மணப்பெண் வாழ்கை
புது மணப்பெண்ணும் புது இரவும்
வியமாய்
விடைபெறுகிறாள்
மணப்பெண்.
அவளது பர்தாவிற்குள்
முகம் புதைத்தப்படி
மலர்களின் வாசனையோடு இணைந்த
புணர்ச்சியை போதிக்கிறாள்
தமக்கை.
தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரித கதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவை தள்ளி வைக்கலாம் எனவும்
எதுவெல்லாம் ஹராமாக்கப் பட்டதெனவும்
கூடவே புணர்ச்சிக்குப் பிந்தய
சுத்த பத்தங்களையும்
குள்ள உருவத்திற்கு ஏற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்துபோன புணர்ச்சியின்
வெற்று சூத்திரங்களையும்
தனக்குள்ளாக புதைத்தப்படி.
அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு விழுகிற
வார்த்தைகளை
சிறுமியின் அசட்டு தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி
தன் காது தொங்கட்டானில்
சிக்கிமடங்கிய ஆலோசனைகளை
மீதி எடுத்து
அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் விரிக்கிறாள்.
புது மணப்பெண்.