வண்டிமாடு நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

வண்டிமாடு !

நூல் ஆசிரியர் : கவிஞர் உமையவன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில்பள்ளம்,
அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18.
பக்கம் : 80, விலை : ரூ. 75.

******
இளம் படைப்பாளி ப. இராமசாமி என்ற இயற்பெயரைக் கொண்டவர். உமையவன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார். வளர்ந்து வரும் படைப்பாளி. சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் பங்கெடுத்து வருபவர். இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜாவின் மூலம் அறிமுகமானவர்.

எம்.பி.ஏ., எம்.காம்., எம்.ஏ., போன்ற பட்டங்கள் படித்து இருந்தாலும் பிறந்து வளர்ந்தது ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கனூர்பாளையம் என்பதால் மண்வாசத்தோடு உழவு கலந்த முதல் ஹைக்கூ நூலை வடித்துள்ளார். பொருத்தமாக உழவுக்கு உதவிடும் ‘வண்டிமாடு’ என்று பெயரும் சூட்டி உள்ளார், பாராட்டுக்கள்.

ஊடகங்கள் இந்த நாட்டில் நடிகைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை உணவு தரும் உழவர்களுக்குத் தருவதில்லை. உழவு பற்றிய இன்றைய நிலை ஹைக்கூ கவிதைகள் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார் உழவர் மகன் உமையவன். இந்நூலை பெற்றோருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார், சிறப்பு.

அறுவடைக்காலம்
அடமானத்தில்
வண்டிமாடு!

இன்னல்படும் இன்றைய உழவர்களின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டி உள்ளார். உலகிற்கே உணவு தந்திட்ட உழவன் துன்பத்தில் உழல்கிறான் என்பதே உண்மை. உழவர்கள் தலைநகரில் டெல்லியில் எத்தனையோ வழிகளில் போராடியும் அவர்களின் இன்னல் இன்னும் தீர்ந்தபாடில்லை எனபது மனிதநேய ஆர்வலர்களுக்கு வேதனையான ஒன்று.

மெல்ல இடப்பெயர்வு
அகதிகளாக நகரங்களில்
விவசாயிகள்!

உண்மை தான். உழுதவன் கணக்குப் பார்த்தால் உலக்குக் கூட மிஞ்சவில்லை என்ற கதையாகி விட்ட காரணத்தால், உழவர்கள் உழவை வெறுத்து நிலத்தை விற்று விட்டு நகரத்திற்கு இடம்பெயர்ந்து விடுகின்றனர்.

வரப்புச் சண்டைகள்
இனி இல்லை
வீடானது நிலம்!

விளைநிலங்கள் எல்லாம் வீடாகி வருவது வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால் மனிதனுக்கு உண்ண உணவில்லாத ஒரு நிலை வந்து விடும்.

வண்டித்தடங்கள்
புல் முளைத்து கிடக்கின்றன
பாதை மறந்த வண்டிமாடுகள் !

நூலின் தலைப்பை நினைவூட்டிடும் ஹைக்கூ நன்று. உழவு பொய்க்கும் போது விளைச்சலும் பொய்க்கும். விளைச்சல் பொய்க்கும் போது வண்டிமாடுகளுக்கு வேலையும் இருக்காது, பாதையில் புல் முளைக்கும் பாதை மறக்கும் என்ற இயல்பை இயல்பாகப் படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுக்கள்.

கடன் வாங்கி விவசாயம்
வளர்கிறது
வட்டித் தொகை !

வறுமையில் வாடிடும் உழவர்கள் கடன் தொகையை வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டினால் கண்டுகொள்வதில்லை. கோடிகளை சுருட்டி விட்டு சென்ற கொள்ளையனை குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடிவதில்லை.உடனடியாக பிணையில் விடுதலை ஆகிறான் .ரொட்டித் திருடனுக்கு சிறை ,கோடிகள் திருடனுக்கு குளுகுளு அறை என்ற அவலநிலை மாற வேண்டும். . நாட்டுநடப்பை வாசகரின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

கைவிடப்பட்ட விவசாயம்
காவல் காக்கிறது
சோளக்காட்டு பொம்மை!

விளைச்சல் இருந்தால் தான் சோளக்காட்டு பொம்மைக்கு வேலை இருக்கும். ஆனாலும் கடமை தவறாமல் காவல் காக்கும் சோளக்காட்டு பொம்மையைக் காட்சிப்படுத்தி உள்ளார்.

இறந்த விவசாயம்
எழுப்பிய நினைவுத்தூண்
எங்கும் கட்டடங்கள் !

நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள விளைநிலங்களை எல்லாம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பணம் குவித்து வருகின்றனர். ஒருநாள் உணவே இன்றி வாடும் போது பணங்களை உண்ண முடியாது என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. இனியாவது விழிக்க வேண்டும். விளைநிலங்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் விதைத்தது நன்று.

விவசாயத்தை நம்பி
வாழ்க்கைத் துணையின்றி
வாழாவெட்டி ஆண்கள்!

இயந்திரமயமாகி விட்ட இன்றைய உலகில் கணினிப் பொறியாளருக்கு பெண் தருவோம் என்று போட்டி போடுகின்றனர். ஆனால் உழைக்கும் உழவனுக்கு பெண் கொடுக்க யாரும் விரும்புவது இல்லை. இந்நிலை மாற வேண்டும், உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவர் வாக்கு பொய்க்காது உழவனை இந்த உலகம் வணங்கி நிற்கும் நிலை வந்தே தீரும், உண்மை.

வக்கோல் போர்
என்ன பயன்
விற்பனையில் மாடுகள்!

அறுவடை முடிந்து வைக்கோல் போர் அடுக்கி வைத்து இருப்பான். அறுவடை நெல் விலை போய் இருக்காது அல்லது கடனுக்காக வங்கியில் செலுத்தி இருப்பான். ஆனால் அவனுக்கு உண்ண உணவு இருக்காது. மாடுகளை விற்று பசியாற வேண்டிய அவல நிலை. மாடுகளை விற்ற பின்னே வக்கோல் போர் பயன்படாது. அதனையும் விற்று விடுவான். கிராமத்தின் இன்றைய நிலையை ஹைக்கூ கவிதைகள் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுக்கள்.

மண் உண்டியல்
சேமித்து வைத்தது
மழை நீரை!

மழை நீரை மண் சேமித்து வைக்கின்றது. எனவே மழைநீரை சேமிக்கும் நல்ல பழக்கத்தை எல்லோரும் பழக வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ்ந்திட மழைநீர் சேமிப்பு என்பது அவசிய அவசரம்.கோடை காலத்தில் தூர் வாரி இருந்தால், மழை காலத்தில் வெள்ளம் வராது.பயிர்கள் நாம் ஆகாது .முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதே இல்லை . உழவனின் வாழ்க்கை துன்பத்தில் மிதக்கிறது

வளர்ந்து வரும் படைப்பாளி கவிஞர் உமையவன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றார். நூல்களுக்காக பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளார். வண்டிமாடு என்ற இந்த நூல் குறுகிய காலத்தில் இரண்டாம் பதிப்பும் வந்து விட்டது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் உயர்ந்த விருதுகளும் பரிசுகளும் உங்களுக்கு வந்து சேருமென்று வாழ்த்துகின்றேன்.கிராமிய புகைப்படங்களுடன் நூல் வடிவமைப்பு மிக நன்று .பாராட்டுக்கள் .

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (5-Nov-17, 11:10 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே