கசக்கும் காமம்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான J. M.கூட்ஸியின் நாவல் Disgrace இது 1999ம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றது. கடந்த ஆண்டு இதைத் திரைப்பட மாக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்டீவ் ஜேக்கப்ஸ். ஜான் மால்கோவிச் டேவிட் லூரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நான் பார்த்த மிக அற்புதமான படமிது.




டேவிட் லூரி ஐம்பது வயதைக் கடந்த ஆங்கில பேராசிரியர். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவருக்குள் அடங்காத காமம் எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாக வியாழக்கிழமை தோறும் வேசைகளைத் தேடி சென்று சுகித்து வருவது வழக்கம். படம் அப்படியான ஒரு தொடர்பிலிருந்தே துவங்குகிறது. அவருக்குப் பெண்களின் தேவை மிக அந்தரங்கமானது. ஆனால் தனித்து வாழ்கிறார். விவாகரத்துபெற்று மனைவி அவரைப் பிரிந்து போய்விட்டாள்.



மகள் லூசி ஒரு லெஸ்பியன். அவள் கிராமப்புறம் ஒன்றில் பெத்ரஸ் என்ற கறுப்பின விவசாயியுடன் இணைந்து பூந்தோட்டம் அமைத்துக் கொண்டு தனியே வாழ்ந்து வருகிறாள். பூக்கள் விற்பனை செய்வது அவளது தினசரிவேலை.




டேவிட்டிற்கு பைரன் கவிதைகள் மீது அலாதி ஆர்வம். அவர் இலக்கியவகுப்பில் பைரனை ரசித்து ரசித்து நடத்துகிறார். மிகுகாமம், பிரிவுத்துயிர், மகள் மீதான அன்பு, அவமானங்கள் தடுமாற்றம் என்று நீளும் பைரனின் வாழ்க்கையை போலவே தனது வாழ்வும் அமைந்துவிட்டதாக டேவிட் நம்புகிறார்.




ஒரு மழைநாளில் பல்கலைகழக வளாகத்தின் நுழைவாயிலில் மெலனி என்ற மாணவியை சந்திக்கிறார் லூரி. அவள் அவரது இலக்கிய வகுப்பில் படிப்பவள். அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தன்னுடன் இரவு தங்கும்படியாக சொல்கிறார். எதற்கு என்று அவள் கேட்டபோது பெண்களின் அழகு உலகத்திற்கு பகிர்ந்து தருவதற்கான அளிக்கபட்டது. அது உனக்கு மட்டுமே உரிமையானதில்லை. உன் அழகை நான் அறிய வேண்டாமா என்று நீட்சேயின் மேற்கோளை பயன்படுத்துகிறார். அவள் அவரது காமவேட்கையை புரிந்து கொண்டு விலகி போய்விடுகிறாள்.




ஆனால் அவள் மீது மயக்கமுற்ற டேவிட் தொடர்ந்து அவளைச் சந்திக்கிறார். கவித்துவமாக பேசிப்பேசி மயக்குகிறார். ஒரு நாள் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அந்த நட்பை டேவிட் தொடர விரும்புகிறார். அவளோ அவர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக உணர்கிறாள். தன்னை பேராசிரியர் கட்டாயப்படுத்தி படுக்கையில் இன்பம் கழிப்பதை பற்றி தனது காதலனிடம் புகார் சொல்கிறாள் மெலனி.




அவன் ஒரு நாள் பேராசிரியரை அவரது அறையில் சென்று மிரட்டிவருகிறான். அது லூரிக்கு அவள் மீதான காதலை அதிகப்படுத்தி விடுகிறது. அவள் பரிட்சைக்கு வராத போதும் அவளுக்கு மதிப்பெண் போடுகிறார். விலகி விலகி செல்லும் அவளை எப்படியாவது தன்வசமாக்க முயல்கிறார். ஆனால் நிலை கைமீறிப்போய்விடுகிறது. அவரை காமவெறி பிடித்த பேராசிரியர் என்று அடையாளம் காட்டுகிறாள் மெலனி. அவளது குற்றசாட்டிற்காக விசாரணை நடைபெறுகிறது.




