திங்கள் - கலி விருத்தம்

நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப. 56 வளையாபதி

பொருளுரை:

கணிகை மகளிர்தாம் தம்மை விரும்பிய காமுகர் பொருள் தரும் வரையில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற காதலுடையார் போற் காட்டிப் பின்னர் அக்காமுகர் பொருள் தருவது குறையும் பொழுது நாளுக்கு நாள் அருகிவருகின்ற காதலுடையராய் அக்காமுகர் வருந்தும்படி நடந்து கொள்வதால்,

முதற் பகுதியிலே நாளுக்கு நாள் வளர்ச்சிபெற்று உயர்வினை யடைந்தும், இறுதிப் பகுதியிலே நாளுக்கு நாள் ஒளிமழுங்கித் தேய்தலுடைய ஒளியுடைய நிலவினை ஒப்பர் என்பதாம்.

விளக்கம்:

கணிகையர் தம்மை விரும்பும் காமுகர் பொருளீயும் வரையில் நாளுக்கு நாள் காதல் மிகுவார் போன்று காட்டி, அவர் பொருளீதல் குறையுங் காலத்தே அன்பினையும் நாளுக்கு நாள் குறைத்துக் கொள்வதால்,

ஒளிப்பக்கத்தே நாளுக்கு நாள் வளர்ந்து இருட்பக்கத்தே நாளுக்கு நாள் தேய்ந்தொழியும் திங்கள் மண்டிலத்திற்கு ஒப்பாவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Nov-17, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே