குழந்தைகள் உயரம் தொடவேண்டியவர்கள்

மனிதன் மீண்டும்மீண்டும் பெறத்துடிக்கும் ஓர் அறிய பருவம் குழைந்தைப்பருவம். இப்பருவமே ஒருவர் வாழ்க்கையின் அடித்தளம். எதிர்கால சிந்தனைகள் அதிகமில்லா ஓர் நிகழ்கால கொண்டாட்டம் அது.
இப்பருவங்களை சிறப்பாய் அமைத்துக்கொடுப்பதென்பது அக்குழந்தைகளைச் சார்ந்தவர்களின் கடமை. முக்கியமாக பெற்றோர்கள்.
குழந்தைகளின் உணர்வுகள் மதிக்கப்படவும் கவனிக்கப்படவும்வேண்டிய ஒன்று.
காரணம்,
இப்ருவத்தின் ஒவ்வொரு உணர்வுகளும் மனதில் ஆழமாக பதிந்துவிடக்கூடியவை.
அப்படி பதியக்கூடிய விஷயங்கள் நேர்மறையாகவும், எதிர்கால உலகத்தை எதிக்கொள்ளும் சக்தியுடையதாகவும் இருக்கவேண்டுமே தவிர துளியும் எதிர்மறைகள் தீண்ட அனுமதித்திடக் கூடாது. ஒருவேளை தீண்டியிருந்தால் அதை எதிக்கொளும் நம்பிக்கை ஆயுதம் கொடுக்கப்படவேண்டும்.
குழந்தைகளின் சிரிப்பை கவனியுங்கள், அவை ஏளனம் செய்யும் கூட்டங்களிலிருந்து வருமாயின், அண்டவிடாதீர்கள். அறிவுறுத்துங்கள்.
அழுகையை கவனியுங்கள்,
சில கடின வார்த்தையால் மனம் காயப்பட்டிருக்கலாம். அழுகை அர்த்தமற்ற அடம்பிடித்தலாக இருப்பின், அழுவதே சிறப்பு.
பின் விளக்கி கூறுங்கள்.
கோபங்களை கவனியுங்கள், சமாதானம் செய்யுங்கள். முக்கியமாய், பிறர் மீதான உங்கள் கோபங்களை பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள்.
ஆடு பகையாகிப்போன இடங்களில் குட்டிகள் உறவாடலாம், தகுதியிருப்பின் தடுக்காதீர்கள்.
ஏக்கங்கள் எதற்காக இருப்பினும், அன்பிற்காக இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அமைதிக்கான அர்த்தங்கள் பல. குழந்தையின் மாற்றம் அமைதியாய் இருப்பின் விளைவுகள் அதிகம் இருக்கலாம். உடனடியாய் கலந்துபேசுங்கள்.
சரியானவற்றை செய்ய அச்சம் தடையாய் இருக்கவிடாதீர்கள். தைரியமுடையவர்களே சாதனையாளர்கள்.
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒப்பிடும் நேரம் வந்தால் தன் குழந்தைகளை தாழ்வுமனம்கொள்ள வைத்துவிடாதீர்கள். அதன் வலிகள் அதிகம்.
சிறுசிறு தோல்விகளை ஏற்றுக்கொண்டு வெற்றியடைய கற்றுக்கொடுங்கள்.
உணவில் அக்கறை எடுங்கள், ஆரோக்கிய குறையினால் மனம் பாதித்திடக்கூடாது.
உடைகளில் அக்கறை எடுங்கள், சில மோசமான
கண்களின் ஆபாச தாக்குதல்களால் மனம் வேதனையடைந்திடக்கூடாது.
அறியவையுங்கள்
புரியவையுங்கள்
சொல்லிக்கொடுங்கள்
சுற்றிக்காட்டுங்கள்
தவறான பாதைகளில் செல்லும் கிளைகளை இளமையிலேயே கண்டு களையுங்கள்.
குழந்தைகள் உயரம் தொடவேண்டியவர்கள்
பறந்து ஓடி ஆட வேண்டியவர்கள்
எதிர்கால உலகம் அவர்கள்