலன்ஸில் ஏறினாள் . குமார் உடனே ஸ்வாதியிடம் நான் பின்னாடியே வருகிறேன் என்றதும் , அந்த பெரியவர் வாப்பா எனது ஸ்கூட்டரில் சென்று விடலாம் . உனக்கு இருக்கும் டென்ஷனில் நீ வண்டி ஓட்டாதே என்று அறிவுரை கூறி அவரின் வாகனத்தை வெளியே எடுக்க ஆயுத்தமானார் . குமார் ஒன்றும் பதில் கூட சொல்ல முடியாமால் கண்கள் கலங்க , சென்று கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸையே பார்த்து நின்றுவிட்டான் . அப்போது அந்த பெரியவர் வாப்பா , வந்து ஸ்கூட்டரில் உட்கார் என்றதும்தான் சுயநினைவுக்கு வந்து உடனடியாக ஏறிக்கொண்டான் . பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியில் நின்று இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தார்கள் . குமார் அவரிடம் சார் வீட்டை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்றதும் அவர் வேகமாக தலையாட்டினார் . இதுவரை அவரிடம் அவன் பேசியே பழக்கமில்லை . அந்த அளவிற்கு நட்பு பக்கத்து வீட்டாரிடம் இந்த காலத்தில் என்பது பார்த்து பழகிவிட்டது நமக்கு . அறிந்த ஒன்றுதானே நகரத்தில் .

ஆஸ்பத்திரியை அடைந்ததும் அதற்குள்ளாக அவனின் அம்மாவை உள்ளே அழைத்து சென்று ஓர் அறைக்குள் படுக்க வைத்திருந்தார்கள் . ஸ்வாதி கலக்கத்துடன் சற்று கண்ணீர் வழிய வெளியே நின்று கொண்டிருந்தாள் . குமாரை பார்த்ததும் அவனின் கையை பிடித்து அழுத்தினாள் ...குமாருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை . அவன் கண்களும் கலங்கித்தான் இருந்தன . இதுதான் பாச உணர்வின் வெளிப்பாடு . பெரியவரும் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் வந்து விட்டார் . அதற்குள் ஒரு நர்ஸ் வந்து டாகடர் கூப்பிடுகிறார் என்றதும் குமார் விரைந்தான் உள்ளே. டாக்டர் அவனிடம் சார் நீங்கள் என்ன வேண்டும் இவர்களுக்கு , என்ன நடந்தது என்றார். குமார் நடந்தவற்றை கூறிவிட்டு குடும்ப டாக்டர் அளித்த காகிதத்தை அவரிடம் கொடுத்தான் . அவர் வாங்கி படித்துவிட்டு அவனிடம் , சார் உங்க அம்மாவிற்கு heart attack வந்துள்ளது . முதலில் ICU க்கு மாற்றி உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சையை தொடர்கிறேன் . நீங்க reception counter க்கு சென்று விவரங்களை பதிவு செய்துவிடுங்கள் என்றார் . ICU க்கு மாற்ற சொல்லிவிட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று நர்ஸிடம் கூறிவிட்டு யாரோ ஒரு மருத்துவர் பெயரை சொல்லி அவரிடம் உடனடியாக வரச்சொல்லுங்கள் என்று கட்டளையிட்டார் .

