உன்னை பற்றி எழுதுகிறேன்
உன்னைப் பற்றி எழுதுகிறேன்!
கவிதை என்றால் – கற்பனை
கலப்படம் தேவை!
உன்னைப் பற்றி எழுதுவதால்
இதில் கலப்படம் இல்லை!
அதனால் ………..
இது கவிதை இல்லை!
உனக்கு நான் எழுதுகிறேன்!
ஒருவர் இன்னொருவர்க்கு
எழுதினால்தான் கடிதம்!
உனக்கு நான் எழுதுவதால்
இது கடிதம் இல்லை!
உன்னைப் பற்றி எழுதுகிறேன்!
காவியம் என்றால்
முடிவு வேண்டும்!
முடிவே இல்லாத
உன்னைப் பற்றி எழுதுவதால்
இது காவியம் இல்லை!
ஓவியம் என்றால்
வடிவம் வேண்டும்!
எங்கெங்கும் நிறைந்திருக்கும்
உன்னைப் பற்றி எழுதுவதால்
இது ஓவியம் இல்லை!
உன்னைப் பற்றி எழுதுகிறேன்!
எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும்
நம் காதலும் நிஜம்!
அதனால்…….
இது கதை இல்லை!
உன்னைப் பற்றி எழுதுகிறேன்!
புதுமையே வடிவான
உன்னைப் பற்றி எழுதுவதால்
இதில் இலக்கணம் இல்லை!
அடக்கமே உருவான
உன்னைப் பற்றி எழுதுவ்தால்
இதில் தலைக்கனம் இல்லை!
உன்னைப் பற்றி எழுதுகிறேன்!
உனக்குள் இருக்கும் நான்
உன்னைப் பற்றி எழுதுவதால்
கனவோ என கிள்ளிப் பார்க்காதே!
இது கனா இல்லை!
இதில் ஆச்சரியக் குறி இருந்தாலும்
கேள்விக்குறி ஏதுமில்லை!
அதனால்
இது வினா இல்லை!
உன்னைப் பற்றி எழுதுகிறேன்!
உலகத்துக்கு இது
புரியாவிட்டாலும்
உனக்குப் புரிவதால்
இது புதிர் இல்லை!
உன்னைப் பற்றி எழுதுகீறேன்!
ஆனாலும்
இது எதுவுமே இல்லை!
என்னுள் புதைந்து
எல்லாமாகிப் போன
உன்னைப் பற்றி எழுதுவதால்
இதில் வேறெதுவும் இருக்கத்
தேவையுமில்லை!
அதனால் தான் நான்
உன்னப் பற்றி எழுதுகிறேன்!
இது எதுவுமே இல்லை!

