விடையே தெரியாத வினாக்கள் சிறுகதை ​ பாகம் 2

அதற்குள் நர்சு வந்து அம்மா உங்களைப் பாட்டி கூப்பிடுகிறார் என்றதும் ஸ்வாதி விரைந்து சென்றாள். அவரின் அருகில் சென்று மெதுவாக அழைத்தாள். அவர் உடனே ஸ்வாதியின் கையை பிடித்து மிகவும் மெல்லிய குரலில் எனக்கு ஒன்றுமில்லை மா. மயக்கமாக இருந்தது. அவ்வளவுதான். வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இப்போது பரவாயில்லை என்றதும் ஸ்வாதி டாக்டரும் சொல்லிவிட்டார் அம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை ஓய்வில் இருந்தால் போதும் என்றும். அதற்காக இங்கே மூன்று நாட்களுக்கு தங்கியிருக்க கூறியுள்ளார். ஒன்றும் கவலைப்படாமல் இருங்கள். அதிகம் பேச வேண்டாம் என்று தலையைக் கோதிவிட்டு கையை தடவிக் கொடுத்தாள். அதற்குள் நர்சு வந்து அம்மா அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நீங்கள் வெளியே இருங்கள் என்று கூறியதால் ஸ்வாதி அரைமனத்துடன் வெளியேறினாள். தனது பெற்றோரை இழந்த ஸ்வாதி தனது மாமியார் ஆனாலும் அவரை தாயாகவே நினைத்தாள். இருவரிடையே தாய் மகள் பாசமே நிலவியது என்றும்.

ஒருவாரம் கழித்து நன்கு குணமடைந்து வீடு திரும்பிய அம்மாவை குமாரும் ஸ்வாதியும் சேர்ந்து அணைத்தபடி உள்ளே அழைத்து சென்று கட்டிலில் உட்கார வைத்தனர் . அந்த பாட்டி சற்று களைப்பாக இருந்தாலும் தெளிவாக இருந்தார் . நன்றாக பேசினார் . ஸ்வாதி அவரிடம் அம்மா நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் என்னைக் கூப்பிடுங்கள் . நீங்கள் தானாக எழுந்திருக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டார் . அந்த வீட்டில் அவர்கள் மூன்று பேர் மட்டுமே . வேறு யாரும் இல்லை . காலையில் ஒரு வேலைக்காரி வந்து சில வேலைகளை மட்டும் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பிவிடுவார் . காரணம் இப்போது எல்லாம் ஒரு நபரே பல வீடுகளில் வேலை செய்வதும் பார்க்க முடிகிறது . காரணம் வறுமையும் ,பிழைத்திட வழியும் என்பதே . அப்போது குமார் ஸ்வாதியை அழைத்து நான் எதிர்வீட்டு பெரியவரை பார்த்து அம்மா திரும்பி வந்ததை கூறிவிட்டு அந்த பணத்தையும் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வருகிறேன் என்று வெளியே சென்றான் .

