கடவுள் இருக்கிறாரா
#கடவுள்இருக்கிறாரா??
நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஏதிஸ்ட். உங்கள் குழந்தைகளுக்கு விஞ்ஞான உண்மைகளை தெளிவுபடுத்தி வளர்க்கிறீர்கள். அவர்கள் உங்களைப்பார்த்து
நாம் எப்படி பிறந்தோம்? உயிரினம் எப்படி தோன்றியது? பூமி எப்படி தோன்றியது? பிரபஞ்சம் எப்படி? பெருவெடிப்பு எப்படி? என்றெல்லாம் தொடர்ந்து கேள்வி கேட்பார்கள் என்று நினைக்க வேண்டாம். They are ultra smart generation. இந்த கேள்விகளுக்கு, உங்களுக்கும் அவர்களுக்கும் பதில் தெளிவாக தெரிந்திருக்கும்.
ஆக அவர்களுடைய கேள்விகள் சற்று வித்தியாசமாக இப்படி இருக்கும். 'அப்பா, நாம் ஏன் தோன்றினோம்?'.. 'ஏன் உயிர்கள் தோன்றியது?'.. 'ஏன் புவி தோன்றியது?'.. 'ஏன் பிரபஞ்சம்?'.. 'ஏன் பெருவெடிப்பு?'.. என்றுதான் கேட்பார்கள். அப்போது 'ஏதிஸ்ட்'டான உங்களால் என்ன பதில் கூறிட முடியும்?..
ஐன்ஸ்டின் இதனை இப்படி சொல்கிறார். 'விஞ்ஞானத்தால் எப்படி என்ற கேள்விகளுக்கு பதில் தரமுடியும், ஆனால் ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் தரமுடியாது, ஆக இதற்கு Cosmic religious feelings என்ற முறைமை அவசியமாகிறது.' இதன் மூலம் இயற்கையின் சுப்பர்நெச்சுறல் விளைவுகளுக்கான விளக்கங்களை உளரீதியாக நாமாகவே புரிந்து முடிவெடுத்துகொள்ள முடியும். என்பது ஐன்ஸ்டினின் கருத்து.
ஆதி விஞ்ஞானம் "கடவுள் படைத்தார்" என்ற கருதுகோளில்தான் ஆரம்பித்தது. இந்த கருதுகோளுக்கான விடையாகவே இன்று வரை விஞ்ஞானத்தின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது.
ஆக நமக்கான சரியான புரிதலே போதும். கடவுளையும் விஞ்ஞானத்தையும் குழப்பவேண்டியதில்லை. உங்களுக்கு 'எப்படி?' என்ற கேள்வி ஏற்பட்டால் கடவுள் தேவையில்லை. 'ஏன்?' என்ற கேள்வி ஏற்பட்டால் கடவுள் தேவை. இதுதான் விஞ்ஞானத்தின் இன்றைய நிலைமை.
புவிக்கு ஈர்பு சக்தி இருக்கிறது என்று நியூட்டன் ஆப்பிள் கதை சொன்னார், நாமும் நம்பித்தான் வாழ்ந்தோம். ஏனென்றால் ஆப்பிள் விழுகிறதே " ஓ.. நியூட்டன் சொல்வது உண்மைதான், புவிதான் ஆப்பிளை தனது ஈர்ப்பு சக்தியால் இழுத்திருக்கிறது" என்று கண்களை மூடிக்கொண்டு நம்பி விட்டோம். பிற்காலத்தில் ஐன்ஸ்டின் புதிய விளக்கம் தந்தபோதுதான் புரிந்தது, இதைவிட நாம் கடவுளையே நம்பி வாழ்திருக்கலாம் என்று.
அப்படி என்ன புதிதாக ஐன்ஸ்டின் சொன்னார்?