Reception counter இல் உள்ள நபரிடம் குமார் ஒரு பாரத்தை வாங்கி அதில் ஏதோ எழுதி கொண்டிருந்தான் . அப்போது அந்த பெரியவரும் அருகில் இருந்தார். உடனே அந்த நபர் சார் முதலில் 50000 ரூபாய் அட்வான்ஸ் கட்ட வேண்டும் என்றார். அதிர்ச்சியடைந்த குமார் நிமிர்ந்து பார்த்து ...ஏன் சார் என்று காரணம் கேட்டான் . அதுதான் இங்கே விதி , வழக்கம் என்றும் என்னென்ன சிகிச்சை என்பதை டாக்டர் முடிவெடுப்பார் என்றார் . குமார் ஒருவித அச்சத்தோடு பெரியவரை பார்த்து , என்ன சார் இது . நான் கையில் 15000 ரூபாய் தான் எடுத்து வந்தேன் . அவ்வளவுதான் என்னிடமுள்ளது என்று சோகத்துடன் கூற , அவர் உடனே , தம்பி கவலைப்படாதே , என்னிடம் Card உள்ளது . நான் பணம் கட்டுகிறேன் . பிறகு பார்த்து கொள்ளலாம் என்றதும் , குமார் அவரின் காலில் விழ முற்பட்டான் . அவர் உடனே அவனை பிடித்து தூக்கி அதெல்லாம் வேண்டாம்ப்பா ...ஒருவருக்கொருவர் உதவாமல் நாமெல்லாம் அருகருகில் இருந்து என்ன பயன் . நான் கடந்த 10 வருடங்களாக உன்னை பார்க்கிறேன் . உனது அம்மாகூட என்னிடம் அடிக்கடி பேசுவார் . முதலில் ஆக வேண்டியதை பார்ப்போம் , வா என்று அவரின் கார்டை எடுத்து அந்த ஆஸ்பத்திரி சிப்பந்தியிடம் கொடுத்து இதன் மூலம் செலுத்தலாமா என்று கேட்டார் . அவர் உடனே தாராளமாக தரலாம் சார் என்று கூறி அந்த கார்டை வாங்கி நடைமுறைகளை செய்தார். குமார் அப்போது தன் மனதில் நினைத்துக்கொண்டான் . இதுவரை நாம் அவரிடம் அவ்வளவாக பேசியதே இல்லை ..அவ்வப்போது பார்த்து சிரிப்பதோடு சரி . ஆனால் இவர் இந்த அளவுக்கு தானாகவே வந்து உதவுகிறாரே என்று.

சிறிது நேரத்தில் அந்த குறிப்பிட்ட இதயநோய் மருத்துவர் வந்து பார்த்து அனைத்து சோதனைகளை முடித்தவுடன் குமாரை அழைத்து ஒன்றும் பயப்பட வேண்டாம். Mild attack தான். முழுமையாக ஓய்வு தேவை. வேறு சிகிச்சை தேவையில்லை. இங்கே இரண்டு நாட்கள் பிறகு அறைக்கு மாற்றி விடுகிறேன். அங்கு மூன்று நாட்களுக்கு இருக்கட்டும். அதற்கு பிறகு வீட்டிலும் நன்கு ஓய்வில் இருக்கட்டும். ஒன்றும் வருந்த வேண்டாம் என்று தட்டிக் கொடுத்து சிரித்துக்கொண்டே சென்று விட்டார். குமார் ஸ்வாதியிடமும் பெரியவரிடமும் இந்த செய்தியை கூறினான். அவர் சந்தோஷமாக இருக்கிறது. நான் கிளம்புகிறேன் தம்பி. ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் சொல்லுப்பா என்று கூறினார் . உடனே குமார் அவர் கையை பிடித்து சார் உங்கள் உதவிக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு அப்பா மாதிரி கூடவே இருந்து பண உதவியும் செய்தீர்கள். நான் மிகவும் விரைவில் பணத்தை கொடுத்து விடுகிறேன் சார். அவரது கரங்களை எடுத்து கையில் ஒற்றிக் கொண்டான். இதை பார்த்த ஸ்வாதியின் கண்களில் நீர் வடிந்தது. ஐயா உங்களைப் போல நல்ல உயர்ந்த உள்ளங்கள் இருப்பதால் தான் மழையும் பெய்கிறது என்றாள்.

உடனே அந்த பெரியவர் அப்படி எல்லாம் இல்லை மா... அதெல்லாம் யாருக்கும் இயற்கையாக நடப்பதுதான். அவருடைய செல்போன் எண்ணை கூறிவிட்டு கிளம்பினார். அவர் செல்வதை இருவரும் கலங்கிய கண்களோடு பார்த்து கொண்டே நின்றனர்.

-----தொடரும்

எழுதியவர் : பழனி குமார் (20-Oct-17, 4:04 pm)
பார்வை : 348

மேலே