ஒரு நாள் லூரி தான் விவாகரத்து செய்த மனைவியை சந்தித்து அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்கிறார். அவளோ டேவிட் உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும் நீ இது போன்ற தவறுகளை விரும்பி செய்கின்றவன் என்று கேலி செய்கிறாள். டேவிட் அவளிடம் நீ உருவாக்கிய வெறுமையை வேறு எப்படி கடந்து போவது என்று கேட்கிறார். அதற்கு அவளிடம் பதில் இல்லை




மாணவியை பலாத்காரம் செய்துவிட்டார் என்ற குற்றசாட்டு பெரிதாகிறது. மாணவர்கள் அவரை அவமானப்படுத்துகிறார்கள். விசாரணையின் போது லூரி தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். மிக அற்புதமான விசாரணை காட்சியது. லூரி பைரனையே அப்போதும் மேற்கோள் காட்டுகிறார். காமம் விலக்கபட வேண்டியதில்லை. அது உருவாக்கும் பைத்தியக்காரத்தனம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது என்று சொல்கிறார். அவரை வேலையில் இருந்து பல்கலைகழகம் விலக்கிவைக்கிறது. இனி அந்த ஊரில் இருந்தால் அவமானம் தன்னை பின்தொடரும் என்று மகளைத் தேடிப் போகிறார்.




மகள் நீண்ட நாட்களின் பிறகு தன்னைத் தேடி வந்த அப்பாவை விருந்தாளி போலவே நடத்துகிறாள். அப்பாவும் மகளுக்குமான உறவும், விலகலும் இந்த படம் போல இத்தனை அற்புதமான வேறு எதிலும் காட்சிபடுத்தபட்டதில்லை. மிக இயல்பாக இருவரும் நடைபயிற்சி போவதும் தேநீர் அருந்தியபடியே பேசுவதும், ஒருவர் மற்றவரது அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்வதும் என அவரது உலகம் நீள்கிறது. இரவில் எழும் நாய்குரைப்பு அவரை பயங் கொள்ள செய்கிறது. ஆனாலும் அவரது உலகம் நகரவாழ்விலிருந்து துண்டிக்கபட்டு தனித்திருக்கிறது.




லூசி அண்டை நிலத்தில் வாழும் பெத்ரஸ் உதவியோடு அதிகாலையில் எழுந்து பூக்களை பறித்து அருகாமை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறாள். அப்பாவும் மகளும் ஒன்றாக பூக்களை விற்று சந்தோஷமாக வீடு திரும்புகிறார்கள். தனது மீதமுள்ள நேரத்தை நாய்களை பராமரிக்கும் மிருக வைத்தியரான பெண்ணிற்கு உதவி செய்கிறார்கள் டேவிட்டும் அவரது மகளும். வாழ்க்கை கடந்த கால கசப்பிலிருந்து விடுபட்டு நீள்கிறது




ஒரு நாள் அந்த மருத்தவமனையின் முன்பாக மூன்று உள்ளுர் இளைஞர்கள் வந்து நிற்கிறார்கள். சாலை விபத்து ஒன்றில் அடிபட்ட ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும். ஒரு போன் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார்கள். லூசி அவர்களில் ஒருவனை மட்டும் மருத்துவமனைக் கதவை திறந்து கொண்டு உள்ளே அழைத்து போகிறாள். ஆனால் எதிர்பாராமல் மற்ற இரண்டு இளைஞர்களும் ஒடி சென்று அந்தக் கதவை உள்ளே பூட்டிக் கொண்டு அவளைக் கற்பழிக்க துவங்குகிறார்கள்