இதுவரை குமார் அவர் வீட்டிற்கு சென்றதில்லை . இதுதான் முதல் முறை . லேசாக கதவை தட்டினான் . உள்ளேயிருந்து பெரியவரின் குரல் உள்ளே வரலாம் வாருங்கள் என்றார் பார்க்காமலே . குமார் உள்ளே நுழைந்தான் . அங்கே ஹாலில் ஒரு கட்டிலில் ஒரு வயதான பாட்டி படுத்திருந்தார் . அவர் பக்கத்தில் அந்த பெரியவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் . குமாரை கண்டதும் உடனேயே அவர் எழுந்து வாப்பா குமார் , அம்மா எப்படி இருக்கிறார்கள் ...வீட்டிற்கு வந்து விட்டார்களா என்று இடைவெளியின்றி கேட்டார் .உடனே குமார், ஐயா அம்மா இன்று தான் வீட்டிற்கு வந்துவிட்டார் . அதை கூறுவதற்காக தான் வந்தேன் . மேலும் இந்த பணத்தை உங்களிடம் கொடுத்து நன்றி கூறிடவும் வந்தேன் . முதலில் இங்கே உட்கார் குமார் என்று ஒரு நாற்காலியை காண்பித்தார் . குமார் அதில் உட்கார்ந்து கொண்டே அந்த பணத்தை அவரிடம் ஒரு கவரில் வைத்து கொடுத்து ஐயா இந்த தாங்கள் செய்தது மாபெரும் உதவி அதுவும் எதிர்பாராத நேரத்தில் , கேட்காமலேயே என்று தழுதழுக்க கூறினான் . அப்போதுதான் அந்த பாட்டியை கவனித்தான் . சார் இவர்கள் .....என்று ஆரம்பிக்கும் போதே பெரியவர் தம்பி குமார் இவர்தான் எனது மனைவி . சுமார் ஆறு ஆண்டுகளாக நோயினால் பாதிக்கப்பட்டு முழுநேரமும் படுக்கையாகி விட்டார். நான்தான் அவருக்கு எல்லா உதவிகளையும் அருகில் இருந்து செய்து வருகிறேன் . எங்களுக்கு குழந்தைகள் இல்லை .உறவினர்கள் யாரும் அருகில் இல்லை . வேறு வேறு ஊர்களில் பிரிந்து இருக்கிறார்கள் . எவரும் இங்கே அவ்வளவாக வருவதே இல்லை . நான் ஒரு அரசு துறையில் பணியாற்றி பத்து வருடங்களுக்கு முன்னரே ஓய்வு பெற்றவன் . பென்ஷன் தொகையும் வருகிறது , மற்றும் ஒரு கணிசமான தொகையை வங்கியில் கட்டி வைத்துளேன் . வீடு நானே காட்டியது என்று மொத்த விவரத்தையும் கூறி விட்டார் குமாரிடம் . அந்த பாட்டியிடம் அருகில் சென்று நலம் விசாரித்தான் குமார் . அவர்கள் பதிலில் சற்று நடுக்கம், தெளிவின்மை தெரிந்தது .ஆயினும் குமார் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு , அந்த பெரியவரிடம் எந்த உதவி வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள் ஐயா யோசிக்கவே வேண்டாம் என்று அழுத்தமாக கூறிவிட்டு எழுந்திட்டான் . பெரியவர் அவனை வாசல்வரை வந்து வழியனுப்பினார் . நான் பிறகு வந்து அம்மாவை நேரில் பார்க்கிறேன் என்றார் .

திரும்பி வரும்போது அந்த பெரியவரின் பரந்த மனதையும் அவரின் தற்போதுள்ள நிலையையும் நினைத்து வருத்தபட்டான் . அன்று முழுவதும் அவனும் ஓய்வெடுத்து மறுநாள் முதல் வேலைக்குச் செல்ல துவங்கினான் . இரண்டு மாதங்கள் உருண்டோடியது .