"இல்லை இல்லை, புவி ஈர்க்கவில்லை, வெளிதான் ஆப்பிளை புவியை நோக்கி தள்ளிவிட்டது" என்று ஐன்ஸ்டின் கணிதவியலின் அடிப்படையில் மிகச் சரியாக விளக்கினார், இதனை திட்டவட்டமாகவும் பரிசோதனை ரீதியாகவும் புரிந்துகொள்ள 2016 வரை நாம் காத்திருக்கவேண்டியேற்பட்டது. ஆக நான் துள்ளிக் குதித்தால் வெளி என்னை புவியை நோக்கி தள்ளிவிடும், இதற்கு புவியின் நிறை காரணமாகிறது. புவி என்னை ஈர்த்துக் கொள்ளாது என்பதை காலம் கடந்து நாம் புரிந்திருக்கிறோம்.
ஆக, விஞ்ஞானத்தின் மீது நமக்கு எவ்வளவு அதீத நம்பிக்கை. யார் கண்டார் பல ஆயிரம் வருடங்களின் பின்னர் புதியதொரு சித்தாந்தம் தோன்றி விஞ்ஞானத்தைக்கூட மூடநம்பிக்கையாக நாம் பார்க்கலாம். ஏன் இப்பொழுது கூட 'எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் ஏலியன்ஸ்' இருப்பதாக நீங்கள் நம்பினால் அவர்களால் கூட நமது விஞ்ஞானம் பொய்யான மூட நம்பிக்கையாக பார்க்கப்படலாம்..
அறிவு பூர்வமான சிந்தனைக்கு மதங்கள் அனுமதிப்பதில்லை என்பது கற்பிதம். அது உங்களது சிந்தனையின் மட்டுப்படுத்தல்களும், மதங்களோடு தொடர்பான கட்டுக்கதைகளும், மூட நம்பிக்கைகளுமே நம்மையும் நமது சிந்தனைகளையும் கட்டுப்படுத்துகிறது.
நாம் இங்கு மதம் பற்றி பேசவில்லை, கடவுள் பற்றி பேசுகிறோம். கடவுள் என்ற சித்தாந்தம் தனிமனித சிந்தனை சார்ந்தது.
ஒன்று மட்டும் புரிகிறது, நாம் பகுத்தறிவாளர்கள் என்ற போர்வையில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம். இதே சிந்தனை நமது எதிர்கால சந்ததிக்கும் கடத்தப்பட்டு அவர்களது சிந்தனைகளை நாம் மட்டுப்படுத்த முடியாது.
நீங்கள் கடவுள் பற்றி, கடவுள் உண்டு, அல்லது இல்லை என்ற ஒரு முடிவை எடுத்திருக்கலாம் அது உங்களுடைய சிந்தனை சார்ந்ததே. அதனை எதிர்கால சந்ததிக்கு தினிக்க முடியாது.
கடவுள், விஞ்ஞானம் இப்படி இரண்டு விடயங்கள் இருக்கிறது என்று தெளிவாக காட்டிவிடவேண்டியது நமது கடமை. இதுதான் சரியானது அல்லது இரண்டும் சரியானவை என்பதை அவர்களது பகுத்தறிவு தீர்மானித்து அவர்களாகவே முடிவெடுக்கெட்டும்.
விஞ்ஞான ரீதியாக நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது அதுதான், அடுத்த சந்ததிக்காக நாம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது. ஏனென்றால் நான் முதல் சொன்னது போல They are ultra smart generation.
நாம் அவர்களுக்கு கடத்த நினைக்கும் நற்பண்புகளையும், கட்டுப்பாடுகளையும், ஒழுக்கங்களையும் அவர்களுக்கு ஆன்மீகரீதியாகவே கடத்த முடியும்.
ஆன்மீகமும் ஒரு விஞ்ஞானம் என்பதை மறுக்க முடியாது. இரண்டுக்குமான இடைத்தொடர்புகளை சரியாக புரிந்துகொள்தலே போதுமானது.
மதங்கள் குரோதத்தையும், பிரிவினையையும், வன்முறையையும் தூண்டுகிறது என்று மதங்களை வெறுத்து கடவுளை மறுத்தால் நீங்கள் தலைவலிக்காக தலையனையை மாற்ற நிர்பந்திக்கப்படுகிறீர்கள் என்பது பரிதாபம்.