தன் கண்முன்னே மகள் கற்பழிக்கபடுவதை தாங்கமுடியாமல் கத்தி கூப்பாடு போடுகிறார் டேவிட். அந்த குரல் யாருக்கும் கேட்கவேயில்லை. கதவை உடைத்து உள்ளே போகிறார். அந்த இளைஞர்கள் அவரது மண்டையில் தடியால் அடித்து ஒரு கழிப்பறையில் போட்டு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கிறார்கள். தீக்காயங்களுடன் அவர் கழிப்பறையின் தண்ணீரை அள்ளி அள்ளி தன்மீது ஊற்றிக் கொள்கிறார். அந்த காட்சி வன்முறையின் உச்சம் போல வெளிப்படுகிறது. அவர்கள் லூசியின் வளர்ப்பு நாய்களை கொல்கிறார்கள். பின்பு டேவிட்டின் காரை திருடிக் கொண்டு தப்பிபோய்விடுகிறார்கள்




வேதனையுடன் அழுதபடியே டேவிட் நிமிர்ந்து பார்க்கிறார். தொலைவில் கற்பழிக்கப்பட்ட மகள் அலங்கோலமாக விழந்து கிடக்கிறாள். அவர் காயத்துடன் நடந்து சென்று மகளை எழுப்புகிறாள். அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய போகிறார்கள். தனக்கு நடந்ததை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று மகள் தடுக்கிறாள். அப்பா மிகவும் கோபப்படுகிறார். அவள் அப்பாவோடு சண்டையிடுகிறாள். நான் இங்கேயே வாழ்கின்றவள். இவர்களை பகைத்து கொண்டு என்னால் வாழ முடியாது. அதை புரிந்து கொள்ளுங்கள் என்று கத்துகிறாள். அப்பா மட்டுமே புகார் கொடுக்கிறார். அந்த காட்சியில் காட்டப்படும் காவல்நிலையமும் அங்கே காத்திருப்பவர்களின் முகங்களும் ஆப்ரிக்காவின் குற்றவுலகம் எவ்வளவு வலிமையானது என்பதை ஒரே காட்சியில் வெளிப்படுத்திவிடுகிறது.




வீடு திரும்பும் மகள் அப்பாவை தன்னை விட்டு பிரிந்து போகும்படியாக சொல்கிறாள். அவர் மறுக்கிறார். அது வரை காமம் பற்றி அவருக்குள் இருந்த பிம்பத்தை இந்த நிகழ்ச்சி முற்றிலும் சிதைக்கிறது. பெண் உடலை ஆக்ரமிப்பதற்கு எந்த ஆணுக்கும் உரிமையில்லை என்று அவர் உணர்கிறார். ஒரு நாள் லூசி அப்பாவிடம் சண்டைபோடுகிறாள். தன்னை ஒரு ஆண் வன்புணர்ச்சி கொணடது கொலை செய்ததற்கு சமமானதே. நீங்கள் பல பெண்களை கொன்றிருக்கிறீர்கள் அப்பா என்று கத்துகிறாள். டேவிட் மிகுந்த குற்றவுணர்ச்சி கொள்கிறார்.




மகளுக்கு துணையாக கூடவே இருக்கிறார். நடந்த வன்முறையை மறந்து அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறாள். அண்டை நிலத்தில் புதிதாக வீடு கட்டிய பெத்ரோஸ் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். அதற்காக விருந்து தரப்படுகிறது. அதில் லூசியை கற்பழித்தவர்களில் ஒருவனை காண்கிறார் டேவிட். அவள் பெத்ரோஸின் புது மனைவியின் தம்பி. அவனை பார்த்து கத்துகிறார். காவலர்களிடம் ஒப்படைக்க போவதாக மிரட்டுகிறார். பெத்ரோஸ் அப்படி அவர் நடந்து கொள்ள முடியாது என்று தடுக்கிறான். மகள் அந்த கற்பழிப்பு காரணமாக தான் கர்ப்பமாகி விட்டதாக சொல்கிறாள். அந்த உயிரை அழித்துவிடும் என்று டேவிட் மன்றாடுகிறார். ஆண்களுக்கு அது எளிது. பெண்களுக்கு குழந்தை என்பது ஒரு உயிர். அதன் தகப்பன் யார் என்பது பெரிய விசயமில்லை என்று மறுத்துவிடுகிறாள்.