ஒருநாள் மாலை 3 மணி இருக்கும் . அந்த எதிர்வீட்டுப் பெரியவர் குமாரை மொபைல் போன் மூலம் அழைத்தார் . சற்று நடுங்கிடும் குரலில் பேசினாலும் அவர் சொல்ல வருவது குமாருக்கு புரிந்தது . குமார் நீ ஒரு உதவி செய்ய முடியுமா என்றார். அவன் உடனடியாக அப்படி எல்லாம்தகேட்காதீர்கள் ஐயா , என்ன வேண்டும் என்று கூறுங்கள் , செய்கிறேன் என்றான் . எனக்கு காலையில் இருந்து உடல்நிலையில் ஏதோ மாற்றம் தெரிகிறது . புரியவில்லை . நான் பார்க்கும் டாக்டரும் ஊரில் இல்லை . அதிகமாக மூச்சு வாங்குது நடப்பதே சிரமமாக இருக்கிறதப்பா . கொஞ்சம் வேலை முடிந்ததம் நேரில் வர முடியுமா ....உன்னிடம் பேசவும் வேண்டும் என்றார். அதற்குப்பிறகு அவனால் ஆபிசில் வேலையே ஓடவில்லை . மேனேஜரிடம் சென்று நிலையை எடுத்து கூறி பர்மிஷனும் வாங்கிவிட்டான் . உடனே புறப்பட்டு நேராக அந்த பெரியவர் வீட்டிற்கே சென்றான் . இதற்கிடையில் ஸ்வாதிக்கு போன் செய்து மொத்த விவரத்தையும் கூறினான் . அவளும் உடனே சென்று பாருங்கள் பாவம் , நல்ல மனிதர் என்றாள் . நானும் அங்கு வருகிறேன் நீங்கள் வந்ததும் என்றாள் .

குமார் அலுவலகத்தை விட்டு கிளம்பி அவர் வீட்டை அடையும்போது அங்கு ஸ்வாதி வெளியே நின்று கொண்டிருந்தாள் . இருவரும் சேர்ந்து உள்ளே சென்று அந்தப் பெரியவரை பார்த்தார்கள் . அவர் அங்கு வழக்கம்போல அவர் மனைவியின் பக்கத்தில் இருந்த பென்ச் மீது படுத்திருந்தார் . அவர் மனைவி இவர்கள் வருவதை கண்டதும் மெதுவாக கையசைத்தார் . குமார் அந்த பெரியவர் அருகில் சென்று என்ன ஐயா , என்ன செய்கிறது ..ஆஸ்பத்திரிக்கு போகலாமா என்றான் . அவர் உடனே மிக மெல்லிய குரலில் அதெல்லாம் வேண்டாம்ப்பா .. அந்த அளவுக்கு என்னால் முடியாத நிலையில் இருக்கிறேன் . நான் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவன் . இரண்டு முறை அட்டாக் வந்து தப்பித்தவன் . ஆகவே இந்தமுறை எனக்கு நம்பிக்கையில்லை . உடனே குமார் , அப்படி எல்லாம் சொல்லாதீங்க ஐயா ...இப்போது மிகவும் நவீன முறையில் சிகிச்சை வந்துவிட்டது . ஆகவே உங்களுக்கு ஒன்றும் நடக்காது , நாம் ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்றான் மீண்டும் . அவர் மறுத்துவிட்டார் . மூச்சு அதிகமாக வாங்கியது . ஸ்வாதி சற்று அச்சமுடன் கவலையுடன் இருப்பது அவளின் முகத்தில் தெரிந்தது. கண்களும் கலங்க ஆரம்பித்தன . இருந்தும் சமாளித்து அருகிலேயே நின்றிருந்தாள் .

அவர் குமாரின் கையைப் பிடித்துக்கொண்டு , தம்பி, உன்னிடம் ஒரு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன் . செய்ய முடியுமா என்றார் . உடனே குமார் சொல்லுங்கள் ஐயா நிச்சயம் செய்கிறேன் என்றான் . நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் . அப்போது இருந்த சாதிப் பிரச்சினை காரணமாக எங்கள் இருவர் வீட்டிலும் ஏற்கவில்லை . நாங்கள் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு எங்கள் ஊரை விட்டு வந்துவிட்டோம் . பல ஊர்களில் மாறி மாறி வாழ்ந்து இறுதியில் சென்னைக்கு வந்தோம் . இந்த வீட்டிற்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . நான் சொந்தமாக வாங்கிய வீடு இது. அவள் படுக்கையான பின்பு அவளை கூடவே இருந்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . அதனால் நான் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன் . சம்பாதித்த பணத்தில் ஓரளவு வங்கியில் போட்டு வைத்துள்ளேன் . ஆனால் இதுவரை எங்கள் இருவரின் வீட்டில் இருந்தும் எங்களை தேடவும் இல்லை , பார்க்க வரவும் இல்லை . மற்ற உறவினர்களும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை ஒதுக்கி வைத்துவிட்டனர். நானும் எங்கும் செல்வதில்லை. அவர் இவ்வளவும் மிகவும் கஷ்டப்பட்டு தான் பேசினார். குமார் உடனே ஐயா இதெல்லாம் பிறகு பேசலாம். ஓய்வெடுங்கள் என்றான் .

