கடவுள் உண்டா இல்லையா

முன்னுரை:
இயற்கையை ஆதாரமாய்க் கொண்டது இப்புவி.அதன் ஆதியும் அந்தமும் எவரும் அறிகிலர்.எனினும், இயற்கையோடு ஒத்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கையை நோக்கினால் உண்மை புலப்படும்.
அறிவும் அறியாமையும்:
நம் முன்னோர்கள் சொன்னது முழுவதும் மெய்,பொய் என முடிவுக்கு வருவது தவறு.அதற்கு பின்னால் அவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்ப்பதே சரி.
முன்னோர்களும் கடவுளும்:
மொழி,மதம் மனிதன் உருவாக்கியது.கடவுள் என்பதையும் மனிதனே உருவாக்கினான். 'உள்'ளிருக்கும் உயிர் உடலைக் 'கட'ந்து செல்லுதலே கடவுள் என்றனர்.மேலும்,விளக்கின் சுடரானது எல்லா திசைகளிலும் பரந்து விரிந்துள்ளதை போல் கடவுளும் எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்றனர்.மன்னர் காலத்தில் கட்டிய கோயில்களின் சிற்பக் கலைகள் சொல்லும் கடவுள் உண்டு என்பதை.இப்பொழுது கவிதை என சொல்வதையே அக்காலத்தில் புலமை என்றனர்.அரசவைப் புலவர்கள் வாழ்ந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைப் புலவன் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படை சொல்லும் கடவுள் உண்டென. குறிஞ்சி முதல் பாலை வரை ஐநிலங்களில் வாழ்ந்த மக்கள் முருகன் முதல் காளி வரை தத்தம் வழிபடுகடவுளர்களாக இருந்து வந்தன.குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறத்தி வள்ளியை மணந்ததாலும் தமிழ்முனி அகத்தியர் வழி தமிழைத் தந்தாலும் முருகனை தமிழ் கடவுள் என்றனர். தமிழில் செய்யுட்களுள் பிள்ளைத்தமிழ்,உலா,தூது போன்ற நூல்கள் இறைவன் மீதும் பாடியது குறிப்பிடத்தக்கது.இன்று அணுவும் அணுவின் ஆற்றலையும் வேதியியலில் படிக்கிறோம். அன்று,தமிழ் மூதாட்டி ஔவை,"அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்" என்று விநாயகர் அகவலில் இறைவனை குறிப்பிடுகிறார்.
ஆரோக்கியமும் ஆன்மீகமும்:
தமிழ் முனிவன் அகத்தியர் பொதிகை மலைச்சாரலில் இயற்கை மருத்துவம் அறிந்து அதை 12000 வழிமுறைகளாக வகுத்துள்ளார். போகர் எனும் சித்தர் பழநி முருகன் சிலை மூலிகை நவபாசானத்தில் செய்து மலைவாழை பழங்களுடன் கூடிய பஞ்சாமிருதத்தை சிலை மீது தடவி எடுத்து தன்னலமின்றி அனைவருக்கும் பகிர்ந்தார்.எத்தகைய நோய்களும் தீர்ந்தன. அவர் தன்னலம் கருதவில்லை, தன்னுடைய கண்டுபிடிப்பு என்ற உரிமை பெறவில்லை. அதில் ஏதோ சிறிதைக் கற்று அறிவியல் என்று அதை கண்டுபிடித்ததற்கான உரிமை பெற்று சுயநலம் கருதினரோ அன்றே கடவுள் இல்லை என விஞ்ஞானத்தின் வழி ஒலித்தது.இயற்கையை அழிக்கத் தொடங்கினரோ கடவுளை உணரத் தவறினர்.நம் முன்னோர் வழிவழி வந்த இயற்கை வளங்களை நம் பிள்ளைகளுக்கு கொண்டு சேர தவறினோம்.வேற்றுநாட்டவர் கொண்ட பொறாமையாலும் நம்முடைய தன்னலத்தாலும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. அதர்மம் மேலோங்க இறைவன் மனிதனாய் உருவெடுத்தான். சாயீபாபா,ஜீஸஸ்,நபிகள்நாயகம்,புத்தர் என சொல்லிக்கொண்டே போகலாம்.
முடிவுரை:
தமிழ் மூத்தமொழியாயின் கடவுள் இருப்பதைக் கண்டவர்களில் மூத்தோர் நாமே என்று புலனாகிறது.தமிழ் மொழியை மதிப்பவர் யாவரும் கடவுள் இல்லை என்று சொல்லமாட்டார்.நீதிகள் பல கொண்ட திருக்குறளில் வள்ளுவர் கடவுளை வாழ்த்தி தொடங்குவார்.தமிழ் வளர்த்த நம் முன்னோரையும்,தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தையும் மதிப்பாராயின் கடவுள் இல்லை என்று கூறமாட்டார்.நம்மில் இருக்கும் காமம், குரோதம்,மோகம், லோபம்,மதம்,மாச்சரியம் என்பனவற்றை நீக்கினால் கடவுளை உணரலாம்.கடவுள் இருந்தார்,இருக்கின்றார்,என்றும் இருப்பார்!

எழுதியவர் : புவனேஸ்வரன் (7-Nov-17, 5:03 am)
சேர்த்தது : Bhuvaneswaran
பார்வை : 161

சிறந்த கட்டுரைகள்

மேலே