என்ன சூழல் இது. தன் கண்முன்னே குற்றம் நடந்தபோதும் ஏன் அதற்கு தண்டனை அளிக்கபடவேயில்லை என்று குமுறுகிறார். இப்போது மெலனியின் வாழ்வில் தான் விளையாடிய குற்றம் அவரை அதிகம் உறுத்த ஆரம்பிக்கிறது.
அந்த பெண்ணின் வீட்டினைத் தேடி போகிறார். மெலனியின் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அவளது அம்மாவின் முன்பாக மண்டியிட்டு தனது தவறிற்றாக தான் வருந்துவதாக சொல்லி தன்னை மன்னிக்கும்படி மன்றாடுகிறார். அந்த பெண் அவரை வெறித்து பார்க்கிறாள். மெலனியின் தந்தை உனது பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று உறுதியாக சொல்லி துரத்துகிறார். ஆனால் டேவிட் தன் குற்றவுணர்ச்சியின் பாரத்தை தணிப்பதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பதாக சொல்கிறார்.




மகளது வாழ்க்கை என்னவாக போகிறது என்று தடுமாற்றம் உருவாகிறது. அவளை பெத்ரோஸ் மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டுவிட்டால் அங்கே நிம்மதியாக வாழமுடியும் என்ற நிலை ஏற்படுகிறது. அவளும் சம்மதிக்கிறாள். இந்த பைத்தியக்கார தனங்களை புரிந்து கொள்ள முடியாத டேவிட் லூரி வெடித்து அழுகிறார். அவரது அழுகையின் முன்பாக அவரது கடந்த காலம் கரைந்து போகிறது. உலகின் புரிந்து கொள்ளப்பட முடியாத நெருக்கடிகளுக்காக அந்த கண்ணீர் பெருகியோடுகிறது. முடிவில் தான் நேசித்த வளர்ப்பு நாயை அவரே கொல்கிறார். மகளை பிரிந்து தனித்து வாழ புறப்படுகிறார்.




படம் ஒரு இசைக்கோர்வை போல துவங்குகிறது. மெல்ல உயர்ந்து உயர்ந்து அதன் உச்சநிலையை அடையும் போது நாம் பதைபதைக்க துவங்குகிறோம். மத்திய வயது ஆணின் காமம் பற்றிய மிக சரியான திரைப்படம் இதுவே. படம் முழுவதும் கவித்துவமான வசனங்கள். ஆங்கில இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த படம் ஒரு பெரும் விருந்து. சரியான இடத்தில் சுட்டிக்காட்டபடும் கவிதைகளின் மேற்கோள்கள், டேவிட் லூரியின் வெளிப்பாடு. நடை உடை பாவனை என சிறப்பாக படமாக்கபட்டிருக்கிறது.




காட்சிபடுத்தபட்ட விதத்தில் ஒளிப்பதிவின் தேர்வும் நிறங்களும் உயர்ந்த ரசனை கொண்டவை. அண்டை வீட்டாருக்கும் அவர்களுக்குமான விலகலின் பின்பு கேமிரா கொள்ளும் விலகல் மற்றும் தூரக்காட்சிகள் காட்சியின் மனநிலையை துல்லியமாக பிரதிபலிக்கின்றன. படத்தின் பின்ணணி இசை நகரவாழ்வின் கேளிக்கைகளில் துவங்கி மெல்ல மாறி கடைசியில் கலவையான மரபிசையுடன் ஒரு புத்துணர்வை தருகிறது.




இதை நாவலாக படித்தபோது நான் இந்த அளவு எழுச்சிகொள்ளவில்லை.ஆனால் சினிமாவாக பார்க்கும் போது அந்த நிலக்காட்சிகள், மிகையற்ற நடிப்பு. நீருற்று போல அமைதியாக பொங்கும் காமம், பனிதுளியுடன் உள்ள மலர் போன்ற மகளின் அன்பு யாவும் நெருக்கமாகி படம் முடியும் போது பெரும்மனத்துயர் கவ்விக் கொண்டுவிட்டது.