இல்லைப்பா, எனது முடிவு நெருங்கி விட்டது. எனக்கு ஏதாவது நடந்து விட்டால் எனது மனைவியைப் பார்த்து கொள்ளுங்கள் தயவு செய்து. கொஞ்சம் பணம் அந்த பீரோவில் இரண்டாவது தட்டில் வைத்து உள்ளேன். எனது இறுதி காரியங்களை அதை எடுத்துக்கொண்டு செய்திடு தம்பி. நீயே எனக்கு எல்லா காரியங்களை எங்கள் மகனாக செய்ய வேண்டும்.

வங்கியில் உள்ள கணக்குகளில் உனது பெயரை தான் வாரிசாக ( nominee)சென்ற மாதமே சேர்த்து விட்டேன். எனது மனைவியைப் பார்த்து கொள்ளுங்கள். அதற்கு அந்த பணம் உதவும். ஏற்கனவே இந்த வீட்டை எங்கள் காலத்திற்கு பிறகு அனாதை இல்லமாக மாற்றி விட உயில் எழுதி அதை நாங்கள் இருவரும் சேர்ந்து பதிவும் செய்து விட்டோம் தம்பி. அதற்கான பத்திரங்கள் அதே பீரோவில் தான் வைத்துள்ளேன். ஏதோ என்னால் முடிந்தது அதுதானப்பா என்றார் . எவ்வளவு பெரிய விஷயம் .இதை சாதாரணமாக சொல்கிறாரே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் குமார் .

குமார் உடனே ஐயா இதெல்லாம் பிறகு பேசலாம். அவன் இதை கூறிக்கொண்டு இருக்கும் போதே இருமல் அதிகமாகி மூச்சு விடவே சிரமபப்பட்டார். ஸ்வாதி உடனே அவரின் நெஞ்சை தடவிக் கொடுத்தாள். திடீரென்று இருமல் நின்று மூச்சு வாங்குவதும் நின்றுவிட்டது. குமார் மிகவும் அதிர்ச்சியுடன் ஸ்வாதியை பார்த்தான்.

அவள் அவரின் கையைப் பிடித்து பார்த்தாள். இருவரும் புரிந்து கொண்டனர் அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று. ஸ்வாதி உடனே கண்ணீர் துளிகள் வழிந்திட அந்த பாட்டியின் அருகில் சென்று இதை எப்படியாவது சொல்லிவிட நினைத்தாள்.

அப்போது தான் கவனித்தாள் அந்தப் பாட்டி ஏற்கனவே இறந்து விட்டதை. அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டாள். திரும்பிய குமார் பேரதிர்ச்சி அடைந்தான். அவனையறியாமலே அவன் விழிகள் நிறைந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதுதான் உண்மையான காதலர்களின் வாழ்க்கையா....?
இதுதான் ஒரு முழுமையான வாழ்க்கை என்பதா........?
தனித்து வாழும் அல்லது தனித்து விடப்பட்ட
அனைவருக்கும் முடிவில் யாராவது ஒருவர் இப்படித்தான் வந்து சேருவார்களா காரியங்களை செய்வதற்கு வருவார்களா ....?

விடையே தெரியாத வினாக்கள் நமது வாழ்க்கையில் எத்தனையோ இருக்கிறது. வாழ்க்கையே ஒரு புதிர்தான் .


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Oct-17, 4:12 pm)
பார்வை : 379

மேலே