என் கனவு காதலி

பச்சை பயறு மாவுடன்
கஸ்தூரி மஞ்சள் கலந்த
கலவைதான் அவள்
முகம் கழுவும்' சோப்பு'
கழுவியபின் அந்த முகத்திற்கேது
வேறு, மேக்கப் '-ஆனால் அப்பப்பா,
விண்ணிலிருந்திறங்கிய முழுநிலவாய்
அல்லவா அவள் முகம் ஜொலிக்குது
நெற்றியில் இட்ட குங்குமப்பொட்டு
நிலவில் பதித்த சிவப்பு ரத்தினமோ
அந்த முழுநிலவாம் முகத்திற்கு
இயற்கையாய் மெருகூட்ட

இதோ அவள் சிரிக்கிறாள்
செவ்வாய் திறந்து பரல் பரலாய்
வெண்முத்துப் பற்கள் தெறிக்க
அவ்வளவில் சோலை குயில் கூவ
மங்கை அவள் பாட அதுவும் குயில் இசையானதே



கட்டவிழ்ந்து தோளில் வீழ்ந்த
அவள் கார்குழலோ கார்மேகமோ
நித்தம் அதில் வாசம் செய்யும்
மல்லிகைப்பூ தந்ததோ பரிமளம் ,
அதனால் அவள் அருகில் வந்து நின்றாலே
திவ்ய மணம் வீசி என் இதயத்தை
என்னையும் அறியாமல் அவளிடம்
சரணடைய செய்கிறதோ

தாமரையாய் மலர்ந்த அவள் கண்கள் இரண்டில்
இருக்கரு வண்டுகள்போல் கருவிழிகள்
அதில் அவள் பார்வை மான் தந்ததோ அவள் மருள,
வேல் தந்ததோ அவள் கோபத்தில் சீறிப்பாய ,
கண்ணல்லவோ அழகிய கண்ணல்லவோ அவை
மலரில் செய்த மைமட்டுமே அதில் அலங்கரிப்பு,
அவள் அறியாள் வேறு' மேக்கப் '

மூடிய அவள் சிறிய வாய்
சிவந்த அதரங்கள் இரண்டால்
கொவ்வைப்பழமானதோ அந்த
சிவப்பு வண்ணத்திற்கு அவள்
மேல் பூச்சு ஏதும் செய்யவில்லையே
அது அவள் படைப்பில் வந்தஅழகு
அவள் வடிவழகு

பட்டணத்து நாகரீகம் இன்னும் இவள்
மனதில் ஈடுபாடு ஏற்படுதலையோ -பின்
இன்னும் இந்த யுகத்தில் அவள்
சிற்றாடையில் தன்னை மறைத்து கொள்வதேன்
வஞ்சிக்கொடிதான் அவள் இடையோ
அவள் கனவுகன்னிதான் அசைந்து அசைந்து
வருகையிலே, கால்களின் கொலுசு இசைப்போட

இவள்தான் நான் மனதில் உருவகித்த
கிராமத்து கட்டழகி - பட்டணத்து மணம் தீண்டா
கிராமம் தேடி அலைந்தால் பார்வைக்கு
கிடைப்பாளோ என் இந்த கனவு காதலி ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Oct-17, 5:21 pm)
Tanglish : en kanavu kathali
பார்வை : 528

மேலே