கூட்ஸி தஸ்தாயெவ்ஸ்கிக்கும் அவரது வளர்ப்புமகனுக்குமான உறவை பற்றி மாஸ்டர் ஆப் பீட்டரர்ஸ்பெர்க் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இந்த படம் பைரனின் சாயல் கொண்டது. இன்னொரு நாவல் காப்காவை பற்றி எழுதியிருக்கிறார். யோசிக்கையில் தனது நாவல்களின் மூலக்கதையாக எழுத்தாளர்களின் வாழ்க்கையை கூட்ஸி தேர்வு செய்கிறார் என்பது புரிகிறது.




ஆப்ரிக்காவின் சமகால நெருக்கடியான புறச்சூழலை இந்த படம் மிக ஆழமாக சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் கறுப்பர்களை விட வெள்ளையர்களே அதிகம் வன்முறையால் பாதிக்கபடுகிறார்கள் என்று கூட்ஸி சுட்டிக்காட்டுகிறாரோ என்ற உள்அரசியலும் புரிகிறது. படம் முழுவதும் கறுப்பர்கள் வன்முறையின் அடையாளங்கள் போலவும் வெள்ளைக்கார்கள் சமாதானப்புறாக்கள் போலவும் சித்திரிக்கபடுகிறார்கள். அது தான் படத்தின் முக்கிய உறுத்தல்.




சமகால நாவல் ஒன்றின் திரைவடிவம் என்பதால் அது மூல நாவலுக்கு மிக நெருக்கமாகவே உருவாக்கபட்டிருக்கிறது. பெரும்பான்மையான உரையாடல்கள் காட்சிகள் நாவலில் உள்ளது போன்ற அப்படியே படத்திலும் இருக்கிறது. ஜான் மால்கோவிச்சின் நடிப்பு ஒப்பில்லாதது. ஆங்கில பேராசிரியரின் கவித்துவம். பெண்களை கவரும் தந்திரம். தனிமை, குற்றமனப்பாங்கு. மகள் கற்பழிக்கபடும்போது ஏற்படும் ஆத்திரம். வன்முறைக்கு எதிராக ஒன்று செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் என அவரது நடிப்பின் உயர்சாத்தியங்கள் வியப்பளிக்கின்றன.




இந்த படம் தந்த உத்வேகம் பைரனை மீண்டும் வாசிக்க வைத்தது. பைரன் பிரபு வம்சத்தை சேர்ந்தவர். ஒரே பையன். சிறுவயதில் தாயின் கண்டிப்பிற்குள் வளர்ந்து தனிமையை அதிகம் உணர்ந்தவர். பேய்மாளிகை போன்ற பெரிய வீட்டில் அடைந்து கிடந்து பிரபுவம்ச வாரிசாக வளர்ந்தவர்.அந்த வெறுமையை தணித்து கொள்ள அவருக்கு காதலே உதவியது. தினம் ஒரு பெண்ணோடு படுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு நூறு நாட்கள் தான் அப்படி நடந்து கொண்டதாக பைரன் குறிப்பிடுகிறார். அவரது காதலும் அந்த காதலிக்களுடன் அவருக்கு ஏற்பட்ட சண்டைகளும் தனிச்சிறப்பு மிக்கவை.



இவரது மகள் ஆடா கணிதமேதை. தந்தையின் நிழலே தன்மீது விழாமல் ஒதுங்கி வாழ்ந்தவள். இன்றுள்ள மென்பொருள் துறையின் ஆரம்ப கால கணித முயற்சிகளே இவளே மேற்கொண்டாள். இதில் இருந்தே பின்னாளில் கணிணி உருவானது என்கிறார்கள். தனக்கு பையன் பிறப்பான் என்று நம்பினார் பைரன் ஆனால் பெண் பிறக்கவே அவள் மீது துளியும் பாசமில்லாமல் போய்விட்டார் . அத்துடன் ஆடாவின் தாய் ஆனி இசபெல்லை விவாகரத்து செய்தும் விட்டார் என்று குறிப்பிடுகிறார்கள் விமர்சகர்கள்.



கூட்ஸி தன் நாவல் முழுவதும் பைரனின் நினைவுகளை சரியாக மீள்உருவாக்கம் செய்திருக்கிறார். படம் சில இடங்களில் நபகோவின் லோலிதாவை நினைவுபடுத்துகிறது. சில நேரங்களில் காப்காவின் விசாரணை நாவலில் வரும் மனக்கொந்தளிப்பிற்கு நெருக்கமாக இருக்கிறது.




ஐம்பது வயதுள்ள மனிதன் காமத்தை எப்படி எதிர்கொள்வது. என்பது பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனை, காமம் அணையாத நெருப்பு என்று லூரி குறிப்பிடுகிறார். அது தணிவதேயில்லை. தன் மனது நிறைய பெண்களை நேசிப்பதற்கானது. எந்த பெண்ணும் தன்னை புரிந்து கொள்ளவேயில்லை என்று வேதனைபடுகிறார்.



மெலனியின் மீதான அவரது ஈர்ப்பு துவங்கியதுமே அவர் லூசிபரை பற்றிய கவிதையை வகுப்பில் பாடம் எடுக்கிறார். சாத்தானின் தூண்டுதல் முக்கியமானது. அவன் நம்மை விழிப்படைய வைக்கிறான் என்று சொல்கிறார். மெலனி அவரிடம் ஆரம்பத்தில் ஈர்ப்பு கொள்கிறாள். அது அவரது கவிதைகள் தரும் ஈர்ப்பு. நாடகத்தில் நடிக்கும் அவள் அவரது சொற்களின் மீதே மயக்கம் கொள்கிறாள். அவர் தன்னை உரிமையாக்கி கொள்ள முயற்சிக்கும் போது அவரது உடலும் வயதும் அதிகாரமும் அவளை எரிச்சல் கொள்ள செய்துவிடுகிறது. விலகி போக நினைக்கிறாள். அவர் மறுக்கவே எதிர்நிலை கொள்கிறாள். அவள் காமத்தை விளையாட்டாக கருதுவதை அவள் மேடையில் போடும் வேஷம் நன்றாக வெளிப்படுத்துகிறது.




மெலனியின் நேர் எதிரான படைப்பு மத்திய வயதுடைய மிருக வைத்தியரான பெண். அவளுக்கும் காமம் தேவையானதாகயிருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த மறுக்கிறாள். அவளோடு டேவிட் கொள்ளும் பாலுறவு இருவரையும் சாந்தப்படுத்துகிறது. அவர்கள் அந்த காமத்தின் பிறகு மிக நிதானமாக தெருநாய்களை விஷ ஊசி போட்டு கொல்கிறார்கள். அதை எடுத்துக் கொண்டு போய் புதைத்து வருகிறான் டேவிட். இப்படியாக காமத்தின் வேறுவேறு நிலைகளை படம் தீவிரமாக ஆராய்கிறது.




இப்படம் சம்பிரதாயமான தென்னாப்பிரிக்க படங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது. இப்படத்தை ஆஸ்திரேலியாவின் திரைப்படத்துறை தயாரிக்க உதவி செய்திருக்கிறது. கூட்ஸியின் நாவலை வாசித்தவர்களுக்கு இது கூடுதல் சந்தோஷம் தரக்கூடும். வாசிக்காதவர்கள் படம் பார்த்தபிறகு வாசித்தால் ஒரு திரைப்படம் சமகால இலக்கியபடைப்பை எவ்வளவு ஆழமாக புரிந்து கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாக உணர முடியும்.



•••






ராமகிருஷ்ணன் .

எழுதியவர் : (19-Oct-17, 10:15 pm)
Tanglish : kasakkum kamam
பார்வை : 371

மேலே